Monday, December 31, 2012

620.. என்னைச் சுற்றிலும் இத்தனை நல்லவர்கள் ... வாழ்க ..

*



சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை சென்று வந்தேன். அதில் ஒரு நாள் எங்கள் காமிராவை ஒரு சாப்பாட்டுக் கடையில் மறந்து வைத்துவிட்டுச் சென்று அதன்பின் நினைவுக்கு வந்து நாங்கள் போக முடியாததால் எங்கள் ஓட்டுனரை அனுப்பி வைத்து காமிராவை மீண்டும் பெற்றோம் என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன்.

 நாங்கள் சுற்றுப் பயணிகள் என்று கடைக்கார இளைஞருக்கு நன்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் காமிராவை எடுத்து வைத்திருந்து ஓட்டுனர் கேட்டதும் அன்போடு கொடுத்தனுப்பியிருந்தார் அந்த இளைஞர். என் இரு நண்பர்கள் இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நடந்தது எனக்கு  மிக்க ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இவ்வளவு நல்ல மனிதர்களா நம்மைச் சுற்றி என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.

*

சரி .. அந்தக் கதை இப்போது மீண்டும் எதற்கு என்று கேட்கிறீர்களா?

சென்ற வாரம் 26-ம் தேதி வீட்டுச் சமையலுக்கு சாமான்கள் வாங்க எங்கள் பகுதியில் வழக்கமாகச் செல்லும் இரு கடைகளுக்கும் சென்று வந்தேன். முதல் கடையில் வாங்கி விட்டு 500 ரூபாய் நோட்டு கொடுத்து, சில்லறை வாங்கி விட்டு, பர்ஸை பையில் வைத்து விட்டு அடுத்த கடைக்குப் போனேன். அடுத்த கடையில் சாமான்கள் வாங்கி விட்டு காசு கொடுக்க நினைத்தால் பர்ஸைக் காணோம். போட்டிருந்தது குட்டைக் கால்சட்டை. இதில் இரு சக்கர வண்டியில் போகும்போது பர்ஸ் கீழே விழ ஏதுவாக இருக்கும் என்பது தெரியும். இருந்தாலும் ஆழமான பைதானே என்று தொலைபேசியோடு சேர்த்து வைத்துவிட்டேன்.

சென்ற வழியில் மூன்று முறை மேலும் கீழுமாக அலைந்தேன். வழியில் இருந்த சில வீடுகள், கடைக்காரர்கள், எங்கு விழுந்திருக்குமோ என்று நினைத்த முச்சந்தியின் முனையில் இருந்த தெரிந்த ஆட்டோக்காரர் என்று B.B.C.  மாதிரி ஒரு வழியாக பெரும் ஒளிபரப்பு செய்து விட்டு வந்தேன். முதல் நாள் நிறைய நம்பிக்கை. பணம் வராவிட்டாலும் பர்ஸில் இருந்த மூன்று ஏ.டி.எம். கார்டுகள், பேன் கார்ட், ஓட்டுனர் உரிமம் ... இப்படி இருந்த சரக்குகள் மட்டுமாவது வந்து விடாதா என்று ஒரு நம்பிக்கை; அடுத்த நாள் இந்த நம்பிக்கை ஒரு ஆசையாக மாறியது. மூன்றாவது நாள் ஆசை ஒரு ஏமாற்றமாக மாறியது. நான்காவது நாள் அநேகமாக இதை மறந்து விட்ட வேளையில் வீட்டுக்கு ஒரு அப்பாவும், அவரது மகளும் வந்தார்கள். அவருக்கு என்னையோ, எனக்கு அவரையோ இதுவரை தெரியாது.

என்னவென்று கேட்டேன். அவர் கேட்ட முதலிரு கேள்விகளிலேயே புரிந்து விட்டது. ’ஆமாங்க ...என் பர்ஸைத் தொலைத்து விட்டேன்.’ என்றேன். பர்ஸை எடுத்துக் கொடுத்தார். பர்ஸில் இருந்த 3982 ரூபாயும் அழகாக என்னைப் பார்த்துச் சிரித்தன. ஏ.டி.எம். கார்டுகள் பையிலிருந்த pouch-லிருந்து கண் சிமிட்டின. மீதிப் பேப்பர்கள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஜனனி என்ற  ஏழாவது படிக்கும்  அந்தச் சின்ன அழகுப் பெண் நான் ஆட்டோக்காரரிடம் சென்னேனே அந்த இடத்தில் கீழே கிடந்து எடுத்திருக்கிறாள். அப்பா ஒரு ஓட்டுனர். அவர் ஊரில் இல்லை. அவருக்குத் தொலைபேசியில் சொல்லியிருக்கிறாள். அவர் என் முகவரி, தொலைபேசி எண் தேடச் சொல்லியிருக்கிறாள். அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் மூன்று நாள் கழித்து வீட்டிற்கு வந்ததும் என் கார்ட், போட்டோ பார்த்து, விசாரித்து வீட்டிற்கு மகளோடு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.

