Sunday, January 11, 2009

290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 1

உன் ஒரு பதிவைப் படிப்பதே பெருசு; அதில இங்க வந்தா (1)இந்த, (2) இந்த பதிவுகளை முதலில் படிச்சிட்டு வந்தாதான் இந்தப் பதிவின் பொருளடக்கம் புரியும் அப்டின்னு சொன்னா உங்களுக்கு ..

கொடுமை .. கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சி ஆடிக்கிட்டு இருந்துச்சாம் அப்டின்றது மாதிரிதான் தெரியும். இருந்தாலும் என்ன செய்வது. அந்தப் பதிவுகளை முதலில் வாசிச்சிக்கிங்க ...

இந்தப் பதிவு ஜாலிஜம்பரின் பதிவிற்குப் பின்னூட்டமாக ஆரம்பித்து, தனிப் பதிவாகவே இட்டுவிடுவது என்று முடிவு செய்து இட்டுள்ளேன்.


ஜாலிஜம்பர் தன் பதிவில் சொல்லியுள்ள சில பகுதிகளும் என் கருத்துக்களும்:


1. //ஜென்னியை தமிழில் எழுதும் போது சென்னி என எழுத இனி தயக்கமேதும் இல்லை.//


ஜாலி,

1. ஒழுங்கா ஜென்னியை ஜென்னின்னே கூப்பிடுங்க .. எழுதுங்க .. தயவு செய்து. சரியா? உங்கள் பெண்ணாகவே இருந்தாலும் உங்கள் தமிழார்வத்திற்காக மகளின் பெயரைக் கொலை செய்யக்கூடாது. நீங்க சென்னின்னு கூப்பிட்டா அவளது பெயரையும், (என் மகள் பெயரையும் கூட!), ஒரிஜினலா நீங்கள் நினைத்துவைத்த 'அந்த' ஜென்னியின் (மார்க்ஸின் மகள்) பெயரையும் கெடுக்கிறீர்கள். வேண்டாமை'யா அந்தக் கொடுமை .. நல்ல அழகுப் பெயர்!எவ்வளவு ஆசை ஆசையாக வைத்தோம்; அதெல்லாம் இந்தக் கொடுமைக்கா? உங்கள் மகளே வேண்டாமென்றுதான் கூறுவா(ர்க)ள்; உங்கள் இல்லாளும்தான்!

இந்தத் தமிழ்ப்படுத்தும் கொடுமையைத்தானய்யா வேண்டாமென்கிறேன். இதனால் நீங்கள் சாதிப்பது ஏதுமில்லை. 'எண்ணித்துணிக கருமம்' - பெயர் வைப்பதற்கு முன் யோசித்திருக்கலாம். சரி, இங்கே உங்கள் மகள் பெயர், உங்கள் பெயர்; அவைகளை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொல்/ள்வீர்கள். ஆனால்,

அதே மாதிரி ஏன் ஜாலி ஜம்பர் என்று பெயர்வைத்துக் கொண்டார் என்பதே புரியாமல் இருக்கும்போது புதிதாக சாலி சம்பர் என்றால் என்னவென்று புரிந்து கொள்வது? சென்னி என்று நீங்கள் எழுதும்போது ஜென்னி என்ற பெயர்தான் அது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?



2. //மொழியின் இசைவுக்கு மாறான எழுத்துக்களை பயன்படுத்துவது, மொழியைக் கறைப்படுத்துவதாகவே எனக்குத்தெரிகிறது//


இந்த விவாதம் எனக்குப் புரியவில்லை. தமிழ்மேல் காதல் இருப்பது சரிதான்; ஆனால் வெறியாகக்கூடாது. இந்த 'கன்னித்தமிழ்' என்று பெயர் வைத்தது தவறாகப் போய்விட்டது. பெண்ணுக்கு ஏற்றி வைத்த "கற்பை" மொழிக்கும் ஏற்றி வைத்துவிடுகிறீர்கள். நம் மொழியில் இல்லாத ஒரு ஓசை உள்ள சொல்லை உங்கள் (நம்) மொழிக்குக் கொண்டுவரும்போது அந்த ஓசையைத் தரக்கூடிய எழுத்து நம்மிடம் இல்லையெனில், ஏன் அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது?. அதற்கு மறுப்புத் தெரிவிப்பது எதற்கு? நம் மொழியின் கற்புக்கு காப்பா? நிறைய chastitiy belt கதைகள் உண்டு; அவைகள்தான் என் நினைவுக்கு வருகின்றன! ஜென்னி என்றால் உங்கள் மொழி "கறை" பட்டுவிடுவது எப்படி?



