Saturday, August 19, 2017

எங்கள் கோவிலில் ஒரு அதிசயம் .........
*

திடீரென்று பிரிவினைக்கார சபைக்காரரும், கிறித்துவ ஊழியம் செய்பவரும், எங்கள் பகுதியில் குடியிருப்பவரும், பழக ஆரம்பித்ததிலிருந்தே உறவு முறை சொல்லி அழைத்து நட்பு பாராட்டும் நண்பரிடமிருந்து ஒரு வாட்சப் செய்தி வந்தது. எங்கள் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் (கத்தோலிக்க) கோவிலில் ஒரு அதிசயம் என்று செய்தி வந்தது. இரண்டு படங்களுடன் வந்த செய்தி அது.

ஒரு படம் இது தான்: --->
                                               

அதனோடு எங்கள் பங்குத் தந்தை (Parish Priest) கொடுத்த செய்தியும் இருந்தது. செய்தி இது தான்: 


அன்பார்ந்தவர்களே .. 
கிறிஸ்து அரசரின் பெயரால் வாழ்த்துகள்.

நேற்று காலையிலிருந்து எம் பங்கில் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் ஆலயத்தின் பீடப்பகுதியில் நற்கருணைப் பேழை அதற்கு மேல் அமைக்க இருக்கும் கிறிஸ்து அரசர் சுருப இடத்தில் அன்னை மரியாள் கொடிப் பிடித்து  தம் திரு மகனை வரவேற்பது போல நிழல் படிந்திருக்கிறது. 

இது உண்மையிலேயே இறைவன் திருவுளம் என்றால் 
கிறிஸ்து அரசருக்கும், அன்னை மரியாளுக்கும் 
புகழ் உண்டாவதாக !!!!!

என்றும் இறையன்பில்
Fr. மரிய மிக்கேல்
பங்குத் தந்தை, 
கிறிஸ்து அரசர் தேவாலயம்,
விளாங்குடி, மதுரை
பிள்ளையார் பால் குடித்த கதையும்,  மும்பையில் சிலுவையிலிருந்து வந்த ரத்தம் என்று சொன்னதை எடமருக்கு தவறென கண்டு பிடித்ததும் “அவிசுவாசியான” (மூமின்!!) எனக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.  (Sanal Edamaruku is an Indian author and rationalist. He is the founder-president and editor of Rationalist International.)


Sanal Edamaruku  -  Miracle-buster


 ஆனாலும் ஆர்வம் விடுமா?  உடனே வண்டியை எடுத்து விரைந்தேன் கோவிலுக்கு.


 புதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் கோவில். இப்போது வழிபாடுகள் கீழ்த்தளத்தில் - எதிர்காலத்து வண்டி நிறுத்தும் இடம் - நடந்து வருகின்றன. வீட்டுக்கார அம்மா கோவிலுக்குப் போகும் போது அவர்களை கீழே
அனுப்பி விட்டு கோவிலின்மேலே  உள்கட்டுமானத்தை ரசிப்பது வழக்கம். ஞாயிறு கூட சில ஆட்கள் அலங்கார வேலை செய்து கொண்டிருப்பார்கள். நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு நகாசு வேலை செய்யும் அவர்களைப் பார்ப்பது நன்றாக இருக்கும். சின்னச்சின்ன சித்திர வேலைப்பாடுகளைச் செய்து கொண்டிருப்பார்கள். மிக அழகான வேலைப்பாடுகள் உள்ளே இப்போது நடந்து கொண்டிருக்கின்றன். முதல் தடவை பார்த்த போது பிரமித்துப் போனேன்.  என்ன அழகான வேலைப்பாடுகள். Wondering about the symmetry and beauty of the inner decorationsஇன்று உள்ளே போனேனா ... கோவிலில் சின்னக் கூட்டம் இருந்தது. விசேஷ வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.  பூக்கள், மெழுகுவர்த்தி, ஜெபங்கள் என்று மக்கள் ஈடுபாட்டோடு இருந்தனர். 

 ஆலயத்தின் பீடத்தின் நடுவில் புதிய சிமெண்ட் சுவற்றில் கருமையான உருவம் ஒன்று. பெண்ணின் முதுகுப்பக்கம் காண்பிப்பது போல் ஒரு உருவம் தெரிந்தது. வலது கையை சிறிது உயர்த்தி ஏதோ ஒன்றைப் பிடிப்பது போன்ற ஒரு உருவம் தெரிந்தது. மக்கள் பலரும் மலர் வைத்து, மெழுகு திரி ஏற்றி ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். எந்த நம்பிக்கையாளனுக்கும் இதைப் பார்த்ததும் நிச்சயம் பக்தி பொங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.  பார்ப்பதற்கு அப்படியே ஒரு பெண்ணின் உருவம். கையில் எதையோ ஏந்திக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம். மரியாளை நம்புவோருக்கு அது நிச்சயம் ஒரு மரியாளின் உருவம் தான்.

