Monday, April 15, 2013

651. காணாமல் போன நண்பர்கள் -17 - அப்பாவி ஆறுமுகம் போராளியான கதை.






*

அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறுபதிப்பு ....


*


பூண்டிக் கல்லூரியில் நான்காண்டுகள் விரைவாக நழுவிச் சென்றன. வித்தியாசமான வாழ்க்கை. பொதுவாகக் கல்லூரிகளில் துறை சார்ந்த நட்பே அதிகமாக இருக்கும். ஆனால் இக்கல்லூரியில் நான் வேலை பார்க்கும்போது - 1966-70 - உறவுகள் வேறுமாதிரியாக மாறியிருக்கும். காலையும் மாலையும் தஞ்சையிலிருந்து தான் பெரும்பாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் வருவோம். குடிகாடு என்ற ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அரைக் கிலோ மீட்டர் கல்லூரிக்கு நடக்கவேண்டும். சிலர் குடிகாட்டின் கிழக்குத் திசையிலிருந்து வருவார்கள். காலையும் மாலையும் போக்குவரத்து எல்லாமே ரயில் வண்டிகள் மூலம் தான். மாணவர்களுக்கு ரொம்ப வசதி. செயினைப் பிடித்து இழுத்து, ரயிலை ஏதாவது ஒரு காரணம் சொல்லி, பல சமயங்களில் காரணமே இல்லாமல் நிறுத்தி விடுவார்கள். யாராவது ஒரு மாணவன் சுவர் ஏறிக் குதித்து ரயிலைப் பிடிக்க ஓடிவருவதைப் பார்த்த மாணவர் குழாமிற்கு, ஆஹா! இப்படி ஒரு மாணவன் தன் கல்விச் சூழலை ஒரு நாள்கூட இழக்கலாமா?’ என்ற ஆதங்கத்தில் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை இழுத்து விடுவார்கள். ஆசிரியர்கள் யாரும் அப்ப்டி ஓடி வந்தால் மாணவர்கள் அப்படியெல்லாம் உதவி, ரயிலை நிறுத்த மாட்டார்கள் என்பது எங்களுக்கெல்லாம் ஒரு சோகம்.


இந்த ரயில் போனால் தான் கல்லூரி. இல்லையென்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் எங்கோ ரயில் பாதையில் நின்று கொண்டிருப்போம். நான் இருக்கும்வரை இந்தச் சூழலே இருந்தது. இது மாணவர்களுக்கு ரொம்ப வசதி. யாருக்கோ ஒருவனுக்கு நம் மெக்கலே கல்வியின் மீது ஏதோ ஒரு கோபம் என்றாலும் ரயில் நின்றுவிடும். ஆசிரியர்களில் பலரும், ‘அடடா .. இன்று என் வகுப்பு போச்சே!”, என்று ஆதங்கப்படுவார்கள். அது உண்மையோ என்னவோ தெரியாது. ஆனாலும் தப்பித் தவறி ஆசிரியனான நானும் என் நண்பர்களும் அது மாதிரி சோகத்தில் எங்களை ஆழ்த்திக் கொண்டதேயில்லை.  நான் அக்கல்லூரியை விட்டு போனபின்,  ஆசிரியர்களுக்கு என்று தனியாக ஒரு பஸ் போக்குவரத்து ஏற்பாடுசெய்து விட்டார்களாம். இப்போது ஆசிரியர்கள் வகுப்பிற்கு வந்து தானே ஆக வேண்டும். இதனால் மாணவர்களுக்கு ரயிலில் செய்யும் பராக்கிரமங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டன.