3 //பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன்//


முதலாவது உங்களுக்கு ஏற்புடைத்ததாயின் இரண்டாவதற்கும் உடன்பட்டே ஆகவேண்டும். ஏனெனில், வேறு வழி ஏது? ஜார்ஜ் =சார்சு; ஜென்னி=சென்னி; ஸ்டாலின்=சுடாலின் என்பது நிச்சயமாகத் தவறு மட்டுமல்ல; கேலிக்கூத்தான காரியம். ஆகஸ்ட் என்பதை ஆகசுடு என்று எழுதியதைப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது. இல்லை, இது சரிதான் - இதுதான் சரி - என்கிறீர்களா?



4.//அதைப்போலவே தமிழிலும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தும் போது தமிழில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் சிறப்பு என்றும் (நன்னன்) கூறினார்//



நன்னனே கூறினாலும் எனக்கு அது சரியான கருத்தாகத் தெரியவில்லை. அய்யா, ஆகஸ்ட் என்பதை வேறு எப்படி எழுதுவது என்று சொல்லுங்கள். நான் அன்று சொன்னதும் இதுபோன்ற சொற்களைத்தான். அறிவியல் சொற்களில் வரும் ஸ், ஷ்,ஹ் போன்ற வடமொழி எழுத்துக்களுக்கு வேறு தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினால் பொருளே மாறிவிடும் அபாயம் உண்டு என்றேன்; அதற்கு உங்கள் பதில் என்ன?

அவைகளுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் கொண்டு வரலாமென நீங்களோ, டி.பி.சி.டி.யோ பதில் கூறினீர்கள் என்று நினைக்கிறேன். அதற்குரிய என் அன்றைய பதிலை மீண்டும் இங்கு பதிகிறேன்: It is too late now! வேகமாக வளரும் அறிவியலை இப்போது மொழிமாற்றம் செய்து தமிழை வளர்ப்பதைவிடவும் அப்படியே எடுத்துக் கொள்வதே அறிவு பூர்வமான காரியமாக எனக்குத் தோன்றுகிறது.

நாம் இப்போது பசியோடு இருக்கிறோம்; சாப்பிட வேண்டும்; தட்டில் இருப்பதை கரண்டியால் சாப்பிடுவதா இல்லை ஜப்பானிய அதாவது சப்பானிய முறையில் குச்சியால் சாப்பிடுவதா, இல்லை கையால் சாப்பிடுவதா என்ற பட்டிமன்றம் தேவையில்லை.

இந்த இடத்தில் அன்று சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: தாய்மொழிக் கல்விதான் சிறப்பு. அதில் நாமும் நம் முழு நாடுமே மிகவும் பின்தங்கி விட்டோம். நீங்கள் சொல்லும் புதுச்சொற்களைக் கண்டுபிடித்து மொழியை வளர்ப்பதல்ல நம் நோக்கம். நம் மொழி வளர்ந்த மொழி. இனி மற்ற ஓசைகள் இங்கு நுழைவதால் தமிழின் 'கற்பு' ஒன்றும் கெட்டுப் போய்விடாது!



5. //பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் தானே தமிழ் வளரும் என்பது தருமியின் வாதம். பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு; பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன்.//


Throwing the baby out with the bath water என்றொரு ஆங்கிலச் சொலவடை உண்டு. அதுபோல ஒலிகளுக்காக சொற்களை ஒதுக்கும் அபாயம் இதில் இருப்பதாகப் படுகிறது. உதாரணமாக (!), உதாரணம், விஷயம் போன்ற சில வடமொழி எழுத்துக்களுக்கும், risk, interesting போன்ற சில ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களுக்கு நானும் அலைமோதிப் பார்த்து விட்டேன். சான்றாக என்பதோ,பற்றியம் என்பதோ, கண்டம் என்பதோ,interesting - இதற்கு ஈடு ஒன்றும் இல்லை என்னிடம், எனக்கு முழுப் பொருளை அளிப்பதாகத் தோன்றவில்லை. அது என் குறையாகவும் இருக்கலாம்.