பங்குத் தந்தையும் இருந்தார். (என் புத்தகம் கூட ஒன்று அவரிடம் உண்டு. வீட்டுக்கு ஒரு முறை வந்த போது கொடுத்திருந்தேன். என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். ஆனால் என் புத்தகம் என்ன சொல்கிறது என்பது பற்றி இதுவரை அவருக்குத் தெரியாது.) அவரிடம் படம் எடுக்கலாமா என்று கேட்டேன். எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்..
எங்கள் பங்குத் தந்தை
Fr. மரிய மிக்கேல்

படம் எடுத்ததும் மனசுக்குள் நாமும் ஒரு எடமருக்கு என்ற நினைப்பு வந்தது எனக்கு. 

பீடத்தின் பின்பக்கம் சென்று பார்க்க நினைத்தேன். பீடம் பின்பக்க சுவரிலிருந்து சிறிது முன்னால் தள்ளி இருந்தது . பின் பக்கம் சென்றேன். அது இப்போதைக்கு அங்கு வேலை செய்பவர்களின் தங்கும் இடமாக இருந்தது. பீடத்தில் உருவம் தெரிந்த இடத்திற்கு நேரே பின்னால் சென்று பார்த்தேன். அங்கும் - படத்தில் இருப்பது போல் - ஒரு வட்டமான இடத்தில் சுவற்றில் ஈரம் பாய்ந்திருந்தது. மதுரையில் சமீபத்தில் நல்ல மழையும் பெய்திருந்திருந்தது. அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். நீரின் ஈரம் தெரிந்தது.  அந்த 
இடத்திற்கு மேல் சுவற்றின் உயரத்திலும் சிறிது ஈரம் தெரிந்தது.  மழையின் விளைவு என்று மனதிற்குள் தோன்றியது.அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரை அழைத்து எப்படி அந்தச் சுவற்றில் ஈரம் வந்தது என்று கேட்டேன். அவர் சாரலில் நனைந்திருக்கும் என்றார். ஆனால் மூடிய அறை. அங்கு எப்படி சாரல் அடித்திருக்க முடியும் என்றேன். தெரியவில்லை என்றார். 

அடுத்து அவரிடம் முன் பக்கம் உருவம் தெரிவதும், பின்னால் ஈரம் இருப்பதும் ஒரே சுவரா என்று கேட்டேன். அவர் தனித்தனி சுவர் என்றார். அப்படித் தெரியவில்லையே என்றேன்.  

பீடத்திற்கு நேர் மேலே ஒரு வட்டம் வெளிச்சம் வர திறந்தே இருந்தது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் இறங்கி இப்படி ஒரு உருவம் வர நிச்சயமாக எந்த வழியும் இல்லை. பின்னாலிருந்தும் நீர் கசிந்து வரவும் வழியில்லை.

நேற்றிருந்த அதே அளவில் தான் இன்றும் உருவம் தெரிகிறதாம். ஈரம் காய்ந்திருக்குமே என்ற நினைப்பில் கேட்டேன். நேற்றை விட இன்று தான் அதிகமாகத் தெரிகிறது என்றார் ஒருவர்.

பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி இது சட்டென்று அவிழவில்லை. 

பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விளக்கம் கிடைத்தால் தருகிறேன்.


இப்போதைக்கு கீழே உள்ள இரு நிகழ்வுகள் பற்றியும் படித்துக் கொள்ளுங்கள் - விருப்பமிருந்தால்!

JUST CLICK THEM:

https://www.theguardian.com/world/2012/nov/23/india-blasphemy-jesus-tears

http://dharumi.blogspot.in/2006/04/154.html *Friday, August 18, 2017

சுதந்திர நாள் விழா ........2017
*

பூங்காவில் இன்னும் புதிதாக விடுபட்ட வேலையை முடிக்க தீர்ப்பின் நகலுக்காகக் காத்திருக்கிறோம். எனவே, இந்த ஆண்டு பூங்காவிற்கு வெளியே எமது சுதந்திர நாள் விழா நடந்தேறியது.

இந்த ஆண்டு பூங்காவின் வெளியே ……….
 

