Wednesday, July 27, 2016

900. கபாலி









*

 இன்னும் கபாலி படம் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் நாக்கு தள்ளும் அளவிற்கு ஊடகங்களில் அதைப் பற்றிய விமர்சனங்களை மூச்சு முட்ட வாசித்தாயிற்று.

சீக்கிரம் பார்க்கணும்

ரஞ்சித் அளித்த ஒரு காணொளி பார்த்தேன். மிக நீளமான காணொளி  என்றாலும் பார்த்ததும் ரஞ்சித் பிடிச்சிப் போச்சு. மனுஷன் கட் அண்ட் ரைட்டா பேசியிருக்கார். பேச்சில் தன்மையும் ஆழமும் நிறைய இருக்கு. பேசிய விஷயங்கள் சரியாகப் பிடிச்சிது. இந்த காணொளி பார்த்த போது ரஞ்சித் மேல் மரியாதை வந்தது. நல்ல படம் எடுத்தும் மனுஷன் தளும்பவேயில்லை ….”இது தான் நான்” என்று அந்த காணொளியை முடித்தது அருமை …

 மகிழ்ச்சி

அந்தக் காலத்தில் நடிக்க வர்ர நடிக நடிகையர்களிடம் ஊடகக்கார்ர்கள் - இப்போது மாதிரி தான் ... நல்ல கேள்வி கேட்கவே மாட்டார்கள் -  ஒரு வழக்கமான கேள்வி கேட்பார்கள்.

 “நீங்க ஏன்நடிக்க வந்தீங்க?”

 அதற்கான வழக்கமான பதில்: “கலைத்தாய்க்கு சேவை செய்ய வந்தேன்.” 

இப்படித்தான் ரொம்ப நாளா வண்டி ஓடிக்கொண்டு இருந்தது. நடுவில் ஒரு மனுஷன் – ரொம்ப வித்தியாசமான மனுஷன் – வந்தார். எம்.ஆர். ராதா. அவர் பணத்துக்காக நடிக்க வந்தேன் அப்டின்னார். ஏங்க கலைத்தாய்க்கு சேவை செய்ய வரலையான்னு கேட்டாங்க. அப்போ ஒண்ணு சொன்னார். அப்படி சொல்றவங்க எல்லாத்தையும் காசு வாங்காம நடிக்கச் சொல்லு பாப்போம். அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுன்னு சொன்னார். அன்னையிலிருந்து ஒருத்தரும் வாயைத் திறந்து கலைத்தாய் பத்தி பேசுறது இல்லை. அப்படி பேசுற பழக்கம் அவரால நின்னுது.

அது மாதிரி இப்போவும் ஒரு ஆளு வரணும். நானும் பாத்துட்டேன். ரஜினி கூட நடிக்கிறதே பெருசு மாதிரி சும்மா அளந்து விடுவாங்க. கூட கொஞ்சம் விளம்பரம் வேணும்னாலும் கிடைக்கலாம். அதோட சரி… அதுவும் அவர வச்சி டைரக்ட் பண்ணணும்னு நிலை வந்திச்சின்னு வச்சுக்குங்க… ஒரு கூடைப் பூவோட தான் அலைவாங்க. போன ஜன்மத்துப் புண்ணியம் அது இதுன்னு ஒரே டயலாக். கேட்டு காதே புளிச்சிப் போச்சு. சரி…அவர வச்சி டைரக்ட் பண்ற/ கூட நடிக்கிற…. பெரிய புண்ணியம்னு சொல்றல்ல .. காசு வாங்கம ..போன ஜன்மத்துப் புண்ணியத்தின் படி செஞ்சிட்டு போன்னு சொல்ல ஒரு ஆளு வரணும்.

ஆனால் ரஞ்சித் அந்த மாதிரி எதுவும் பேசாம புண்ணியம் கட்டிக்கிட்டாரு. ஆஹா.. ரஜனி படத்தில நடிக்கிறதே பெருசுன்னு எல்லோரும் ஒரே மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ல ரஞ்சித் அப்படியெல்லாம் பேசாததே பெரிய விஷயம். தனக்கே ஒரு மரியாதையைக் கொடுத்திருக்கிறார். அதனால் அவர் மேல் மதிப்பு உயர்கிறது.

 அட …அதையெல்லாம் விட சிவாஜி அவ்வளவு பிடிச்சிருந்தாலும், இன்னும் புத்தியில்லாம இப்படி நடிச்சிக்கிட்டு இருக்கிறாரேன்னு அவருக்கு வயசானப்போ தோணுச்சு. அவர் காலத்தில பாலிவுட்ல அசோக்குமார் அப்டின்னு ஒரு நடிகர் இருந்தார். சிவாஜியை ஒட்டிய வயசு. வயசுக்கேத்த மாதிரி படங்கள் நடிச்சார். இது மாதிரி நம்ப ஆளும் growing majestically oldன்னு சொல்ற மாதிரி நடிக்க மாட்டேங்குறாரேன்னு கவலையா பேசிக்குவோம். அட அத உடுங்க ..அது பழைய காலத்துக் கதை. ஷோலே தவிர எந்த படத்திலும் பிடிக்காத அமிதாப் இப்போ நடிக்கிற படம் எல்லாம் பிடிக்குது. இன்னும் கமலும் ரஜினியும் டூயட் பாடிக்கிட்டே இருக்காங்களேன்னு நினச்சா எரிச்சல் தான் வரும்.