பிறமொழிச் சொற்களே வேண்டாம் என்ற "உயந்த" நிலையிலிருந்து சிறிதே கீழே இறங்கி வந்து இப்போது சொற்கள் வரட்டும்; ஒலி வேண்டாமென்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்தப் போக்கில் போனால் இன்னும் சிறிது காலத்தில் ஒலிக்கும் ஓகே சொல்லிவிடுவீர்கள் என்பது புரிகிறது. (கடவுள் மறுப்புக்கு முன்னால் ஒரு வித பயத்தினால், agnostic என்ற ஒரு நிலையைச் சொல்லுவார்கள். எல்லா கடவுள் மறுப்பாளர்களும் இப்படித்தான்; theist -> agnostic -> atheist என்ற பரிணாம வளர்ச்சிதான் இயற்கை. (நான் அதையும் தாண்டி antireligious என்ற "உயர்நிலை'(!)க்கு முன்னேறி விட்டேன் !) அதுபோலவேதான் நீங்கள் சொல்லும் சொற்கள் வரலாம்; ஒலி வேண்டாமென்ற விவாதம்.


பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
......
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை.


(தொல்காப்பியரும், நன்னூலும் பிறமொழி ஒலிகளைக் கடன்வாங்கலாம் என விதி கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதைப் பற்றிய குறிப்பை சின்னாளில் பதிவிடுவேன்.)


ஏற்கெனவே இந்த விவாதம் பதிவுகளில் அங்கங்கே நடந்து வந்திருப்பது இப்போதுதான் என் கண்களில் பட்டன. நல்ல விவாதப் பொருள்தான் போலும். ஆகவே நன்கு தமிழாய்ந்த பதிவர்களை இந்த விவாதத்தை வளர்த்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.



*

Friday, January 09, 2009

289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்.

*

படம் எடுத்த என்னைச் சேர்த்து "கூட்டத்துக்கு"(!?) திரளாக வந்திருந்தவங்க ஐந்து பேர்.(பேரையெல்லாம் அங்கங்க ஆளுக மேல் போட்டாச்சு!) ஆறாவதா உட்கார்ந்திருப்பது மதுர பொவண்டோ!


நெஜமாகவே ஜாலி ஒண்ணும் தூங்கலைங்க...அம்புட்டு ஆழமா மத்தவங்க பேசுனதைக் கேட்டுக்கிட்டு இருக்காருங்க .....







நாங்க இருக்கிறதுக்கு ஒரு மண்டபம் பிடிச்சோம். அது காந்தியடிகள் மகாத்மா ஆன பின் இருந்த குடிசையின் நகலுக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால் அதற்கு மறு பக்கத்தில் அரைகுறையாக இருந்த ஒரு கட்டுமானத்தைப் பார்த்ததும் ஜாலிஜம்பரின் 'மூன்றாவது கண்' துடிக்க ஆரம்பித்துவிட்டது. அதை background-ஆக வைத்து ஒரு படம் எடுத்தேயாகணும்னு வெறியாகி, என்னை மாடலாக்கி விட்டார்.


நான் விட்டுருவேனா? பழிக்குப் பழி வாங்கிட்டேன்.











அது என்ன ராசியோ என்னவோ! எடுத்த படத்தில் பாதிக்கு மேல் மக்கள் கண்கள் சொருகி சொக்கிப் போய் உட்கார்ந்திருப்பதுபோல் விழுந்திருச்சி. அதுக்கு நானென்ன பண்ண முடியும்?
ஒருவேளை bovonto effect-ஆக இருக்குமோ என்னவோ?