என்னைச் சுற்றி இவ்வளவு நல்லவர்களா ...?ஆச்சரியமும் .. ஆனந்தமும்  என்னை முழுமையாக நிறைத்தன.

எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும் ..... வளர்வோம்

*

எல்லா நல்ல உள்ளங்களுக்கும்.....

 புத்தாண்டு வாழ்த்துகள்





*

பின் குறிப்புகள்:

“உழச்ச காசு .. அதெல்லாம் நம்ம விட்டுப் போகாது ... வந்திரும் ’  - இப்படிச் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இதெல்லாம் ‘நல்வழி’ன்னு ஒரு பாட்ம் இருக்குமே .. அதில் வேணும்னா சேத்துக்கலாம்! நடப்புகளுக்கும் இந்த வேதாந்ததிற்கும் ஏதும் தொடர்பில்லை.

‘நான் அந்தோனியாரிடம் ஜெபம் பண்ணினேன் .. அதான் கிடச்சுது’  -  தங்ஸ் சொன்னது இது. சுத்தமா இதில் நம்பிக்கையில்லை. ஆனா ரூ.100 உண்டியலில் அவங்க போடணுமாம்.  அதையெல்லாம் வேண்டாம்னு சொல்ல முடியுமா??!!

*

Tuesday, December 25, 2012

619. இலங்கைப் பயணம் - 9 - தலதா மாளிக





*



*
தலதா மாளிக .. புத்தரின் புனிதப் பல் ஒன்றை வைத்திருக்கும் புத்தர் கோவில். நீண்ட நெடும் வரலாறு இந்தப் பல்லுக்கு உண்டு. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இப்புனிதப் பொருள் பல இடங்களில் பாதுகாப்பிற்காகவும், மன்னனின் அரண்மனைக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வேறு வேறு இடங்களில்  மாறி மாறி இருந்து வந்துள்ளன.

கோவிலின் பெரும்பகுதி ஒரு பெரிய கட்டிடத்திலும் அதைச் சுற்றிச் சின்னச் சின்ன கட்டிடங்களும் இருந்தன. எங்கும் புத்தர் வீற்றிருந்தார். அந்தப் பெரிய கட்டிடத்தைச் சுற்றி பெரும் அகழி நீரோடு இருந்தது. எம் போன்று சுற்றிப் பார்க்க வருபவர்கள் மிகக் குறைவு. எல்லோரும் பய பக்தியோடு கும்பிட வந்திருந்தார்கள்.





புத்தரின் அழகுச் சிலைகள் 
எங்கும், எல்லா அளவிலும் விரவிக் கிடந்தன.









நிவேதனப் பொருட்கள்  
இந்துக் கோயில்கள் போலவே இங்கும் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.


நீண்ட  நெடும் வழி





நம்மூர் கோவில் தூண்கள் போலவே இருக்கின்றன.




பக்தி மயம்




புத்தர் கோவில்களில் நான் பார்த்த தந்தங்கள் 
நம்ப முடியாத அளவு அவ்வளவு பெரியதாக இருந்தன.













மரத் தூண்களால் ஆன ஒரு மண்டபம். இதில் ஏதும் கலை நிகழ்ச்சிகளுக்காக இருந்திருக்கலாம். ஏனெனில் மண்டபத்தின் ஒரு பக்கத்தின் தரையில் சில தடயங்கள் இருந்தன.






இந்திய ‘நட்பின்’ வெகுமதி!!











மிக அழகான மர மண்டபத்தின் நடுவே புத்தர். 
கருத்த தூண்கள். 
இந்த மண்டபம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.










ஆடும் யானை ...






பாவம் பெரியவர் ... எனக்கும் இசைக்கும் இருக்கும் தூரம் இவருக்கும் இருக்கும் போலும். ஆனால் அவர் தொழிலே பூஜை நேரத்தில் இந்த கொட்டுகளிலிருந்து இசை எழுப்ப வேண்டும் போலும்.  ஆனால் எழுந்தது என்னவோ  ... அதில்  இசையேதுமில்லை .... வெறும் டொம் .. டொம் ..





தலதா மாளிகையின் வெளியே ஒரு தண்ணீர் ஊற்றுக்கு நடுவில் இருந்த இரும்புச் சிலைகள். ஆண்டவர்கள், .. அதாங்க .. பிரித்தானிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டவை.




தலதா மாளிகையின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு ஏரியும் .. 
அதைத் தாண்டிய இடமும். 
கருக்கொண்ட மேகங்களும் ...




பயமில்லாத புறாக்கள் மாளிகையின் வாசலில், 
மக்கள் கூட்டத்தைக் கண்டு கொள்ளாமல் ....




