Wednesday, September 26, 2007

236. கோவில் மண்டபத்தில் தருமி ...

JOURNEY OF MAN - A GENETIC ODYSSEY

பத்து பத்து நிமிடங்களாக ஓடும் 13 பாகங்கள். -u tube documentaries
சமீபத்தில் பார்த்த ACCAPULCO படம் கூட நினைவுக்கு வந்தது.

http://www.youtube.com/watch?v=AT6XsVnuz6o&mode=related&search=


அத்தனையும் பார்த்து முடித்ததும் சில கேள்விகள் மனத்துக்குள்:

* ஆப்ரிக்காவில் உருவான மனித இனம் அங்கிருந்து இடம் பெயர்ந்து உலகின் பல இடங்களுக்கும் சென்றதாக மனிதனின் Y நிறமிகள் (chromosomes) மூலமாக நிறுவப்பட்டுள்ளதை இந்தத் தொடர் மிக அழகாகக் காண்பிக்கிறது.

என் ஐயம்: ஏற்கெனவே கேட்ட கேள்விதான். இந்தக் காலத்தில் கூட தாங்கள் வாழ்ந்த இடத்தை முற்றாக விட்டு விட்டு புது இடம் போக நாம் தயங்குகிறோம். ஆனால் 30 -50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக competition for survival கடுமையாக இல்லாமல் இருந்திருக்கக் கூடிய காலத்தில், fear of unknown இருந்திருக்கக்கூடிய காலத்தில் இடப் பெயர்ச்சி மிகவும் கடினமாக இருந்திருக்கக் கூடிய அந்தக் காலத்தில் எதனால் மனித வர்க்கம் இந்தத் தொடர் இடப் பெயர்ச்சியை மேற்கொண்டிருந்திருக்கும்?

ஆப்ரிக்காவில் ஆரம்பித்த இந்த தொடர் இடப் பெயர்ச்சி இந்தியா வழியாக ஆஸ்த்ரேலியாவுக்குச் சென்றதாக நிறுவப்படுகிறது. அதற்கு ஆதாரமே மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் ஓர் ஊரிலுள்ள விருமாண்டியின் மூலமாகத்தான்! குறும்படத்தின் மூன்றாவது பகுதியில் இதுபற்றி உள்ளது.

ஆக திராவிடரோ, ஆரியரோ எல்லோருமே வந்தேரிகள்தான் போலும். என்ன சிலருக்கு வேண்டுமானால் கொஞ்சம் சீனியாரிட்டி இருக்கலாம்; அவ்வளவே. அதைப் பார்த்ததும் நான் என் பதிவொன்றின் கடைசிப் பகுதியான ஏழாம்பகுதியில் எழுதியதுதான் நினைவுக்கு வந்தது.

இந்த வம்பு வழக்கெல்லாம் வேணாம்னு நினைக்கிறவங்க கூட கட்டாயம் அந்த விருமாண்டி எபிசோட் பாருங்க. அட, அது இல்லாவிட்டாலும் 10-ம் பதிவு மட்டுமாவது பார்க்கணும். ஆர்க்டிக் பகுதியின் உட்பகுதி, சைபீரியாவின் ஒரு மூலை, எங்கும் பனிமூடிய நிலம், -30டிகிரி செல்ஷியஸ், உடன் வாழும் உயிரினங்கள் இரண்டே இரண்டு - lichens அதை மட்டுமே உணவாகக் கொள்ளூம் reindeers - மட்டுமே, சாப்பாடு, உடை, உறையுள், போக்கு வரத்து எல்லாமே அந்த மான்களை வைத்துதான் என்ற நிலை, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் It is an out and out a god forsaken place. The question is how come mankind has not STILL forsaken it? வாழ்வாதாரங்கள் ஏதுமில்லாத அந்த அத்துவான தேசத்தில் ஏன் மனிதர்கள் இயற்கையோடு மல்லுக்கட்டிக் கொண்டு வாழவேண்டும்? 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து அங்கு குடியேறிய அந்த மக்கள் - அவர்களின் பெயர் Chuksi - இன்னும் ஏன் அந்த பனிப்பிரதேசத்தில் கஷ்டப் படணும்? பழகிவிட்டது என்றாலும் தங்களின் அடுத்த தலைமுறையாவது வேறெங்காவது போய் நன்றாக வாழட்டும் (நமது கிராம மக்கள் நினைப்பது போல் ) என்ற நினைவு வராமல் போவதெப்படி? இன்றைய மக்களுக்கு அப்படிப் புது இடங்களுக்குப் போவது கடினமென்றால், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நம் மூதாதையர்களுக்கு மட்டும் அந்த பிரச்சனை இல்லையா? அவர்கள் எப்படி அந்தக் காலத்திலேயே நாடு விட்டு நாடும், கண்டம் விட்டு கண்டமும் மாறி மாறி இடம் பெயர்ந்தார்கள்?
அதுவும் ஏன் இடம் பெயர்ந்தார்கள்?

