Monday, March 17, 2014

729. தருமி பக்கம் (15) -- அந்தக் காலத்தில ....






*

அதீதம் இணைய இதழில் வெளி வந்த பதிவின் மறு பதிப்பு ....



*



சின்ன வயதில் ஊருக்குப் போனதும் ரொம்ப வித்தியாசமாகக் கண்ணில் படுவது அங்கங்கு மக்கள் உட்கார்ந்து கொண்டு பீடி சுற்றுவது தான். தனியாக உட்கார்ந்து யாரும் பீடி சுற்றுவதைக் காணவே முடியாது. பகலில் இரண்டு பேராவது உட்கார்ந்து பீடி சுற்றுவார்கள். இரவில் எண்ணிக்கை கூடி விடும். எங்கே தான் உட்கார்ந்து பீடி சுற்றுவது என்று எந்தக் கணக்கும் கிடையாது.
`````````````````````

இப்போதெல்லாம் கணினியில் நிறைய நேரம் உட்கார்வதால் அங்கங்கே உடம்பு பிடித்துக் கொள்ளும். அந்த டைப் நாற்காலி போட்டுக்கோ.. அல்லது இந்த மாதிரி நாற்காலி போட்டுக்கோ என்றெல்லாம் ஆளுக்காளாய் உத்தரவு போடுகிறார்கள். இல்லாவிட்டால் முதுகு வலி என்று ஆரம்பித்து பல பிரச்சனைகள் வரும் என்று பயங்காட்டுகிறார்கள். ஆனால் பீடி சுற்றும் இந்த மக்களுக்கு அப்படி யாரும் ஆலோசனை சொல்வதில்லை போலும். அது அரையடி அகலத்தில் இருக்கும் மெத்தைப் படியிலிருந்து ஆரம்பித்து, கல், மண், சாலை இப்படி எதையும் தள்ளாது எங்கே இடம் இருக்கிறதோ அங்கே உட்கார்ந்து பீடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அநேகமாக நான் பார்த்த ஒரே ஒரு ஒற்றுமை உட்கார்ந்து பீடி சுற்றும் ஒவ்வொருவரும் லேசாக முதுகை முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே சுற்றுவார்கள். பய பிள்ளைகள் முதுகை எதிலும் சாய்க்காமலேயே மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டே பீடி சுற்றுவார்கள். யாரும் பீடி சுற்றியதால் முதுகு வலி என்று சொல்லி நான் கேட்டதேயில்லை.

இரவில் ஒரு சின்ன சிம்னி விளக்கு அவர்கள் பீடித் தட்டிலேயே உட்கார்ந்திருக்கும். மின்னொளி வந்த பின் இரவில் சாலை விளக்குகளைக் கூட விட்டு விடுவதில்லை. அதைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு சுற்று நடக்கும். அநேகமாக இப்படிக் கூட்டமாக உட்கார்ந்து பீடி சுற்றும் போது யாராவது ஒருவரிடமிருந்து ஏதாவது ஒரு பாட்டு ஹம்மிங்காக வந்து கொண்டிருக்கும். அது தான் அங்கே RR – rerecording! அது இல்லாவிட்டால் ஏதேதோ பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

பீடி சுற்றும் போது அவர்களின் நடுவில் உட்கார்ந்திருக்க பிடிக்கும். அநேகமாக அப்போது மக்கள் மதுரையைப் பற்றியெல்லாம் கேட்பார்கள். அம்புட்டு பெரிய ஊரிலிருந்து நாங்க கிராமத்துக்கு வந்திருக்கோம்ல ... ரொம்ப மெக்கானிக்கலாக வேலை செய்வார்கள். சார்லி சாப்ளினின் Modern Times படத்தில் வருவது மாதிரி அவர்கள் எல்லோரும் அப்படியே மெஷினாக மாறி விட்டார்களோ என்று தோன்றும்.