கோவிலை ஒட்டி ஒரு பொருட்காட்சியகம் இருந்தது. படங்கள் எடுக்க அனுமதியில்லை. அரச குடும்பத்தின் வரலாறு காண்பிக்கும் சிலைகள், படங்கள் இருந்தன. அந்தப் படங்களோடு 1983-ல் தமிழர்களால் தாக்குண்டு சிதைந்த சில இடங்களின் படங்களும் இருந்தன. :(


*

Monday, December 24, 2012

618. காணாமல் போன நண்பர்கள் - 10 - இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு







*


அதீதம் டிசம்பர் மாத இரண்டாம் இணைய இதழில் இடம் பெற்ற ?????




 1960 -61 ஆண்டில் .... 

படிப்பு முழுவதுமே வீட்டில் இருந்து படித்தது தான் - ஒரே ஒரு வருஷம் மட்டும் ஹாஸ்டலில் இருந்து படித்தேன். 1960-61 - Pre-University Course.  ’நவீனத்துவம் அப்டின்னா ரொம்ப ரீசன்டான விஷயம்னு அர்த்தம். பிறகு அதில எப்படி பின்நவீனத்துவம்னு ஒண்ணு இருக்கும்?’ அப்டின்னு ஒரு பெரிய எழுத்தாளர் - 1960-80 - கேட்டார். ரொம்ப நியாயமான கேள்வியாக அது இருந்துச்சு. அது மாதிரிதான் இதுவும். இந்த வகுப்பை நடத்துவது Universityதான். ஆனால் அதுக்குப் பேரு மட்டும் Pre-University. எப்படியோ இதுவும் பின் நவீனத்துவம் மாதிரி ஒரு Oxymoron ! 

படிச்சது St. Xavier's College, Palaymkottai. பெரிய ஆளுக எல்லாம் க்ளாஸ்மேட்டாக இருந்திருக்காங்கன்னு பின்னால தெரிஞ்சுது. ரொம்ப green horn ஆக இருந்த ஆண்டுகள் - எல்லா விஷயத்திலும். கால் சட்டை பத்தாமப் போய், நீளக் கால்சட்டை அதிகமாக இல்லாமல், ஈடு கட்ட நாலு முழ வேஷ்டி ஒண்ணு ரெண்டு .. அதையும் கட்டத் தெரியாது; கட்டினாலும் முதல் நாளே கட்டத் தெரியாம கட்டி கால் கிட்ட வேட்டி கிழிந்து விடும்.  என்னத்தையோ போட்டுக்கிட்டு ஒப்பேத்தின ஆண்டு. இதில் ஹாஸ்டல் வாழ்க்கை வேறு, உலகமும் புரியாம, வாழ்க்கையும் பிடிபடாமல் ரொம்ப வித்தியாசமா இருந்த வருஷம். இதில் புதிதாக  ஹாஸ்டல் வாழ்க்கை.வீட்டோடும் ரொம்ப ஒட்டு இல்லாமல் இருந்த வருஷம். என்னை நானே நினச்சிப் பார்த்தா ரொம்ப பாவமான பையனாக இருந்திருக்கிறேன். 

Britto Hostel - இது கத்தோலிக்க கிறித்துவ மாணவர்களுக்கானது. அதனால் காசு கொஞ்சம் கம்மி. அதோடு சாப்பாடு சமாச்சாரமும் கொஞ்சம் கம்மின்னு சொல்லுவாங்க. ஆனாலும் மொதல் மொதல்ல வீட்டை விட்டு வெளியே சாப்பிடுற அனுபவம். ரொம்ப வித்தியாசமா இருந்தது. அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலையில் ஊத்தப்பம் போடுவாங்க. ஆளுக்கு மூணோ .. நாலோ போடுவாங்க. அதைத்  தட்டில் வச்சதும் நடுவிலே ஒரு குழி போடுவோம். அதில தண்ணியா ஒரு கறிக்குழம்பு ஊத்துவாங்க. எப்டின்னே தெரியாது. கறித்துண்டுகள் கடுகு சைஸில் அப்பப்போ கையிலேயோ வாயிலேயோ தட்டுப் படும்.ஆனால் எங்க எல்லோருக்கும் அது ரொம்ப பிடிக்கும். இன்னும் ஞாபகத்தில் இருக்குன்னா .. பார்த்துக்குங்களேன்!