ஆனால் நானிருந்த வேளையில் ரயிலும், வகுப்புகளும் சென்டிமென்டலான ஒரு டச்சோடு தான் இருந்தார்கள். இப்படி ரயிலில் வந்து கொண்டிருப்பதால்  துறை சார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டாரங்களில் ஒன்று சேர்ந்து வருவது வழக்கமாக இருந்தது. பொதுவாக bachelors கூட்டம் தனிக்கூட்டமாக இருக்கும். மத்த ‘பெருசுகள்’ எல்லாம் தனி வட்டங்களில் வருவார்கள். துறைத் தலைவர்களிடமிருந்து சிறுசுகள் விலகியே இருப்பதும் வழக்கம். ஆகவே துறைசார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டங்களே பெரிதான் இடம் வகித்தன. இது அரட்டை அடிக்க ஏதுவான வசதியாக இருக்கும். பொதுவாக முதலில் உள்ள ரயில் வண்டிகளில் மாணவர்களின் ராஜாங்கம். அதன்பின் ஓரிரு வண்டிகளில் இளம் ஆசிரியர்கள். கடைசி வண்டியில் பெருசுகள். இப்படியாகத்தான் இருக்கும் ரயில் ராஜாங்கம்.



நான் பார்த்த வரை எங்கள் இளைஞர் கூட்டத்தில் அப்போதெல்லாம் நிறைய பேர் சரியான ’காசு துரத்திகளாக’ இருப்பதைப் பார்த்துள்ளேன். பலரும் இளங்கலை முடித்து சித்தாள் வேலையில் இருப்பவர்கள். ஏறத்தாழ ஒரு தற்காலிக வேலை. அவ்வளவே. இதனால் பலருக்கு ஆசிரியர் தொழில் ஒரு சைட் கிக் தான். கையில் வேறு சில தொழில்களைச் செய்து கொண்டு கல்லூரி வேலையையும் செய்து வந்தனர். பட்டுச் சேலை விற்பவர்கள் நிறைய இருந்ததாக நினைவு. இவர்கள் எல்லோருமே கொஞ்சம் சீரியசான ஆட்கள். இவர்களுக்கு எங்களைப் போன்ற வேறு சிலரைக் கண்டால் கொஞ்சம் அரட்டிதான். யார் காலையாவது வாருவது, வேலை பற்றி சீரியசாகப் பேசுவது என்றிருக்கும் எங்களை அவர்கள் ஒதுக்க முனைவதும், நாங்கள் வேண்டுமென்றே அவர்களைக் கலாய்ப்பதுவும் தொடர் நிகழ்ச்சி. அவர்களைக் கலாய்ப்பது எப்படி அவ்வளவு எளிதாக இருந்தது; எப்படி அவர்கள் அப்படி ‘டமால்’ என்று எங்களிடம் விழுந்து தொலைத்தார்கள் என்பது எனக்கு இன்று வரை பெரிய ஆச்சரியம் தான்.



போன பதிவில் மதிய உணவு நேரத்தைப் பற்றியெழுதியிருந்தேன். அந்த நேரத்தில் பல துறை இளைஞர்களும் சாப்பாட்டிற்காக விடுதி வந்து. அதன் பின் இந்த அறைக்குச் ‘சிரம பரிகாரம்’ - அப்புறம் எப்படி தம் அடிக்கிறது? - செய்ய வந்து விடுவோம். ஏற்கெனவே சொன்னது போல். மதியம் சினிமா பாட்டு வைத்துக் கேட்பது வழக்கம், அதோடு சொந்தக் கதை சோகக் கதைன்னு ஒருத்தர் ஒருத்தரை கலாட்டா செய்து கொண்டிருப்போம். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஆங்கிலத் துறைக்கு ஒரு புதிய நண்பர் வந்தார். மிக மிக நல்ல மனிதர். அப்போது தான் இளங்கலை முடித்து விட்டு ஆங்கிலத்துறையில் சித்தாளாக - ட்யூட்டராக - வந்து சேர்ந்திருந்தார். ஆறுமுகம் என்று பெயர். மதுரைக்காரர்தான். அதுவும் தியாகராசர் கல்லுரியின் பக்கத்திலுள்ள அனுப்பானடிதான் சொந்த இடம். அட நம்ம ஊர் மதுரைக்காரரே என்று நினைத்து நான் அவரிடம் பேச ஆரம்பித்தால் மனிதர் பயந்து ஒதுங்குவார். நமக்கு அம்புட்டு நல்ல பெயர் அப்போதே இருந்திருக்கு!