Wednesday, July 26, 2017

மாரியாத்தாவின் நற்கொடை

*  மாரியாத்தாவின் நற்கொடை வீட்டு முற்றத்தில்
 கூடை கூடையாக
பொற்காசுகளை வாரி இறைத்த

 எங்கள் வீட்டு வேப்ப மரம், வாழி நீ! *

Monday, July 24, 2017

குழம்பிக் கிடக்கும் காலை நேரத்து மணித்துளிகள்
*


 இந்தக் காலைத் தூக்கத்திற்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைக்கிறேன். முடியவில்லை. அரை குறைத் தூக்கத்தில் எத்தனை நினைவுகள் … எத்தனைக் கற்பனைகள் … எத்தனை அரைக் கனவுகள். போதும் போதும் என்றாகி விட்டது இன்று.

காலையில் எழுந்து நடக்கச் செல்ல வேண்டும் என்ற துணைவியாரின் உத்தரவிற்கு அவ்வளவு எளிதில் கட்டுப்பட முடியவில்லை. ஆனால் சிறிது விளையாட்டு, சிறிது நடை என்பதற்கு ஓரளவு கட்டுப்பட்டு காலை 6 மணிக்கு எழுந்திருக்க முயல்கிறேன். ஆனால் அதற்குத் தடையாக பல மனத் தடைகளை நானே உருவாக்கிக் கொள்கிறேன். உதாரணமாக இன்று எழுந்தேன். முதுகின் கீழ்ப்பக்கம் சிறிதே வலி. அதுவும் படர்ந்த இடத்தில் வலி. அது இதய நோயாளிகளுக்கு அச்சம் கொடுக்கும் வலி. அந்த வலி இருப்பது போல் தோன்றியது. அதையே சாக்காக வைத்துக் கொண்டு படுத்து விட்டேன். ஒவ்வொரு முறையும் இது போல் ஏதாவது ஒரு சாக்கு கிடைக்கும்.


இதையும் மீறி விளையாட்டு + நடைக்குப் பல நாள் சென்றும் விடுகிறேன். இன்று போல் தொடர்ந்து தூங்கும்போது வரும் அனுபவம் அவ்வளவு நன்றாகவும் இல்லை.

இன்று என்ன நடந்தது என்றால் …

 கைப்பேசியிலிருந்து மெல்லிய அழகான ஒரு இசை. எழுந்து அணைத்து விட்டு படுத்து விட்டேன். அம்மாடி …….. என்னென்னவோ மனதுக்குள்ளோ மண்டைக்குள்ளோ ஒரே நாடகங்கள் தான்.

முந்திய இரவு எள்ளுப் பொடி வைத்து தோசை சாப்பிட்டேன். அதற்காகவா இத்தனை நீள நினைப்புகள் எள்ளுப்பொடி மீது வரும். எப்படியோ … இரண்டு கை நிறைய எள்ளுப்பொடி இருக்கிறது. வெறும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஒரு கடைத் தெருவில் நிற்கிறேன். ஒரு carry bag கேட்கிறேன். தடை செய்யப்பட்டதால் ஒன்றிலும் பை கிடைக்கவில்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் நான் வைத்திருந்த பழுப்பு வெண் நீளக் கால்சட்டையை அப்போது அணிந்திருக்கிறேன். அதன் இடது பக்கக் கால் பகுதியை மடித்து அதனுள் எள்ளுப்பொடியைப் போட்டாச்சு. அப்போது Valet parking செய்து சாப்பிட்டு முடித்ததும் நம் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து நம்மிடம் கொடுப்பார்களே அது போல் என் வண்டியை என்னிடம் ஓட்டிக் கொண்டு வந்து ஒருவர் சாவியைக் கொடுக்கிறார். நன்றி சொல்லி டிப்ஸ் கொடுக்கிறேன். ஆனால் வந்த வண்டி என்ன தெரியுமா? என் இரு வண்டிகளும் இல்லாமல் ஒரு பழைய பச்சைக் கலர் டி.வி.எஸ்.50 தகர டப்பா. அதிலும் இரு mud guardகளும் முன் பக்கம் சக்கரத்தோடு ஒட்டி ஒழுங்காக உள்ளன. ஆனால் பின் பக்கம் லூசாக ஆடிக்கொண்டே இருக்கின்றன. அந்த வண்டியில் ஏறி எள்ளுப்பொடி விழாமல் வண்டியை ஓட்டிச் செல்கிறேன். மழை பெய்து சாலையில் தண்ணீர் கட்டிக் கிடக்கிறது.