மொதல்ல கொஞ்ச நாளைக்கு போடுற சாப்பாடு பத்தாது. ஆனால் சீனியர் அண்ணன்கள் சாப்பிட முடியாம மிச்சம் வைப்பாங்க. அதில் அப்படியே ஐக்கியமாகி சில P.U.C. பசங்க அந்த அண்ணன்மார்களோடு சாப்பிட சேர்ந்து போவோம். பூரி வச்சா அதில ஒண்ணு .. ரெண்டு  நம்ம ப்ளேட்டுக்கு வந்திரும். அதே மாதிரி இட்லிலேயும் பங்கு வந்திரும். ஆனால் இதெல்லாம் அரைப் பரிட்சை வரைதான் .. அதுக்குப் பிறகு அவங்க வைக்கிறதே போதும்னு எங்களுக்கும் ஆயிடும்.   மீன் குழம்புன்னு ஒண்ணு வைப்பாங்க; வீட்ல அந்த மாதிரி மீன் சாப்பிட்டதில்லை. அதாவது ஒரே ஒரு துண்டு மீன் வைப்பாங்க. அதில் முள் .. கிள் எதுவும் இருக்காது. என்ன மீனோ.. அது மாதிரி முள் இல்லாத மீன் வீட்ல சாப்பிட்டதேயில்லை. சரி .. சாப்பாடு பத்தி இப்ப என்ன .. நம்ம கதைக்குப் போவோம் ...

கழிவறை வரிசையாக இருக்கும். ‘தம்’மடிக்கிற ஆளுகளுக்குன்னு சில அறைகள் உண்டு. தீக்குச்சி .. தீப்பெட்டி சைடு எல்லாம் அங்கங்க இருக்கும். ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போனேன். இழுக்கிற சுகத்தை விட வார்டன் சாமியார்  வந்து பார்த்திருவாரோன்ற பயம் ரொம்ப. அதினால் அங்கே தம் அடிக்கிறதை விட்டாச்சு. குளிக்கிறது எல்லாம் வெளியில ஒரு பெரிய தொட்டி இருக்கும். எப்போதும் தண்ணி நிறைஞ்சிருக்கும். மொத ரெண்டு போணி தண்ணி ஊத்துறது எல்லாமே ஒரே ஸ்டைல் தான். டொம்முன்னு பெரிய சத்தத்தோடு போணியை அடித்து குளிர்ந்த நீரை மேல ஊத்திக்குவோம்.

நண்பர்கள் அப்டின்னும் ரொம்ப கொஞ்ச பேருதான். ஹாஸ்டலில் தேவராஜ் அப்டின்னு ஒருத்தன். என் வகுப்பு கிடையாது. ஆனால் என் விடுதியறையிலிருந்து நாலைந்து அறை தாண்டி இருப்பான். விளையாட்டு நேரத்தில் ஒண்ணா இருப்போம். ரிங் டென்னிஸ் சேர்ந்து விளையாடுவோம்.  சாப்பிடச் செல்லும் போது சேர்ந்து போகும் நண்பன். ஒரு விடுமுறைக்கு வீட்டுக்கு போய்ட்டு வந்த அவன் ஒருநோட்டைக் குடுத்துப் படி அப்டின்னான். ஒரு கதை எழுதியிருந்தான். ஒரே காதல் கதை தான். நம்ம சினிமாவும் கதைகளும் காதலைத் தாண்டி எப்போதோன் வெளிய போயிருக்கு ...? வாசிச்சேன். நல்லா புரிஞ்சுது. பய எதுலேயோ உழுந்துட்டான். சொந்தக்காரப் பொண்ணு. ஆனாலும் எங்க பழக்கத்தில அதையெல்லாம் அவன்கிட்ட நான் கேட்கவில்லை. ஆனா கதை வாசித்ததும் அதைப் பற்றிக் கேட்டான்.

அவன் சாப்பாடு சாப்பிட உட்கார அந்தப் பெண் பரிமாறுகிறாள். கழுத்துச் சங்கிலி அவன் கண்முன்னால் ஆடுகிறது. ... இப்படியெல்லாம் போகும். நான் அந்தக் கதையைத் தொடர்ந்து .. அந்தச் சங்கிலி ..  இன்ன பிற  .. சில ‘உணர்ச்சி பூர்வமான’ after thoughts பத்திச் சொன்னேன். அது அவனுக்கு ரொம்ப பிடிச்சிது. என் கதையைத் தொடர்ந்து அதை எழுதுன்னான். நானும் எழுதினேன். அதை வாங்கிட்டு போய், அதுவும் அடுத்த லீவுக்கு வீட்டுக்குப் போய்ட்டு வந்ததும், மறுபடி அவன் எழுதி என்னிடம் கொடுக்க ... நான் தொடர ... மறுபடி அவன் எழுத ... ஆகா .. அப்டி இப்டின்னு ரெண்டு குயர் நோட்டு ஒண்ணு நிறம்புறது மாதிரி ஒரு ‘மகா காவியம்’ ரெண்டு பேரும் சேர்ந்து படைச்சோம்.  ஒரே ஒரு வாசகன் எங்களுக்கு. தேவராஜின் ரூம் மேட். அவனும் ஆஹா .. ஓஹோன்னான். என்னிடம் தனியா அவன், ‘இந்தப் பய தேவராஜ் காதல்ல உழுந்துட்டான் .. அதைப் பத்தி எழுதுறான் ... நீ எப்டிடா.. எதிலயும் உழாமலே வெளுத்துக் கட்டுற?’ அப்டின்னான். 