எல்லாம் வழக்கம்போல இருந்திச்சி. பதிவர்கூட்டத்துக்கு வாழ்த்துச் சொல்லி வால்பையன் தொலைபேச, அவரிடம் டிபிசிடி கொஞ்சம் ஆள்மாறாட்ட தகிடுதத்தம் செய்ய முயன்றுகொண்டிருந்தார். எந்த குறிப்பிட்ட நோக்கமுமில்லாமல் ஒரு அவியலான மொக்கை அரட்டை நடந்தேறியது. தன் குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக சீனா 6.30க்குக் கிளம்பினார். இருட்டி விட்டது. கொசுத்தொல்லை பின்னூட்டத் தொல்லையைவிட மோசமானது. எழுந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தோம். அது என்னவோ தெரியவில்லை. ஏறக்குறைய புறப்படுவோம் என்று சொல்லி எழுந்து நின்று பேச ஆரம்பித்த பிறகு தான் கொஞ்சம் சூடு பிடித்தது. டிபிசிடி நாம் பதிவுகளை இன்னும் கொஞ்சம் தமிழுணர்வோடு எழுதுவது நலம் என்றார். நல்ல தமிழ், தனித்தமிழ் பதிவுகளில் வரவேண்டுமென்றார். என்னைத்தவிர மற்ற இருவரும் அது சரி என்றார்கள். நான் அதற்கெல்லாம் காலம் நிரம்பவும் கடந்து விட்டது. தமிழில், ஆங்கிலம் போலல்லாமல், பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் அதிகமாகவே விலகி நிற்கின்றன. அதோடு இன்னும் தனித்தமிழ் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல், எல்லா மொழிச் சொற்களையும் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் எழுத வேண்டும் என்றனர் மற்ற மூவரும். கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் முடியாது என்பது என் விவாதமாக இருந்தது. ஸ்டாலினை சுடாலின் என்று சொல்லச் சொல்ல பழகி விடும் என்றார்கள். தேவையா என்றேன் நான்.

இன்னும் அறிவியல் மொழியில் ஸ,ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் முடியாது; அதுபோல மற்றைய மொழிச் சொற்களை அப்படியே வாங்கிக்கொள்ள வேண்டும்; புதிய சொற்களை ஓரளவுக்கே கொண்டுவர முடியும். சான்றாக, 'தானி' என்பது 'ஆட்டோ' என்பதற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் ஆட்டோ ரிக்ஷாவிற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மற்ற ஆங்கிலச்சொற்களில் ஆட்டோ என்பது prefixஆக வரும்போது எப்படிப் பயன்படுத்துவது --- இதெல்லாம் என் வாதத்தில் நான் சொன்னவைகள்.

ஆனால் அவர்கள் முனைப்பாக என் கூற்றுக்களை மறுத்தார்கள். பல சான்றுகள் கூறப்பட்டன, சின்னச் சின்ன நாடுகள் கூட தாய்மொழியைப் பேணும் அளவிற்கு தமிழர்கள் நாம் பேணுவதில்லை. முயன்றால் நாமும் தனித்தமிழிலேயே, ஆங்கிலக் கலப்பின்றி பேசவும் எழுதவும் முடியும் என்பதில் மிக அழுத்தமாக நின்றார்கள்.

இரு வாயில் காப்போர்கள் எங்களைச் சுற்றி வந்தார்கள். நாங்கள் பேசிய விஷயத்தாலோ விடயத்தாலோ என்னவோ எடுத்தவுடன் விரட்டவில்லை. ஆனாலும் அவர்கள் எங்களைச் சுற்றி சுற்றி வந்ததும் நாங்களே இருந்த இடத்தை விட்டு எங்கள் வாகனங்கள் ஊர்திகள் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நகன்றோம். ஆனாலும் பேச்சு சூடாகிக்கொண்டு இருந்தபடியால் சட்டென்று நிறுத்தமுடியாது தொடர்ந்து கொண்டிருந்தோம். பொறுமை இழந்த ஒரு வாயில் காப்போர் எங்களிடம் நேரம் ஆகிவிட்டது. இந்த அளவு யாரையும் உள்ளேயிருக்க விடக்கூடாது என்பதை நாகரீகமாகச் சொன்னார். வேறு வழியில்லாததால் அத்துடன் "கூட்டத்தை" முடித்து ... பிரிந்தோம்.

ஆனாலும் எங்கே டிபிசிடி திட்டுவாரோ என்று பயந்து நான் எப்படி இப்பதிவைப் பேச்சுத்தமிழில் ஆரம்பித்தாலும் அதன்பின் தனித்தமிழில் எழுத முயன்றிருக்கிறேன் என்பதைப் பார்த்தே, பதிவர் கூட்டம் ஒரு அழுத்தமான பாதிப்பை என்மீது ஏற்படுத்தியிருப்பதை நீங்கள் பார்க்க முடியுமே ... இல்லையா? (நெஜமாத்தா'ங்க) (உண்மையாதானுங்க!!)



*