ஆறுமுகம் ரொம்ப நல்ல மனிதர் என்று சொன்னேனில்லையா? அதனாலேயே அவரை எல்லோரும் ரொம்பவே காலை வாருவார்கள். அவரும் பாவம் போல சிரித்து மழுப்புவார். ஆனால அவர் மழுப்ப முடியாமல் ஒரு விஷயத்தில் எல்லோரிடமும் மாட்டிக் கொள்வார். செக்ஸ் என்றாலே ஆறுமுகத்திற்கு அலர்ஜி. பத்தாதா நம்ம மக்களுக்கு. எதையாவது சொல்லி அவரைக் கஷ்டப்படுத்துவார்கள். எனக்கு எப்போதுமே நாம் ஏதாவது சொல்லி, அதைத் திருப்பிச் சொல்லும் அளவுள்ள மக்களை மட்டும் கலாய்ப்பதில் மட்டும் தான் ஆர்வம். அடிக்கிற ஆளும் கொஞ்சமாவது நம்மைத் திருப்பி தாக்கினால் தானே அந்த விளையாட்டுச் சண்டை நன்றாக இருக்கும்! ஆறுமுகம் அப்படிப்பட்ட ஆளில்லை. ஒரு மாதிரி பாவம் போல் சிரித்து மழுப்புவார். அதனால் அவரைக் கலாய்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. மதியம் அவர் வந்ததும் அவரை ஏதாவது சொல்லி கலாட்டா பண்ணுவார்கள்.


இதில் வசமாக ஒரு விஷயத்தில் ஆறுமுகம் மாட்டிக் கொண்டார். அவருக்கு ஒரு சினிமாப்பாட்டு - அப்போதைய ஹிட் பாட்டு அது - மிகவும் அலர்ஜியாகி விட்டது. ‘இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான்’ என்ற பாட்டு அது. அதற்கு அப்போதைய செக்ஸ் நடிகை ஒருவர் - பெயர் நினைவில் இல்லை - ஒருவர் இதற்கு ‘அபிநயம்’ பிடிப்பார். அட .. இரட்டை அர்த்தம் உள்ள பாடல் என்று வைத்துக் கொள்வோமே! ஒரு பக்கம் பயங்கர தத்துவம்; இன்னொரு பக்கம் நிறைய செக்ஸ். இந்தப் பாட்டைப் போட்டதும் ஆறுமுகம் காதை இறுகப் பொத்திக் கொள்வார். நண்பர்கள் பாட்டை நிறுத்தி விடுவார்கள். ஆறுமுகம் கையை எடுத்ததும் மறுபடியும் அதே பாட்டு தாலாட்டும். மறுபடி ஆறுமுகம் அதே வேலையைத் தொடர்வார். இந்த விளையாட்டு அனேகமாக ஆறுமுகம் அறைக்கு வரும் நாளெல்லாம் நடக்கும். அவர் அவ்வளவு எளிதாக அந்த அறையையும் தாண்டி விட முடியாதபடி நண்பர்கள் அவரை அணைபோட்டு அறைக்கு கொண்டு வந்து விடுவார்கள்!