ஒண்ணும் புரியலை ... புரிந்தவர்கள் விளக்குங்களேன்.

பாவம் தருமி! கோவில் மண்டபத்தில் நின்று கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டு நிற்கிறான்.

Saturday, September 22, 2007

235. பத்மாமகனுக்கு ஜே!

அம்முவாகிய நான் .. இன்னொரு நல்ல தமிழ்ப் படம். கொஞ்சம் மெச்சூர்டு ஆடியன்ஸை மனசில வச்சி எடுத்திருக்கார் பத்மா மகன். அப்புறம் என்ன ..? ஒரு ஃபைட்டு கிடையாது; காமெடிக்குன்னு ஒட்டாத தனி ட்ராக் கிடையாது. இந்த மாதிரி தைரியத்துக்கே அவருக்கு வாழ்த்து சொல்லணும். விலைமாதுகளை வச்சி கதை எடுத்தாலும் கதாநாயகியின் வளர்ப்புத் தாயான ரிட்டையர்ட் விலைமாதுவாக வரும் பாத்திரத்தின் மேல் எந்த வித அருவருப்பும் இல்லாமல் தனி மரியாதைதான் வருது. அந்த மாதிரி இடங்களுக்கு வருபவர்களின் sexual perversions-களையும் கூட ஒரு ஸ்கிப்பிங் கயிறு, ஒரு விஸ்கி பாட்டில், ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் என்பதை வைத்து வேறு விரசமில்லாமல் காண்பித்திருப்பதே பாராட்டுக்குரியது.

கதாநாயகி விளையாட்டாகவே ஒரு சேலஞ்சாகவே கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள். ஆனாலும் அவளின் மனமாற்றங்களை சின்னச் சின்ன விஷயங்களாலேயே காட்டுவது அழகு.

*விபச்சார விடுதிக்கு கைது செய்ய வந்த அதே காவல்துறை அதிகாரி தன் கணவனிடம் காட்டும் மரியாதையையும், அவன் மனைவி என்பதாலேயே தனக்குக் கிடைக்கும் மரியாதை,

*தன்னிடம் காசு கொடுத்துப் படுத்தவன் (அபிஷேக்) இப்போது தன் தலையை ஆதரவாகத் தொட்டு மரியாதையும் அன்போடும் வாழ்த்தும் இடத்தில் தன் ஊடலை மறந்து நெகிழும் நேரம்
- எல்லாமே கதாநாயகியின் மனத்துள் நடக்கும் சின்னச் சின்ன ரசாயன மாற்றங்கள்.

*வழக்கமான தமிழ்ப் பட ரசிகர்களை மடையர்களாக நினைத்து இதற்கெல்லாம் வழக்கமாக வரும் foot notes எதுவுமில்லாமல் கதையை நகர்த்தும் பாங்கு,

*ஒரு நல்ல சிறுகதை போல் நாலைந்து பாத்திரப் படைப்புகளுக்குள் எந்த வித சிக்கல் இல்லாமல் அமைத்திருக்கும் திரைக்கதை.

*பார்த்திபனாவது ஒரு அனுபவப்பட்ட நடிகர். ஆனால் அந்தப் புதுமுக பாரதியையும் இப்படி இயல்பாய் நடிக்க வைத்திருப்பது.

*கதாநாயகனின் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த அழகு செங்கல் வீடு, அதன் பழைய காலத்துக் கதவு, சுற்றி இருக்கும் புல்வெளியும் தோட்டமும் (நிஜ வீடோ, ஆர்ட் டைரக்டரின் கைத்திறனோ?)

*படத்தின் முடிவை நாமே முடித்துக்கொள்ளக் கொடுத்திருக்கும் சுதந்திரம்.