இதை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது ...? பீடி சுற்றலை காட்சிகளாக மாற்றுவோமே ... பீடிக்கடையிலிருந்து பீடி இலை வாங்கி வருவார்கள். கடையில் பெரும் பெரும் மூட்டையாக பீடி இலைகள் லாரியில் வந்து இறங்கும். வட நாட்டிலிருந்து வருவதாகச் சொல்லுவார்கள். சனிக்கிழமை கணக்குப் போடும் போது பழைய இலைக்கு சுற்றிய பீடிகளைக் கொடுத்து விட்டு, புதிதாக இலை, தூள், தேங்காய் நார் வாங்கி வருவார்கள். வந்ததும் இலைகளைச் சிறிது சிறிதாக எடுத்து ஒரு சின்ன பழைய சாக்குத் துண்டுகளில் மடித்து வைத்து, அதன் மேல் சிறிது நீர் தெளித்து பதம் போட்டு வைத்திருப்பார்கள். பின் இந்த இலைகளை எடுத்து கருப்புக் கலரில் இரும்பு கத்திரிக்கோல்கள் இருக்கும். அதை வைத்து நானும் இலைகளை வெட்டிப் பார்த்திருக்கிறேன். ம்ஹூம்... நம்மால் ஒரு இலை கூட வெட்ட முடியாது. அந்த கத்திரிக்கோல்களைக் கையாள தனித் திறமை வேண்டியதிருக்கும். ஏதோ ஒரு கோணத்தில் பிடித்தால் தான் அது வெட்டும். அவரவர் கத்திரிக்கோல் அவரவருக்குத் தான் சரியாக இருக்கும். கைவந்த கத்திரிக்கோல்கள்!

இந்த இலை வெட்டுவது தான் எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். சொக்கலால் பீடிக்கு நாமாகவே வெட்ட வேண்டும். ஆனால் அதன் பின் வந்த கணேஷ் பீடிக்கு தகரத்தில் ஒரு ‘டெம்ப்ளேட்’ கொடுத்து விடுவார்கள். கணேஷ் பீடிக்கு இலை வெட்டும் போது இந்த தகரத்தை இலை மேல் வைத்து அதே அளவில் வெட்டணும். ஆனால் சொக்கலால் பீடிக்கு இப்படி ‘டெம்ப்ளேட்’ ஏதும் கிடையாது. அங்கு உங்கள் ‘கற்பனை’ தான் முக்கியம். இலை எடுக்கும் ‘ஷணத்திலேயே’ இதை எப்படி வெட்டுவது எப்படி என்று அவர்கள் மூளைக்குக் கட்டளை போய் விடும் போலும். கையும், கத்திரியும், பீடி இலையும் நடனமாடும். அப்படி இப்படி என்று வெட்டுவார்கள். ஒரு இலையிலிருந்து எத்தனை அதிக இலை வெட்டும் கலை கைவந்திருக்கும் அவர்களுக்கு. In a jiffy ... என்பார்களே அதே போல் விறு விறுவென்று இலைகளை சரியான அளவில் வெட்டுவார்கள்.

வெட்டிய இலைகள் மறுபடியும் நனைந்த சாக்குப் பைக்குள் போய் விடும். பீடி சுற்ற அந்த இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நனைந்த சாக்குப் பைகளிலிருந்து வெளி வரும். இந்தச் சாக்குப் பைகள் அநேகமாக அவர்கள் மடி மேல் உட்கார்ந்திருக்கும். நனைந்த பையின் ஈரம் மடியில் படும் சுகத்திற்காக அங்கே வைத்திருப்பார்களோ என்னவோ! அந்தப் பைகளின் மேல் வட்ட வடிவ பீடித் தட்டு, வலது கைக்குப் பக்கத்தில் பீடி இலைகள் இடம் எடுத்துக் கொள்ளும். எதிர்ப் புறத்தில் பீடி இலை இருக்கும். அநேகமாக எல்லோரும் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு பீடி சுற்றுவார்கள். ஆடிக்கொண்டே பீடி சுற்றுவதிலும், காலை இப்படி நீட்டிக் கொண்டிருப்பதிலும் anatomy –ல் ஏதோ ஒரு லாபமோ, வசதியோ இருக்கும் போலும். இப்போது முதுகு வலி என்று சொல்பவர்கள் இதை வைத்து ஏதாவது ஆராய்ச்சி …கீராய்ச்சி செய்து உண்மை கண்டு பிடித்தால் லோகத்தில் பலருக்கும் லாபம்!