இப்படி ஒரு கனவு பின்னணியில் ஓடுகிறது. ஆனால் அதனோடு சேர்த்து இன்னொரு கனவும் முன்னணியில் ஓடுகிறது. காலையில் எழுந்ததும் நன்கு நினைவில் இருந்தது. இப்போது மறந்தே போய் விட்டது. நினைவுக்குள் வந்தால் மறுபடி தொடர்கிறேன்.

 இரண்டு கனவுகள் … ஒவ்வொன்றும் ஒவ்வொரு லேயரில் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. குழப்பங்கள் …

ஏழரை எட்டு மணி நேரம் வரை ஒரு கிழடு தூங்கணுமா என்ன? இருந்தாலும் காலையில் எழ முடியவேயில்லையே. இதில் நாலரை மணிக்கு மேல் தூங்கவே முடியாது என்று சொல்லும் என் போன்ற வயதான ஆட்களைப் பார்க்கும் போது அவர்களைப் பார்த்துப் பொறாமை படுவதா, அல்லது பாவப் படுவதா என்ற ஐயம் எழுகிறது.

காலையில் நாலரை … கடவுளே! அந்தப் பொழைப்பு எனக்கு வேணவே வேண்டாம் சாமி! எட்டு மணி வரை கட்டையைக் கட்டிலில்கிடத்தினால் என்ன சந்தோஷம் என்பது அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு எப்படி தெரியப் போகுது!

பேசாமல் கைப்பேசியில் அழைப்பு மணி வந்ததும் எழுந்து விளையாடப் போவது நல்லது என்று இப்போது தோன்றுகிறது.

ஆனால் காலையில் …. தூக்கமே பல முறை விஞ்சுகிறது. *

Friday, June 09, 2017

தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*


 தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் இப்போது பாவம் போல் ஒரு “சாமான்யரை” உட்கார வைத்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தொலைக்காட்சிக்கு நண்பர்களோ? சாமான்யராகக் கூட பேச மாட்டேன் என்கிறார்களே!

மூன்று இலை பற்றி ஒரு விவாதம். ஆளுக்கொன்று, நேரத்திற்கொன்று என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். புகழேந்தி, சம்பத் வந்தால் அந்தப் பக்கம் போவதில் அர்த்தமேயில்லை. இன்னொருவர் நல்ல குண்டு; தியாகத் தாய் பக்கம் நின்று வாதிடுவார். வாந்தி வரும். இது போல் தான் எல்லோரும்.


நமக்கென்ன … என்ன நடக்கிறதென்று தெரியாதா? இன்னும் 4 வருஷத்துக்கு ஓட்டு வாங்கிய உரிமை இருக்கிறது. செத்துப் போன பெண் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பதை வழமையாக்கி தன் காலடி ஆட்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு போய் விட்டார். ராசியான பெண்….. சரியான நேரத்தில் செத்து, ஜெயிலைத் தவிர்த்த லாவண்யம் அழகு.


இதனால் அந்தக் கட்சி ஆட்களில் இரண்டு வகை: ஏற்கெனவே சம்பாதித்த ஆட்கள்; இனியாவது சம்பாதிக்கலாமே என்று கல்லா கட்டி உட்கார்ந்திருக்கும் இன்னொரு செட் ஆட்கள். முதல் வகையறா கையில் இருப்பதைக் காக்க வேண்டுமே என்ற கவலை. இரண்டாவது வகையறா இன்னொரு சான்ஸ் எப்படியாவது வந்து விடாதா என்று கன்னத்தில் கைவத்து உட்கார்ந்திருக்கிறது.

இந்த தொலைக்காட்சி நடத்துனர்கள் ஏதாவது பேசி ஒரு ப்ரேக் செய்தி போட்டு டி ஆர் பி ஏத்துவதை மட்டுமே பிரதானமாக வைத்து ஜவ்வு மிட்டாய் வியாபாரம் செய்கிறார்கள். பிசினசும் நல்லாவே போகுது.

அட …. வர்ர சாமான்யர்களாவது, இங்கு நடப்பது அரசியல் அல்ல; வியாபாரம். யார் மீதி நாளுக்கு கல்லாப்பெட்டியில் உட்கார தான் இந்தப் போட்டி. யாராவது மக்கள் சேவைன்னு தயவு செய்து சொல்லாதீங்க. எல்லா மக்களுக்கும் தெரியும் நீங்கள் காசு பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று. பிறகு எதற்கு வெட்டிப் பேச்சு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தொலைக்காட்சியில் அர்த்தமில்லாத ‘அரட்டைகள்’ மட்டும் நடக்கிறது.


இதெல்லாம் எதற்கு? என்று யாராவது ஒரு சாமான்யர் கேட்டால் நன்றாக இருக்குமோ?*