*எல்லாவற்றையும் விட, ஒரு நல்ல டைரக்டர் தன் இருப்பைப் படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்தாத அளவு படத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஒரு விதியாகவே கூறப்படுவதுண்டு. டைரக்டர் படத்தின் ஒவ்வொரு ப்ரேமின் ஓரத்திலும் உட்கார்ந்து கொண்டு தன் இருப்பை நிலைநாட்டவில்லை.

---> இவைகள் அனைத்துக்கும் சேர்த்து, மீண்டும் தலைப்பு: பத்மாமகனுக்கு ஜே!


நெகட்டிவா ஏதாவது சொல்லணும்னா, அம்முவைத் தேடி ராணி வீட்டுக்குப் பார்த்திபன் வரும்போது அந்த வீட்டுக் கதவு பார்த்திபன் வீட்டுக் கதவு மாதிரில்ல தெரிஞ்சுது -அவசரத்துக்கு மாத்தி நிக்க வச்சி எடுத்தாலும் அதையெல்லாம் யாரு பாக்கப் போறாங்கன்னு டைரக்டர் நினச்சிட்டாரோ...

இலக்கிய கழகத்தின் தலைவரின் டப்பிங் வாய்சில் மலையாள வாடை அடிச்சுது. ஒருவேளை ஒரு தமிழ்ப் படத்தில் தெலுங்கு நடிகர் மலையாளப் பாத்திரமாக வந்தால் நல்லதுன்னு நினைச்சிருக்கலாம்!


கதாநாயகி வயசுக்கு வந்ததும் ஒரு பாட்டு படத்தில். கேட்டால் காம்ப்ரமைஸ் என்று பதில் வரலாம். படத்துக்கு வயிறு காமிச்சி நாலஞ்சு பொம்பளைங்க வந்து டான்ஸ் ஆடலைன்னா என்னாகிறது? (அந்தப் பாட்டு வந்ததும் பழைய நினைப்புதான் வந்தது. பதிவுலகத்திற்கு வந்ததும் போட்ட ஒரு பதிவு. துளசி டீச்சர் தவிர யார் கண்ணிலும் படாத அந்தப் பதிவு இந்தப் பதிவுக்கு உறுதுணையா இருக்கும்னு நினைக்கிறேன். அதையும் வாசிச்சி பாருங்க...)

நம்ம தமிழ்ப்படங்களின்உண்மையான ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் பாட்டுக்கள்தான். அவைகள் இல்லாவிட்டால் நிச்சயமா தமிழ்ப்படங்களின் slickness அதிகமாகும்; படங்களின் தரம் நிச்சயமாக உயரும். ஆனால் அதெல்லாம் எப்போ நடக்குமோ..தெரியலை. தமிழ்நாட்டு அரசின் தமிழ்ப்பெயர் வச்சா வரிவிலக்குன்ற மடத்தனமான சட்டம் போய், பாட்டு இல்லாத படங்களுக்கு வரி விலக்குன்னு சொன்னா நிச்சயம் இன்னும் வேகமா தமிழ்ப் படவுலகம் வேகமா வளரும்; முன்னேறும். ஆனா என்ன, அதுக்குப் பிறகு பாட்டெழுதுறவங்க எல்லாம் இப்போ மாதிரி ஆட்சியாளர்களை வானுக்குயர்த்திப் பாட்டெழுத மாட்டார்கள்; தாங்குவார்களா நம் அரசியல்வாதிகள்!

சிவாஜி, போக்கிரி மாதிரி படங்கள் பெரும்பான்மையருக்காக எடுக்கப் பட்டாலும், முனைந்து சிறுபான்மையருக்காக இந்த மாதிரி படங்கள் எடுக்கும் டைரக்டர்களைக் கட்டாயம் பாராட்டியே ஆகணும். இப்போதைக்குச் சமீபத்தில் வந்த 4 படங்களின் டைரக்டர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள்:

மொழி - சொன்ன விஷயத்தின் நேர்த்தி...
அம்முவாகிய நான்...- சொன்ன விஷயமும், சொன்ன நேர்த்தியும்....
வெயில் -சொன்ன விஷயத்தின் நேர்மை
பருத்திவீரன் - சொன்ன விஷயத்தின் பச்சைத்தன்மை rawness

பாராட்டுக்களும் இதே வரிசையில் - என்னப் பொறுத்தவரை. இத்தகைய டைரக்டர்கள் பெருகட்டும்.

காத்திருப்போம்.

இதே கருத்தை ஒட்டிய என் மற்றொரு பதிவு: http://dharumi.blogspot.com/2007/06/221.html