ஆ .. விட்ட இடத்திலிருந்து தொடருவோம் … அவர்கள் காலுக்கடியில் தேங்காய் நார் இருக்கும். கணேஷ் பீடி வந்ததும் அவர்கள் சிகப்பு கலரில் நூல் கொடுத்து விடுவார்கள். அதை வெட்ட பல் தான் ஆயுதம். ஒரு இலையை எடுப்பார்கள். வலது கையால் ஒரு கை எடுத்து இடது கைக்குள் வருவதற்குள், அந்த ஒரு கணத்திற்குள் அந்த இலை சரியான கோணத்தில் கொடுக்கப்படும். (இதை Modern Times Technique 1 என்று வைத்துக்கொள்வோம். இனி இதை MTT என்று சொல்வோம்.) அடுத்து ஸ்விட்ச் போட்டது போல் வலது கை பீடித் தூளிற்குப் போய் சரியான அளவு தூளை எடுத்து இலை மேல் போடுவார்கள் – MTT-2. அடுத்த MTT-3 இருக்கிறதே இது தான் ரொம்ப ஆச்சரியமானது. பீடி இலையின் எதிர்ப் புறத்தை இடது கட்டை விரலால் ‘என்னவோ செய்து’ பீடி உருட்டலின் முதல் சுருட்டலைச் செய்து விடுவார்கள். இதைப் படிக்க நானும் அந்தக் காலத்தில் முயன்றேன்.முடியவில்லை. ‘போடா …போ .. படிக்கிற பிள்ளை உனக்கெதெற்கு இந்த வேலை’ என்று சொல்லி என்னை விரட்டி விடுவார்கள். அந்த முதல் சுருட்டல் மிகவும் ஆச்சரியான ஒன்று தான். ஏனெனில் அதைச் சீராகச் செய்யாவிடில் பீடி அதன் ‘shape’க்கு வரவே வராது. MTT-4 அப்படி சுருட்டியதும் பீடி உயரத்தில் ஒரு சின்ன இரும்புக் கம்பி வைத்திருப்பார்கள். அதுவும் ஏறத்தாழ பீடி வடிவத்தில் இருக்கும். ஒரு புறம் தட்டையாகவும் ஊசியாகவும் இருக்கும்; அடுத்த பக்கம் மொழுக்கென்று இருக்கும். மொழுக் பக்கத்தை வைத்து சுருட்டிய பீடியின் தலைப் பகுதியை அழுத்தி எடுப்பார்கள் MTT-5. ஊசிப் பக்கம் வைத்து பீடியின் அடுத்த முனையில் உள்ள பகுதியை மடித்து ஒழுங்காக்குவார்கள். MTT-6 அடுத்து வலது கையால் ஒரு தேங்காய் நார் வரும். அப்படியே ஒரு சுற்றுச் சுற்றி கத்திரியால் வெட்டி சீர் செய்வார்கள். MTT-7 அப்பாடா … ஒரு பீடியின் உருவாக்கக் கதை முடிந்தது!

இப்படி முடிந்த பீடிகளை ...25 பீடி என்று நினைக்கிறேன். ஒரு பண்டிலாகக் கட்டுவார்கள். இதில் பெரும் ஆச்சரியம் அப்படிக் கட்டும் போது எல்லா பீடிகளும் ஒரே நீளத்தில், ஒரே அளவில் இருக்கும். ஆனால் அவர்கள் சோகம் அவர்களுக்கு. சனிக்கிழமை காலையிலிருந்தே ‘கணக்குக் கொடுக்க’ மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அங்கே போனதும் பண்டில் பண்டிலாக எடுத்துப் பார்ப்பார்கள். அவர்களும் experts தானே. சில பண்டில்கள் எடையில் குறைவாக இருக்குமோ என்னவோ அதிலிருந்து ரெண்டு மூணு பீடிகளை உருவுவார்கள். முதலில் பீடியின் நடுப்பகுதியை அமுக்கிப் பார்ப்பார்கள். தூள் குறையாக இருந்தால் அது ‘கழிவில்’ போய் விடும். ஒரே பண்டிலில் இரண்டு மூன்று பீடிகளுக்கு மேல் அப்படியிருந்தால் அந்த பண்டில் மொத்தமும் கழிவு தான். எப்படியும் யார் கொண்டு போனாலும் சில கழிவுகள் ஒரு கட்டாயம்.

ஆனால் பீடி கணக்குப் போட்டு விட்டு வீட்டுக்கு வரும் மக்கள் மனது சந்தோஷமாக இருக்கும். கணக்குப் போட்டதும் அந்த வார சம்பளம் வந்து விடும். அடுத்த வாரத்திற்குரிய இலை, தூள் எல்லாம் வந்து விடும். அன்று மாலை டூரிங் தியேட்டர் பொங்கி வழியும். அநேகமாக அப்போது சனிக்கிழமை தான் புதுப்படங்கள் போடுவார்கள். தியேட்டர் போகும் வழியில் இருக்கும் ரிப்பன் கடை ஜே .. ஜே … என்றிருக்கும்.