இப்படிப்பட்ட ஒரு ’மஹா காவிய’த்தை யார் வெச்சுக்கிறதுன்னு ஒரு பேச்சு வந்தது. தேவராஜ் அது தனக்கு வேணும்னுட்டான். எழுத ஆரம்பித்ததும் அவன். முக்கிய சரக்கெல்லாம் அவனுடையது. நான் எப்படி அதைக் கேட்க முடியும்? இந்தக் காலம் மாதிரி இருந்திருந்தா at least  ஒரு photocopy  எடுத்திருப்போம். அதெல்லாம் அந்தக் காலத்தில் ஏது. அதனால் நான் படைத்த ஒரு மஹா காவியத்தின் நகல் கூட என்னிடம் இல்லாது போயிற்று. நண்பனின் தொடர்பும் இல்லாது போயிற்று.

ச்சே .. தமிழ் இலக்கிய உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு ...?! 

மலரும் ஒரு எழுத்தாளன் அங்கே செத்து விட்டான் என்பது தான் ஒரு மாபெரும் சோகம்.  :(


அப்போ நம்ம படைப்பெல்லாம் அப்படி ஆச்சுன்னா ...
 

                                                 ......  இப்போ நம்ம நிலைமை இப்படி ஆகிப் போச்சு !!!


*


*

Friday, December 21, 2012

617. இலங்கைப் பயணம் - 8 - கண்டதும் கேட்டதும் (2)

*


*





 * படிப்பு எல்லா நிலைகளிலும் இலவசமே!

*  இரு வகை educational streams. ஒன்று London A,O .. levels & Sri Lanka A, O .. levels.

*  மொத்தம் 14 பல்கலைக் கழகங்கள் இதுவரை இருந்து வந்துள்ளன. எல்லாமே அரசின் உதவியோடு நடத்தப்படும் அரசுப் பல்கலைக் கழகங்கள்தான்.

*  ஆனால் புதியதாக ஒரு தனியார் பல்கலைக் கழகம் வந்துள்ளது. * தனியார் நட்த்தும் கல்விச்சாலைகளை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். அதனால் பலவகைக் கல்வித் துறைகள் வர வாய்ப்புண்டு.

*  அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காதவர்களும் கல்வி பயிலும் வாய்ப்புகள் இதனால் உருவாகும்.

*  ஏனெனில் இதுவரை உயர்கல்விக்காக சிங்கை, மலேசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு மாணவர்கள் இதுவரை பயணப்படுவது தவிர்க்கப்படுமே.

*  நான்கு மாதங்களாக அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் நடந்து, நாங்கள் போகும்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது.

*  அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களின் இப்போதைய சம்பளம் பங்களாதேஷ் நாட்டின் கல்லூரி ஆசிரியர்களோடு ஒத்துள்ளது. அவர்கள் இந்தியக் கல்லூரி ஆசிரியர்களின் சம்பளத்தை ஒட்டிக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

*  அவர்கள் போராட்டத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் கல்விக்கு அரசு அளிக்கும் விகிதாச்சரம். முன்பு கல்விக்காக 3% செலவளித்த்து. அந்த தொகை அப்படியே நின்று போய், நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் இப்போது கல்விக்கான தொகை வெறும் 1.6% ஆகக் குறைந்து விட்டது. கல்விக்கான இந்தத் தொகையை அதிகரிக்கவும் இந்தப் போராட்டம் நடந்து வந்துள்ளது.

*  போராட்டங்கள் முடிந்து விட்டன. ஆனால் அவர்கள் கொள்கைகள், கோரிக்கைகள் என்னாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. போராடியவர்களுக்கும் தான் !




*  இரு சக்கரத்தில் செல்லும் எல்லோரும் – பின்னால் உட்கார்ந்திருப்பவரும் – தலைக் கவசம் அணிந்து செல்கிறார்கள்.

*  ஆளில்லா estate பகுதிகளில் கூட எல்லோரும் தலைக்கவசத்தோடு செல்வதை ஆச்சரியமாகப் பார்த்தேன். (நம்ம ஊர் மக்களுக்கு மட்டும் இப்படி சட்ட்த்தை மதிக்கணும் அப்டின்ற நினைப்பே எப்போதும் வர்ரதேயில்லை? இதைப் போன்ற நல்ல பல போக்குவரத்து விஷயங்களை அங்கே பார்த்தேன்.)
பார்த்ததும் ‘பக்’கென்றாகி விட்டது! கண்ணுக்குமா FIGHT??