எனக்குப் பாவமாக இருக்கும். ஆனால் ஒன்றும் சொல்ல முடியாது. இந்தச் சமயத்தில் ஆறுமுகம் தங்கியிருந்த அறையைக் காலி செய்ய வேண்டியதிருந்தது. உடனே இன்னொரு அறை வேண்டும் அவருக்கு. தயங்கியபடி என்னிடம் வந்தார். ஒரு அவசர உதவியென்றார். கொஞ்ச நாளைக்கு மட்டும் என்றார். நான் சரியென்றேன். அறை நண்பரானார். அவருக்கு பல நல்ல கொள்கைகள். அதில் ஒன்று சினிமாவிற்கு இரவு ஆட்டத்திற்குப் போகக் கூடாது எனப்து. எனக்கு அது தான் வசதி. சனிக்கிழமை ராத்திரி படம் போய்ட்டு வந்து ஞாயிறு எம்புட்டு தூங்க முடியுமோ அம்புட்டு தூங்கலாமே .. அதனால் என் வசதி இரவு சினிமா தான். ஆறுமுகத்தின் armour-ல் முதல் ‘கட்டுடைப்பு’ இது தான். ’ஆமாங்க .. இந்த சிஸ்டம் நல்லா இருக்கு’ என்பது ஆறுமுகத்திடமிருந்து எனக்கு வந்த முதல் ஆறுதலான பாராட்டு இது!


ஆனால் இதைவிட எனக்கு ஆறுமுகம் மதியம் விடுதியறையில் படும்பாடு தான் நினைவிலேயே இருந்தது. நாலைந்து நாள் விடுமுறை வேறு வந்தது. அந்த சமயத்தில் அவரை மெல்ல உருவேற்றினேன்.

”ஏன்’யா உங்களுக்கு அந்தப் பாட்டு பிடிக்கலை?”

“அது கெட்ட விஷயம் சொல்லுது. அதான்”

“வெறும் பாட்டாக அதை ஏன் கேட்கக் கூடாது?”

“அசிங்கமா அந்தப் பாட்டுக்கு அந்தப் பொம்பளை ஆடுதுல்லா?”

”அதை ஏன் நீங்க நினைக்கிறீங்க. பாட்டை மட்டும் கேளுங்க. நல்ல அர்த்தம் அதில் இருக்குல்ல?”

”அதை நினைக்காம எப்படி பாட்டைக் கேட்கிறது?”

நான் ரெண்டு மூணு பாட்டை எடுத்து உட்டேன். இப்போ எல்லாம் உங்களுக்கு நடனமா நினைவுக்கு வருது? நீங்க நினைச்சா அது வந்து தொலையும். இல்லாட்டி பாட்டு மட்டும் தானே கேக்கும்” என்றேன். ஆறுமுகத்தால ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டேன். ”ஏன் ஆறுமுகம்! உங்களை அந்தப் பாட்டை வைத்துக் கேலி செய்வது பிடிக்குதா?”

“என்னங்க .. இப்படிக் கேட்டுட்டீங்க .. இல்லவே இல்லைங்க’.

”அப்போ அதை நிப்பாட்டணுமா வேண்டாமா?” என்று கேட்டேன்.

“கட்டாயமா நிப்பாட்டணுங்க”.

“நான் ஒண்ணு சொல்றேன். கேளுங்க. பய புள்ளைக உங்களைக் கேலி பண்றதையே உட்ருவாங்க” அப்டின்னேன்.

”சொல்லுங்க. செஞ்சுருவோம்” அப்டின்னார் தைரியமாக.

“கொஞ்சம் உங்களுக்குக் கஷ்டம் தான். சிரமப்பட்டு ஒரு நாள் ஒரு நாடகம் போட்டா சரியாயிரும்” என்றேன்.

“சொல்லுங்க ...”

“அடுத்த வாரம் காலேஜ் போறம்ல. அன்னைக்கு மதியம் அந்த அறைக்குப் போனதும் யாரையாவது பாத்து ..’அந்தப் பாட்டை போடுங்க’ அப்டின்னு காஷுவலாகச் சொல்லுங்க. பாட்டைப் போடுவாங்க. ரசிக்கிறது மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு நீங்க என்னத்தையாவது நினச்சுக்குங்க. ஆனா .. தலையை நல்லா ஆட்டணும்” என்றேன்.