ஊரில் எல்லோரும் பீடி சுற்றுவார்கள். ஆனால் எங்கள் பாட்டையா, பெரிய பாட்டையா இவர்கள் வீடுகளில் பீடி சுற்றுவது இருக்காது. Below our dignity என்பது பாட்டையாக்களின் கருத்து. நான் சின்ன வயதில் போகும் போது அப்பா வீட்டில் யாரும் பீடி சுற்ற மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் அப்டின்னு யாராவது வீட்டுப் படியில் உட்கார்ந்து சுற்றுவார்கள். ஆனால் வீட்டுக்குள் யாரும் கிடையாது. இதற்கு நேர் எதிர்மறை அம்மா வீட்டில். அங்கு பீடி சுற்றுவது இருந்தது. இப்போது எல்லாம் நேர் எதிராகப் போய் விட்டது என்று நினைக்கிறேன். அம்மா வீட்டில் பீடி சுற்றுவது நின்று பல காலமாகி விட்டது. ஆனால் அப்பா வீட்டில் ஒரு சித்தப்பா வீட்டில் கொஞ்ச நாள் இருந்து இப்போது இல்லாமல் போய் விட்டது. சித்தப்பா வீட்டுப் பேரப் பிள்ளைகள் எல்லோரும் பெரிய படிப்பாளிகளாகி விட்டார்கள். நன்றாகப் படிக்கிறார்கள்.

ஆனால் ஊரில் பல ஆண்டுகளாக இன்னொரு ஏமாற்றமான மாற்றம் நடந்து விட்டது. பீடி சுற்றுவது பெண்களின் அலுவல் என்பது மாறி ஆண்களும் பீடி சுற்ற ஆரம்பித்த போது இது அவ்வளவு நல்லாயில்லையே என்று நினைத்தேன்.

என்ன தான் காசு சம்பாரித்தாலும் இது ஒரு ஈசி வேலை; பெண்களுக்கானது; ஆண்களும் இதில் ஈடுபட்டால் பொருளாதாரத்திற்கு தடையாக இருக்காதா என்று நினைத்ததுண்டு.






 *



1 comment:

வவ்வால் said...

தருமிய்யா,

பீடி சுற்றுவது பற்றி கேள்விப்பட்டது மட்டும் தான் , நீங்க தெளிவாக "அக்கலையை"சொல்லி இருக்கீங்க.

//கடையில் பெரும் பெரும் மூட்டையாக பீடி இலைகள் லாரியில் வந்து இறங்கும். வட நாட்டிலிருந்து வருவதாகச் சொல்லுவார்கள். //

பீடி சுற்றும் தொழில் உழைப்பை சுரண்டும் தொழில், பைசாக்கணக்கில் தான் சம்பளம், மேலும் இலையின் எடைக்கணக்கிற்கு ஏற்ப பீடி எடை/எண்ணிக்கை இருக்கணுமாம், அவங்க நிர்ணயிச்ச அளவுக்கு குறைஞ்சா அதுக்கு வேற காசுப்பிடிப்பாங்கனு கேள்வி.

# பீடி இலைக்கு பேரு "டெண்டு" East Indian Ebony (Diospyros melanoxylon) இலையாம்,ம.பி,உ.பி,ஒரிசா,மகாராஷ்டாவில் டெண்டு மரங்கள் இதுக்காக வளர்க்கிறாங்க. அரசின் காடுகளில் இருந்து பழங்குடி மக்கள் பறிச்சு அனுப்புறாங்க.

http://mfpfederation.org/website/content/tendupatta.html

http://www.thehindu.com/todays-paper/tp-national/a-new-turn-for-tendu/article4741400.ece

# இதே போல அப்போ எங்க பக்கம் "அப்பளம்" தட்டும் வேலை வரும், பிசைஞ்ச ஈர மாவு கொடுத்து அப்பளமா தட்டி கொடுத்தா எண்ணீக்கைக்கு காசு. இப்போலாம் மெஷின்ல போட்டுவிடுவதால் "வீட்டு பெண்களின் வேலை வாய்ப்பு போயிடுச்சு.

Post a Comment