*  கார் ஓட்டியும், பக்கத்தில் இருப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும். டாக்ஸியாக இருந்தாலும் அது கட்டாயமே! (அது ஏன் சிங்கையிலும் இங்கேயும் டாக்ஸியை ’டெக்ஸி’ என்கிறார்கள்?)

*  TRAFFIC SENSE IS TERRIFIC ! நம்ம ஊர் மாதிரி முட்டி மோதி முன்னால போணும்ன்னு யாரும் நினைக்கிறதில்லை. நியாயமாக காத்து நிற்க வேண்டியவர்கள் பொறுமையாகக் காத்து நிற்கிறார்கள்.


சின்ன சாலைகள் தான். ஆனால் ஒழுங்கான போக்குவரத்து.
*  HORN SOUNDS ARE SO RARE! WHAT A PLEASANT THING !! தேவையில்லாமல் என்னிடம் இருக்கு HORN .. அத நான்பாட்டுக்கு அடிச்சிக்கிட்டே போவேன் என்கிற நம்ம ஊர் மிருகத்தனம் அங்கே இல்லை.

* திட்டுவதற்கு மட்டுமே HORN அடிக்கிறார்கள். சிங்கை, அமெரிக்கா மாதிரி இருக்கு TRAFFIC. எப்படி அந்த ஊர் மக்கள் எல்லாம் இப்படி சட்டத்தை மதிக்கிறார்கள்?! நம்மை மாதிரி அவர்கள் ‘சுதந்திர மக்கள்’ இல்லை போலும்!






* கார்களின் முன் பக்க எண் வெள்ளை வண்ணத்திலும் அதே வண்டியில் பின் பக்கம் மஞ்சள் நிறத்திலும் இருந்தன. ஏனென்று Neil-க்கும் தெரியவில்லை. விவேக் ஜோக் நினைவுக்கு வந்தது - இன்னும் நாலைந்து போர்டுகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் !!

* கழுத்தை வெட்டிப் போட்டது போல் கோணிக்கொண்டு கைப்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் ஈனத்தனம் சுத்தமாக அங்கே நான் காணவில்லை.

* நம்ம காவல் துறை என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை! நம் மக்களும் அப்படி ... நம் காவல் துறையும் அப்படி ... 

* நம் நாட்டு நெடுஞ்சாலைகள் பற்றி அவர்களுக்கு பிரமிப்பு; பொறாமை. இங்கே ஒரே ஒரு நெடுஞ்சாலை மட்டும் - கொழும்பிலிருந்து அம்மன் தொட்டை என்ற ‘சின்ன ஊருக்கு’ முதல் நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது.

* சைனாவினால் போடப்பட்ட சாலை. ஒரு நல்ல விஷயம். நம் ஊரில் சின்ன ஊர்களுக்கு நடுவில் இந்தச் சாலை போகும்; நடு நடுவே குறுக்குச் சாலைகள் வரும். இங்கே அப்படியேதும் இல்லை. நெடுஞ்சாலைக்கருகில் உள்ள ஊர்கள் வழியே இச்சாலை செல்வதில்லை. அந்த சின்ன ஊர்களுக்கு என்று தனிப்பாலம். அங்கிருந்து தடாலென நம் ஊரில் மாதிரி குறுக்கே யாரும் வர முடியாது நெடுஞ்சாலையில் அந்தப் பயம் இன்றி நேரே ஓட்டிச் செல்ல்லாம். மலைகளுக்கு நடுவே நெடுஞ்சாலை. நெடுஞ்சாலையில் ஒரு ‘இரும்புப் பறவை’
நெடுஞ்சாலையில் ஓர்  ‘இரும்புப் பறவை’!


*  அம்மன் தொட்டைஎன்ற அந்த சின்ன ஊர் ராஜ பக்சே பிறந்த ஊராம். அந்த ஊருக்கு முக்கியத்துவம் கொடுக்க நாட்டின் முதல் நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து நேராக அந்த ஊருக்குச் செல்கின்றது.

* இது மட்டுமின்றி அந்த ஊரில் ஒரு துறைமுகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது – எந்த வித பயனுமின்றி! துறைமுகம் கட்டிய பிறகு சும்மா பெயர் சொல்வதற்காக இதுவரை ஒரே ஒரு கப்பல் மட்டும் அங்கு சென்றதாம்.

* துறைமுகம் மட்டுமல்லாது தேவையில்லாமல் ஒரு பல்நாட்டு விமானத் தளம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

*  நாட்டுக்கு வரும் மக்களிடம் பணத்தை அரசு உறிஞ்சி எடுத்து விடுகிறது. பயணிகள் வருகை தரும் இடங்களில் எல்லாம் வைக்கப்படும் உரிமைச் சீட்டுகள் மிக அதிகமாகத் தெரிந்தது – அதுவும் SAARC நாடுகள் என்ற முறையில் இந்தியர்களுக்குக் குறைந்த கட்டணம் ..! அதுவே இப்படி!