ஒரு வழியா அறையில் உக்காந்து நிறைய “போதித்து” அவரை என் வழிக்குக் கொண்டு வந்தேன்.

அந்தத் திருநாளும் வந்தது. மதியச்சாப்பாடு முடிந்ததும் நான் அவருக்கு முன்னாலே போய் அந்த அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு தம் அடித்துக் கொண்டு இருந்தேன். நம்ம ஆறுமுகம் வந்தார். கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டார். பாட்டு போட்டிக்கிட்டு இருந்த நண்பரிடம், ‘என்னப்பா இந்தப் பாட்டு ... நம்ம பாட்டைப் போடுங்க’ப்பா” என்றார். முகத்திலோ அப்படி ஒரு புன்னகை. ஆனால் ஆறுமுகம் சொன்னதைக் கேட்டதும் உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கெல்லாம் ஒரே ஷாக்! சரின்னு பாட்டையும் போட்டாங்க. காதைப் பொத்திக்கொள்வதற்குப் பதில் ஆறுமுகம் தலையை ஆட்டிக் கொண்டே புத்தகத்தில் கண்களை மேய விட்டார். மக்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. என்னப்பா ஆச்சு ஆறுமுகத்துக்கு என்று ஆச்சரியம். அதைக் கேள்வியாகவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் இதையெல்லாம் கண்டுக்கவேயில்லை. நண்பர்களிடமிருந்து திடீரென்று ஒரு குரல்: ‘நினச்சேன் .. இந்தப் பயல் ரூம் மேட் ஆயிட்டாரில்ல ஆறுமுகம். அதுதான் இதற்கெல்லாம் காரணம்’. குரல் கொடுத்தவனைப் பார்த்தேன். அவன் என்னைக் கையைக் காட்டிக் கொண்டிருந்தான். ‘அட போப்பா ... நான் ஒண்ணும் சொல்லலையே’ன்னு அப்பாவியா மூஞ்சை வச்சுக்க முயற்சி செஞ்சி சொன்னேன்.

எப்படியோ ஆறுமுகத்தைக் கலாய்ச்ச ஆளுகளுக்கு இப்போ வேலை இல்லாம் போயிரிச்சி!

நான் அந்தக் கல்லூரியை விட்ட பிறகு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகம் என் மதுரை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் முதுக்லை முடித்து திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்திருந்தார். பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பின் ஆறுமுகத்தைப் பற்றி இன்னொரு நண்பர் சொன்னது மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.



ஆறுமுகம் இப்போதெல்லாம் ஆசிரியர் கழகத்தில் மிகவும் முக்கியமான ஆளாக இருக்கிறார் என்றும், ஆசிரியர் போராட்டங்களில் தீவிரமாக முன்னால் நிற்கிறார் என்ற தகவலே அது. ஆறுமுகம் பெரும் போராளி என்பது எனக்கு மிகவும் இனிப்பாகவும்,  திருப்தியாகவும் இருந்தது.










*

Monday, April 01, 2013

650. நீயா .. நானா ..?






 *



மார்ச் 31,2013 ... நீயா .. நானா ..?
காதல் திருமணங்களும் அவைகளுக்கான எதிர்ப்பும் என்ற தலைப்பில் ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சிக்குரிய விளம்பரத்தில் ‘கெளரவம்’ என்ற படத்தினரும் இருந்தனர். இது ஒரு புதிய விளம்பர யுத்தி என்று நினைத்தேன். ஏனிப்படி இந்தப் படத்திற்கு மட்டும் இப்படி ஒரு தனியிடம் என்று நினைத்துக் கொண்டேன்.

