Monday, February 25, 2008

251. கனா காணும் காலங்கள்

ரொம்ப நாளா நினச்சிக்கிட்டு இருந்த விஷயம். தமிழ் சின்னத் திரை வரலாற்றிலேயே ஒரு வித்தியாசமான நீள்தொடர் என்றால் அது நிச்சயமாக கனா காணும் காலங்கள்தான். அதைப் பற்றி எழுதணும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன். அப்புறம் என்னங்க, பயங்கரமான மாமியார் இல்லாத சீரியல் என்றாலே அது வித்தியாசமான விஷயம்தானே! வில்லன், வில்லி, தினமும் நடிப்பவர்களுக்கு ஒரு 'லார்ஜ்' கிளிசரின், பார்ப்பவர்களுக்கு ஒரு 'ஸ்மால்' அளவு கண்ணீர் என்றில்லாமல், அட, அதெல்லாம் விடவும் ஒரு கதாநாயகன், கதாநாயகி என்று கூட இல்லாமல் தமிழில் ஒரு நீள்தொடர் என்றால் "தமிழ் சின்னத் திரை வரலாற்றிலேயே ஒரு வித்தியாசமான நீள்தொடர்" என்பது சரிதானே.

அதெல்லாவற்றையும் விடவும், இதில் வரும் ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர்கள் போலவே பெரும்பாலும் வருவது என்னே ஆறுதல். காப்ரியல் ஒரு ஸ்ட்ரிக்டான ஆசிரியர் என்றால், ஜீவா (ஆஹா! கதையில் அவர் பெயர் மறந்து போச்சே!) ஒரு இளமையான, நல்ல ஆசிரியராக வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீவாவின் பாத்திரப் படைப்பு அழகு; ஒரு நல்ல ஆசிரியரின் அணுகுமுறையை நன்றாக இயக்குனர் காட்டியுள்ளார்; அதை ஜீவா நன்றாகச் செய்து வருகிறார். உடன் வேலை பார்ப்பதாக ஓர் இளம் ஆசிரியைக் காட்டியதும் கொஞ்சம் பயந்தேன். நல்ல வேளை அவர்களுக்குள் காதல் ஏதும் வந்துவிடவில்லை! பி.டி. மாஸ்டரையும், தமிழ் ஆசிரியரையும் கொஞ்சம் நகைச்சுவையாகக் காட்டினாலும் தமிழ்ப்படங்களில் வருவது போல கிறுக்குத்தனம் ஏதுமில்லாமல் இருக்கிறார்கள். நல்ல ஒரு 'கரஸ்' (Correpsondent) - smart, decent and very natural! ராகவியின் குடும்பம், நண்பர்களின் அப்பா- அம்மாவை நண்பர்கள் எல்லோருமே அப்பா-அம்மா என்று கூப்பிடுவது போன்ற நல்ல விஷயங்கள் இளையவர்களுக்குப் போய்ச்சேரும் என்றே நம்புகிறேன்.

பள்ளி மாணவர்கள் நடுவில் இருக்கக் கூடிய வழக்கமான கலகலப்பு, அவர்களின் நட்பின் ஆழங்கள் எல்லாமே அழகாகக் காட்டப் படுகின்றன. அதோடு அந்த வயதில் வரும் பால் ஈர்ப்பு என்பதே ஒரு infatuation என்பதாக இதுவரை நன்கு காட்டிக் கொண்டு வருகிறார் இயக்குனர் ராஜா (ஆமா, அவர் யாரு, என்ன, அப்டின்னு யாருக்காவது தெரியுமா?) அதை இன்னும் நன்றாகக் காட்டிச் செல்வார் என்று நம்புகிறேன். அந்த infatuation-ஆல் எப்படி சில இளம் மாணவர்கள் அலைக்கழிக்கப் படுவார்கள்; அதில் அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் எப்படி அவர்களைச் சுற்றியுள்ளோர்களைத் துன்புறுத்தக் கூடும் என்பதை பச்சை பாத்திரம் மூலம் நன்கு காட்டியுள்ளார். இதே போன்ற காட்சியமைப்புகள் தொடரவேண்டும். சினிமாத்தனம் உள்ளே இதுவரை அதிகமில்லை; இப்படியே செல்ல வேண்டும்.

இதுவரை எடுத்தது கூட பெரிய விஷயமில்லை. இனியும் நட்பின் பெருமை, வந்துபோகக் கூடிய infatuation-லிருந்து அவர்கள் எப்படி விடுபடவேண்டும், இந்த வயதில் படிப்பில் காட்ட வேண்டிய அக்கறை, தாய்தகப்பனுக்கு பிள்ளைகள் ஆற்ற வேண்டியது என்ன என்பது,
எப்படி பள்ளியிறுதி வகுப்புகளில் அவர்கள் பெரும் மதிப்பெண்கள் அவர்கள் வாழ்க்கையையே எப்படி திசை மாற்றும் என்பது - இது போன்ற postive approach இந்த நெடுந்தொடரில் இடம் பெறும் என்று நம்புகிறேன்; ஆசைப் படுகிறேன். ஏனெனில் இளம் வயதினருக்கு இத்தொடர் பிடித்திருப்பதுபோல் தெரிகிறது. நல்ல விஷயங்களை இத்தொடர்மூலம் அவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை இயக்குனர் -இதுவரை நன்கு செய்து வந்துள்ளது போல் - தொடர்ந்து செய்வார் என நம்புகிறேன்; ஆசைப் படுகிறேன்.