 * கொழும்புவில் உள்ல பூங்காவிற்குச் செல்ல உள்ளூர் மக்களுக்கு அனுமதிச் சீட்டு 50 ரூபாய்; நமக்கு 1100 !

* பின்ன விளை என்ற இட்த்தில் யானைகளைப் பார்க்க உள்ளூர் மக்களுக்கு அனுமதிக் கட்டணு தேவையில்லை; நமக்கு 500 ரூபாய்.

*  புல நெருவ என்ற இடத்தில் உள்ள பழைய கோட்டை கொத்தளங்களைப் பார்க்க $ 12.50!

* ஆனால் எல்லா இடங்களும் அவ்வளவு அழகாக சுத்தமாக வைத்துள்ளார்கள். அதற்கே கொடுக்கலாம் காசு!



*  எங்களது காரோட்டியின் பெயர் Neil. சிங்களவர். தமிழும் ஆங்கிலமும் தெரியும். இனிய நண்பரானார்.

*  அவருக்கு இரண்டு பையன்களாம். இரண்டு பேரும் நம்ம விஜயின் ரசிகர்களாம். அவர்களுக்குத் தமிழ் தெரியாது.

*  சிங்களப் படங்கள் வருஷத்து நாலைந்த் வருமாம்.

*  Neil புத்தமதத்தினராக இருந்து இப்போது கிறித்துவராகி விட்டாராம். ஏன் என்று கேட்டேன். சிரித்தார்! ஆனாலும் இப்போது இரண்டு கோவிலுக்கும் போவாராம்.



*  கொழும்பில் வெள்ளவத்தை போனோம். தமிழர்கள் இருக்கும் பகுதி. போனதும் அது புரிந்தது! ஒரு இந்துக் கோவிலுக்கு அருகில் ஒரு கடை. பாட்டு வச்ச சத்தம் காதே கிழிந்த்து. கடைக்காரப் பையன் பெய்ர் விஜய். ஏம்’பா இப்டி? என்றேன், சிரித்துக் கொண்டான்.

*  கடைக்கு முன்னால் எச்சில் துப்பி அவலட்சணமாகத் தெரிந்தது. விஜயிடம் சொல்லிட்டு வந்தேன்! வேறெங்கும் இதுபோல் அவலட்சணத்தைப் பார்க்கவில்லை.

*  ஊரில் flex board எங்கும் காணவில்லை.

 * சுவரெல்லாம் போஸ்டர்கள் ஒட்டவில்லை.

*  ஒரு சந்தோஷம். நம்ம TASMAC கடை மாதிரி அங்கேயுள்ள கடைகளிலும் கதவைப் பூட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக ‘ஜாக்கிரதையாக’ வியாபாரம் செய்கிறார்கள்.




*  பள்ளிக்கூட நேரத்தில் பள்ளிக்கருகே நிறைய ZEBRA கோடுகள். ஒவ்வொரு கோட்டுக்கருகிலும் ஒரு காவல்துறையினர் நிற்கிறார்.

*  பல காவல்துறையினரைப் பார்த்தேன். ஆனால்நான் பார்த்த காவல துறையினர் யாருக்கும் தொப்பை ஏதுமில்லை.

*  சிங்கள – தமிழ்ப் பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட போது, இப்போது சிங்கள-தமிழ்ப் பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்றார் ஒரு சிங்கள நண்பர்.

*  ஒரு நண்பர் வீட்டில் மதியச் சாப்பாடு. கேரளா போல் சிகப்பரிசி .. மீன் குழம்பு; அட .. அதையெல்லாம் விட சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மண் சட்டியில் கெட்ட்ட்ட்டியான தயிர். ஐஸ்க்ரீமில் தேன் ஊற்றிச் சாப்பிடுவது மாதிரி, இந்த தயிரின் மீது பதனியைக் (தெலிஜ) கொதித்து காய்ந்து கருப்பட்டியாகும் முன் அதன் திரவ ரூபத்தில் எடுக்கும் கூப்பனியை (பெனி) ஊற்றி சாப்பிடணும் – desserts!

*  என் நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை.

*  என் பால்ய கால நினைவுகளோடு (அதைப் பற்றி பின்னால் எழுதணும்!) நான் ஒரு வெட்டு வெட்டினேன்.


*  ‘பெற்றோல்’ நம்ம ஊர் விலைதான். லிட்டருக்கு 149 இலங்கை ரூபாய்.

*  சாலைகளில் ஸ்பீட் லிமிட் உண்டு. சாதா சாலைகளில் 70கிமீ. நெடுஞ்சாலைகளில் 100 கிமீ. வழக்கம் போலவே எல்லா சாலை விதிகள் போலவே இதுவும் சரியாக்க் கடைப்பிடிக்கப் படுகிறது.