**************************

வழக்கமான பாணியில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் ஒரு இளம் தாய் தன் மிகச் சிறு குழந்தையுடன் தன் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னதும் சில விஷயங்கள் வெளிப்படையாக வந்தன. இதில் சாதி வேற்றுமைகள் என்பதை விட, தலித்துகள் ஒரு புறமும், மற்ற சாதியினர் அனைவரும் இன்னொரு பக்கம் என்பது வெளிப்படையாக வெளி வந்தது. அந்த தாய் தன் குழந்தை ஒரு தலித்தின் குழந்தை; அதற்காகவே அதை வாழவிடக்கூடாது என்று தன் உறவினர்களே கூறுவதாகக் கூறினார். வெகு பச்சையான உண்மை.

இதற்குப் பின் வந்த கருத்தோட்டங்கள் அனைத்துமே தலித் vs மற்ற சாதியினர் என்ற கூறுபாட்டைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது. கெளரவக் கொலைகள் பற்றிய பேச்சு தொடர்ந்தது. இதே போன்ற ஒரு நீயா நானா நிகழ்வில் ஒரு தகப்பன் தன் மகள் சாதி மாறிக் கல்யாணம் செய்தால் அவளை வெட்டிக் கொல்லுவேன் என்று மூன்று முறை அந்த மனித மிருகம் சொன்னதை ஒருவர் இங்கு நினைவூட்டினார்.  எனக்கு அந்த நிகழ்வைப் பார்த்த அன்றே அந்த வெறிப் பேச்சுக்காக அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாதா என்று தான் தோன்றியது. இப்படிப் பேசுவதைப் பெருமையாக மக்கள் நினைப்பதை இயக்குனர் சேரன் வருத்தத்தோடு கூறினார்.

எனக்கென்னவோ எல்லா சாதியினருமே தலித்துகளை ஒதுக்கி வைப்பதாக இருந்தாலும் நம் தமிழகத்தின் வடக்குப் பக்கம் உள்ள வன்னியர்களும், தெற்குப் பக்கம் உள்ள தேவர் இனத்தவரும் இன்னும் தங்கள் புத்திகளை வளரவிட்டு, சாதித் திமிரைக் குறைத்தால் சமூகத்தில் இன்னும் விரைவில் நிலைமை மாறும் என்றே நினைக்கிறேன். சில விஷயங்களை மூடி போட்டுப் பேசுவதை விட்டு விடுவது எல்லோருக்கும் நலம். நாம் எல்லோருமே சாதி விஷயத்தில் மிகவும் மோசமென்றாலும் பலரும் உள்மனத்துக்குள் தங்கள் எண்ணங்களை ஒளித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் நான் சொன்ன இரு சாதியினரும் இதில் வெளிப்படையாக இருப்பதை ஒரு பெருமையாகவே நினைக்கிறார்கள்.

ஊடகங்களில் இன்னும் மேல் சாதி / caste hindus / ஆதிக்க சாதி போன்ற சொல்லாக்கங்களைத் தவிர்த்தலும் கட்டாயமே.

*****************************

இன்னும் சேரி மக்கள் ஆண் நாய்களை வளர்க்கக் கூடாது என்ற கட்டமைப்பு இன்னும் நமது ஊர்களில் இருப்பது அறிந்து, அர்த்தம் புரிந்து அதிர்ந்தேன். அடப் பாவிகளா ...!  நாத்தம் பிடித்த  பிறவிகள் !

*****************************

பேசிய ஒரு சமூகவியலாளர் சாதி ஐந்தாயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தீண்டாமை கடந்த கி.பி.500-லிருந்து தான் இருக்கிறது என்றார். ஆனாலும் புராணக் கதைகளிலேயே சாதியும், தீண்டாமையும், தாழ்வு நிலையும் சொல்லி இருக்கிறதே என்று நினைத்தேன். எனக்கு நந்தன் கதையும் நினைவுக்கு வந்தது.