குற்றம் கூற வேண்டுமானால் அடிக்கடி வசனங்கள் மூலம் இது ஒரு நீள்தொடர் என்பதை நினைவு படுத்துவது போல், 'இந்த எபிசோடுக்கு இது போதும்' என்பது போன்ற வசனங்களைத் தவிர்க்கலாம். சிரைத்து முற்றிய முகம் உள்ள 'பசங்களை'யும், இடுப்பகன்ற 'சிறுமிகளை'யும் நடிக்கத் தேர்ந்தெடுத்தற்குப் பதில் உண்மையான அந்தந்த வயசுப் பசங்களை அறிமுகப் படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. Harry Potter படத்தில் வரும் பள்ளிப் பசங்களுக்கு அந்த வயசுப் பசங்களைத்தானே நடிக்க வைத்துள்ளார்கள். இங்கும் அதேபோல் சின்ன வயசுப் பசங்களையே எடுத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

பொதுவாகவே இப்போது நம் தமிழ் டி.வி. சேனல்களில் எனக்குப் பிடித்த சில நிகழ்ச்சிகளைத் தருவது விஜய். சன் டிவி புதிய கலைஞர் டிவி மாதிரியும், கலைஞர் டிவி பழைய சன் டிவி மாதிரியும் உள்ளன்; சொந்த சரக்கு என்பதே கிஞ்சித்தும் இல்லை. பாவம்தான்!

Friday, February 22, 2008

250. சுடச் சுட ஆ.வி.

ஞாநி ஆ.வி.யைவிட்டு வெளியேறி குமுதத்தில் எழுத ஆரம்பித்துள்ளது நம் வலைப்பூக்களிலிருந்து அறிந்து கொண்டேன். அவரை வாசிப்பதற்காகக்கூட பல்லாண்டுகளாகத் தொடாமல் இருந்த குமுதத்தை மீண்டும் தொடுவதாக இல்லை. என்னவோ அப்படி ஒரு வெறுப்பு; தமிழகத்தில் விற்பனையில் முதல் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதினாலும் (அது இப்படிப்பட்ட புத்தகமாகவா இருக்க வேண்டும் என்ற நினனப்பாலும்), கோவாலு என்று சிறுகதை வெளியிட்டதாலும், ஜோக்குகளுக்கு சுதாகர் சுதர்ஸன் என்றோவேறு பெயரிலோல் ஒருவர் வரையும் அகோரமான படங்களைப் பார்த்து வெறுத்ததாலும், ஒரு நடிகையின் (பெயர் நினைவிலிருக்கிறது; எதற்கு வேண்டாமே..) மிகக் கீழ்த்தரமான ரசனையில் எடுத்த படத்தை அட்டைப் படமாக போட்டதினாலும், அரசியலில் நிலைப்பாடு ஏதும் இல்லாததாலும் ... இப்படி பல காரணங்கள் குமுதத்தை என் வரையில் தீண்டாத புத்தகமாக நான் மாற்றிக் கொண்டதற்கு.


* * * *


ஆ.வி. இருப்பதில் கொஞ்சம் தேவலை என்ற நினைப்பு. ஆ.வி.ஜோக்குகள் பிடிக்கும். இப்போது கதை வாசிக்கும் ஆசையே வருவதில்லை - வயதோடு தொடர்பான விஷயமோ என்னவோ. விழுந்து விழுந்து வாசித்த காலம் போய், இப்போது கதை வாசிப்பு அநேகமாக நின்று போனதால் மற்றவைகளை மட்டும்தான் வாசித்து வருகிறேன். அதில் ஒன்று ஞாநியின் எழுத்து. இனி அது இல்லை.


* * * *


வலைப்பூக்களில், எரிந்த கட்சி எரியாத கட்சி என்பது போல் ஜெயமோகன் பக்கம் சிலரும், ஆ.வி.யின் பக்கமாகச் சிலரும் என பொரிந்து கொண்டிருக்க, ஆ.வி. தன் பங்குக்கு அந்தப் பக்கத்திற்கு மூன்று இந்தப் பக்கத்திற்கு மூன்று என்று 6 வாசகர்கள் கடிதங்களை வெளியிட்டுள்ளது.
தூற்றலுக்கும் போற்றலுக்கும் சரி பங்கு. பரவாயில்லைதான்.


* * * *


வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்னு தலைவர் முடிவெடுத்திருக்கிறாராம். நல்லது நடந்தா சரி.


* * * *


வலைப்பூ தொடர்பினால் நண்பரான ராஜா சந்திரசேகர் எடுத்த குறும்படம் பற்றி ஆ.வி.யின் வரவேற்பறையில் ஒரு சேதி. சமீபத்தில் மறைந்த ஓவியர் ஆதிமூலத்திற்கு அஞ்சலியாக எடுத்த மூன்று நிமிடமே ஓடும் குறும்படம். இசைமொழி மட்டுமே கொண்டுள்ள, ஏற்கெனவே நான் பார்த்த அவரின் The Lines that pursue us - A short film about Artist Adimoolam என்ற அந்தப் படத்தைப் பார்க்கவும், "கோடுகளின் இசை" என்ற அதோடு இணைந்த கவிதையை வாசிக்கவும் அவரது வலைத்தளத்திற்குச் செல்லவும். படத்திற்கான இணைப்பு வலைத்தள முகப்பிலேயே உள்ளது.


* * * *