*  புலநெருவ என்னும் இடத்தில் உள்ள பழைய வரலாற்றுச் சின்ன்ங்களைப் பார்த்து விட்டு வெளியே ஒரு கடையில் மதிய உணவு உண்டோம். விட்டிருந்த மழை மீண்டும் பலமாகத் தொடர்ந்தது. காரை கடைக்கு முன் கொண்டு வரச் சொல்லி வேகமாக விரைந்தோடி ஏறி விரைந்தோம். அடுத்த இடம் டம்புள்ள. அந்த இடத்திற்கு நெருங்கியதும் காமிராக்களை எடுத்து தயாராக ஆரம்பித்தோம். இரண்டு Digital காமிராக்கள் பத்திரமாக இருந்தன. point & shoot காமிரா காணோம். யோசித்ததும் சாப்பாட்டுக் கடையிலேயே வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. பதினேழாயிரம் போச்சுன்னு நான் கணக்குப் போட்டேன்.

 நாங்கள் டம்புள்ளயில் இறங்கி கொண்டு Neil-யை திரும்ப அந்தக் கடைக்கு அனுப்பினோம். தனியாகப் போன்வர் கொஞ்சம் காரை விரட்டியிருக்கிறார். 120-ல் போனவர் காவல்துறைக்குத் த்ண்டம் கட்டி, கடைக்குப் போய் கேட்டிருக்கிறார். காமிரா அங்கே அவர்களிடம் இருந்தது. இரண்டு படங்கள் தங்களையே படம் எடுத்திருக்கிறார்கள். காமிரா திரும்பி வந்தது.
காமிராவைப் பத்திரமாக எடுத்து வைத்திருந்த இளைஞர்.





* எனக்கு நிச்சயமாக அது திரும்பக் கிடைக்குமென்று நம்பிக்கையேயில்லை. நண்பர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. நண்பர்கள் மாதிரியே அந்தக் கடைக்கார இளைஞன் நல்லவனாயிருந்திருக்கிறார். நண்பர்கள் நிச்சயமாக அந்த இளைஞன் இட்த்தில் இருந்திருந்தால் அவரைப் போல்வே திரும்பக் கொடுத்திருபார்கள். நானாக இருந்திருந்தால் ... கொஞ்சம் சந்தேகம்தான் ..!

* சும்மா சொல்லக்கூடாது .. புத்தர் நல்லாவே உதவி செய்து விட்டார் ..!

*  Neil கடையிலிருந்தே காமிரா கிடைத்ததைச் சொல்லியிருந்தால் அந்த இளைஞருக்கு ஒரு நன்றி மனதாரச் சொல்லியிருக்கலாம். ஒரு சின்ன அன்பளிப்பு கொடுத்திருக்கலாம். முடியாது போனது பற்றி வருத்தம் தான்.



*
*

Tuesday, December 18, 2012

616. இலங்கைப் பயணம் - 7 - பூங்காவில் orchids (2)




*





*



பேராதெனிய அரச தாவரவியல் பூங்கா 
ண்டி  





SOME VERY LOVELY  

ORCHIDS











































 





 
*
படம் எடுக்கத்தான் முடிந்தது. அங்கிருந்த மலர்களின் பெயர்களை எழுதிக்கொள்ள மனமில்லை. நாம் என்ன பெரிய botanical taxonomistகளா என்ன ..?!


615. இலங்கைப் பயணம் - 6 - கண்டி பூங்கா ..1







*

பேராதெனிய அரச தாவரவியல்

1831-ம்ம் வருடம் பிரித்தானியரால் 142 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட அழகிய பூங்கா இது.  30 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஏனைய சுற்றுலா இடங்களைப் போலவே இதுவும் அழகாக பேணப்பட்டு வருகிறது


*
சிறிது மழை எங்களை மருட்டியது. புகலிடம் ஒரு சின்ன தேநீர் விடுதி. 


*
பாதிப் பூங்காவிலேயே எனக்குப் போதும் என்றாகி விட்டது.  பூங்காவில் நுழைந்ததும் orchids  பகுதியில் எடுத்த சிரத்தையில் கால்கள் ஒத்துழைக்க மறுத்து விட்டன.

*

புதுமணத் தம்பதிகள் சிலரைப் பார்த்தோம். திருமணம் முடிந்து படம் எடுக்க தடபுடலாக ஜோடிகளும், புகைப்படக்காரர்களும் இறங்கி விடுவார்கள் போலும். 


*
இவ்வளவு பகுதியை எப்படி வளைத்து சுற்றுவது என்று மலைப்பு எனக்கு.

*


*




*


*




*















*











*







*






*
*

அடுத்த பதிவு வெறும் orchids மலர்கள் மட்டும் ....

*









*