*****************************

கமல் ஹாசன் தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை எடுத்து ஒரு சாதியினரைத் தூக்கிப் பிடிப்பது பற்றி பலரும் எழுதியாயிற்று. தேவர் மகனில் தேவர் சாதி பற்றிய பாடலை முதலில் கேட்ட போது அது சிவாஜி கணேசனுக்காக எழுதியது என்று தான் நினைத்தேன். ஆனால் அது முத்துராமலிங்கத்துக்காக எழுதியது என்பது பின்புதான் புரிந்தது. அதுவும் நான வாழும் பகுதியில் இந்த இனத்தவர் அதிகம். இதே பகுதியில் உள்ள ஒரு தலித் வேறு ஒரு ரிசர்வ்டு தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார். அவர் தன் பெற்றோரைப் பார்க்க எங்கள் பகுதிக்கு வரும்போதெல்லாம் பயங்கர உச்ச சத்தத்தில் இந்தப் பாடல் திரும்பத் திரும்ப போடப்படும். வக்கிரமம் தான்; வேறென்ன..?

கமல் இந்த சாதிக்கு இன்னும் கொடி கட்டுவதை விட்டு விட்டால் நலம். கமலின் விஷ்வரூபம் பிடித்தது. ஆனாலும் எடுத்த கருத்து எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நிச்சயம் அப்படம் இஸ்லாமியர் மீது ஒரு அச்சத்தையோ, ஐயத்தையோ உண்டு பண்ணக்கூடிய படம். கமல் இதைப் போன்ற துவேஷ சிந்தனை தரும் படங்களை எடுப்பதை விட அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

***********************************

கெளரவம் படம் எடுக்க என்ன காரணம் என்று கேட்ட போது பிரகாஷ்ராஜ் கொடுத்த பதில் இதமாகவும், இனிமையாகவும், பெருமையாகவும் இருந்தது. எங்கும் விரவிக்கிடக்கும் சாதியக் கொள்கைகளுக்கு இவ்வளவு நேர்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் அவரது மனது வாழ்த்துக்குரியது. பணத்தைப் பற்றி நினைக்காமல் தான் வாழும் சமூகத்திற்கு தான் கொடுக்கும் ஒரு வேண்டுகோளாக இப்படத்தை எடுப்பதைக் குறிப்பிட்ட போது அவர் மேல் இதுவரை இருந்த மரியாதை மிக அதிகமாயிற்று. வாழ்க ... வளர்க ...

********************************

நீயா நானா பரிசளிக்கும்போது  சமூகத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விழியற்ற இருவருக்கும், அந்த இளம் தாய்க்கும் கொடுத்தது மனதைத் தொட்டது. அந்த தாய் பரிசை வாங்கும்போது அவரது குழந்தையை இயக்குனர் பாலாஜி வாங்கி தூக்கி வைத்துக் கொண்டதில் மனித நேயம் மிளிர்ந்தது. பரிசு வாங்கும்போதும் கூட முகத்தில் உறைந்திருந்த சோகத்தோடு அந்தப் பெண் நின்றது வேதனையாக இருந்தது. அவருக்கு உதவிட மகளிர் உதவிக் குழுக்களோடு மற்றோரும் உதவினால் நன்றாக இருக்கும்.

********************************

கெளரவத்திற்கு இப்படி ஒரு விளம்பரமா என்று முதலில் நினைத்தது தவறு என்பது புரிந்தது. நல்ல ஒரு கொள்கையுடன் எடுக்கப்பட்ட ஒரு படம். இதற்கு இப்படி ஒரு வரவேற்பும், விளம்பரமும் கொடுப்பது தவறல்ல என்றும் புரிந்தது.

ஆனாலும் தேவர்மகனில் ‘போங்கடா .. போய் பிள்ளைகளைப் படிக்க வைங்கடா ...’  என்ற புத்திமதி யார் மனத்திலும் விழுந்து, விளைந்து, முளைத்ததாக நான் பார்க்கவில்லை. இப்படத்திற்கும் அப்படிப்பட்ட முடிவு இல்லாமல் இருக்க ஆசைப்படுகிறேன்.

******************************

அந்த இளம் தாயின் சோகம் காண்க ....


*

649. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ....










*



http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/8198603525/in/set-72157632823757135/




மேலே உள்ள தொடுப்பில் உள்ள மயில் படத்தைப் பார்த்தீர்களா??

இப்படியெல்லாம் சிலர் படம் எடுக்கிறாங்களேன்னு எனக்கும் ஒரு ஆசை வந்தது. நாமும் இது மாதிரி மயிலைப் படம் எடுத்துரணும்ன்னு ஒரு ஆசை.அதற்காகவே நானும் ஒரு நாள் படம் எடுக்கப் போனேன். போனது ஒரு வான்கோழிப் பண்ணை. ஆனால் என்னைக் கூப்பிட்டுப் போனவர் அங்கே வான்கோழியும், மயில்களும் இருக்கும் என்றார். ஆனால் விஷயம் என்னன்னா ... அங்கே வான்கோழி வளர்க்கிறார்கள். சரியான காட்டுப் பகுதி. அங்கு மயில்களும் சுதந்திரமாக அலைகின்றன.

ஆனால் அவை ஒன்றும் பக்கத்தில் வந்து தொலைப்பதில்லை. அதுல எடுத்தா படம் இப்படித்தான் வந்தது. நம்ம ஆடும் ஆட்டத்திற்கு வரும் மயில் இம்புட்டு தான்.  :(  அடவந்ததே வந்ததே ஒரு ஆண்மயில் தோகையோடு வரக்கூடாதா? ஒரு பெண் மயில். அதுவும் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு அலச்சல் காமிக்குது. நம்ம ஆக்கத்திற்கு கிடைத்த படம் இது தான். எல்லாம் தலவிதி !!


ஆனாலும் வந்ததே வந்தோம். எடுக்கிறவங்க மயிலை எடுத்தா எடுக்கட்டும். நம்ம வசதிக்கு வான் கோழி தான் அமையுதுன்னு நினச்சிக்கிட்டு அவைகளைச் சில படம எடுத்தேன். ஒரே வான்கோழிக் கூட்டம். கும்மலா நிக்குது. எதைப் படம் எடுக்கிறது ... எப்படி எடுக்கிறதுன்னு குழப்பம். அங்க இருக்க ஆளுக கிட்ட கேட்டிருந்தா ஒரே ஒரு கோழியைத் தனியா விட்டுருந்திருப்பாங்களாம். நான் அவங்க கிட்ட கேக்கலை. கண்ணுக்குக் கிடச்சதை ... சுட்டேன். ஒண்ணு ரெண்டு தோகையெல்லாம் விரிச்சிக்கிட்டு நின்னுதுக... எதோ போனா இவன் போறான் என்ற நினைப்பில் அப்படி கொஞ்சம் போஸ் கொடுத்ததுக.  நானும் அதுகளைத் தனியா எடுக்க முடியாவிட்டாலும் கொத்தோடு கூட்டத்தோடு எடுத்தேன்.







ஒரு சந்தேகம். அத்தனை மயில் நின்னப்போ அந்தப் படம் எடுத்தவங்களுக்கு முன்னால் ஏன் ஒரே ஒரு மயில் மட்டும் அம்புட்டு தோகையையும் விரிச்சிக்கிட்டு அழகா தனியா நின்னு, ஆடி போஸ் கொடுக்குது?  ஏதும் மந்திரம் போட்டுருவாங்களோ? என்னமோ ஒரு “சூச்சுமம்” இருக்குது! நமக்குத்தான் அது தெரிய மாட்டேங்குது. :(

எப்படியோ ...! கான மயிலாட கண்டிருந்த வான்கோழி மாதிரி நானும் வான்கோழிப் படங்களை இப்படி எடுத்தேன். அம்புட்டு தான் நம்மளால முடிஞ்சது ..... அததுக்கு கொடுத்து வைக்கணுமா இல்லியா ...???!!








*