ஆனால் இந்தப் படத்தில் வயதுக்கேற்ற வேடம் என்பதாலேயே பிடித்தது அப்டின்னு ரஜினி சொன்னார் என்று சொன்னதைக் கேட்டதும், அப்படி ஒரு படத்தில் நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

இந்த இடத்தில் சுகுணா திவாகர் எழுதிய ஒரு கருத்தை இங்கே மேற்கோளிடுகிறேன்:
 இன்றைக்கு ரஜினிக்குச் சவால் கமல் அல்ல. மாறியுள்ள தமிழ் சினிமா சூழலும் உலகின் எந்த நடிகர்களுக்கும் குறைவில்லாத அளவு நடிப்புத்திறமையை வழங்கும் தனுஷும் விஜய்சேதுபதியும்தான். ஆனால் 'கபாலி'யில் வழங்கியதைப் போன்ற நடிப்பை ரஜினி தொடர்ந்து வழங்கினால் தனுஷுக்கும் விஜய்சேதுபதிக்கும் முதல் சவாலே ரஜினிதான். 

இனிமேயாவது ரஜினி நல்ல படங்களில் நடிப்பார் என்று தோன்றியது. ஆனால் ஷங்கர் என்ற மோசமான, எல்லாத்துலயும் பெயிண்ட் அடிக்கிற ஒரு “பிரமாண்ட” டைரடக்கரின் பற்றிய நினைப்பும் வந்து வயிற்றைக் கலக்கியது.








 *

Wednesday, July 20, 2016

899. FUTSAL 2016







*



போன பதிவில் நான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  ரொனால்டிகோ இந்த விளையாட்டுக்கெல்லாம் வரணுமான்னு சொன்னேன். முதல் ஆட்டத்தில் அவ்வளவு சொதப்பலாக விளையாடினார். 

ஆனால் கோவா – பெங்களூரு விளையாட்டு பார்த்த போது ஆஹா … ரொனால்டிகோ அசத்தி விட்டார். 7:2 என்பது கோல் கணக்கு. ஏழில் ஐந்தை ரொனால்டிகோ மட்டும் போட்டார். முதல் மூன்றும் hat trick. ஆட்டத்தில் புலி என்று இன்று காண்பித்தார்.

அதிகமாக ஓடவில்லை. காலுக்குள் வந்த பந்தை காலுக்குள்ளேயே வைத்துக் கொண்ட லாகவம் … வாவ்! He showed his silky play with the ball …. so soft … simple nicks .. kicks எல்லாம் இல்லை. Nicks மட்டும் தான். எளிதாக பந்து கோலுக்குள் சென்றன. 

ஒவ்வொரு கோலுக்கும் ஒவ்வொரு ஆட்டம் போட்டார். பார்க்க வந்தவர்களும் அவரை அரைத் தெய்வமாக்கி விட்டனர். அதாவது demi-godஆக்கி விட்டனர்.


கட்டாயம் கோவா அணியை இறுதி விளையாட்டில் வெற்றி பெற வைத்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவோடு விளையாடவில்லை. ஊருக்குப் போய் விட்டாராம். 

ஒரு வேளை நான் ” ரொனால்டிகோ இந்த முதல் விளையாட்டோடு இந்த போட்டிகளில் விளையாடாமல் ஒதுங்கிக் கொண்டால் எனக்கு “மகிழ்ச்சி”! என்று எழுதியது அவர் கண்களில் பட்டுவிட்டதோ?! 

NO  “மகிழ்ச்சி”!    :(





*

Friday, July 15, 2016

898. FUTSAL 2016








*





 Futsal அப்டின்னு இப்பதான் போன மாசம் கேள்விப்பட்டேன். பேரப் பசங்க ரெண்டு பேரும் அதுவும் விளையாடுறாங்க. புத்தக விழா சமயத்தில் சென்னைக்குப் போயிருந்தப்பா அவங்க விளையாடுறதைப் பார்க்கப் போனேன்.

அந்தக் காலத்திலும் ஐந்து பேர் புட்பால் அப்டின்னு விளையாடுவாங்க. ஆனா இப்போ விளையாடியது ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

 இன்று இந்தியாவில் I.P.L.மாதிரி Futsal Tournament ஒண்ணு ஆரம்பிச்சிருக்கு. க்ரிக்கெட் ப்ளேயர் ஒருத்தரு தான் ஸ்பான்சர் போலும். நல்லது.
.

  கோவாவிற்காக அந்தக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த ரொனால்டின்கோ விளையாடினார். விளையாடினார் என்பதை விட வந்து show காண்பிச்சிட்டு போய்ட்டார். மனுஷன் சும்மாவே கோர்ட்டுக்குள்ள கொஞ்ச நேரம் நின்னுட்டு அவர் பாட்டுக்குப் போய்ட்டார்.

விளையாட்டும் ரொம்ப போர். இன்னைக்கி பார்த்ததை விட அன்னைக்கி  விளையாட்டு பரவாயில்லாமல் இருந்தது. ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கம்பி வலைக்குள் விளையாட்டு நடந்தது. மேலேயும் சைட்லேயும் கம்பி வலை போட்டிருந்தது. பேரப் பசங்க நான் வருவதற்குள் விளையாடிட்டு போய்ட்டாங்க. வேற பசங்க விளையாட்டு தான் பார்த்தேன். பரவாயில்லை… வேகமாக விளையாடினாங்க. அந்த அளவு கூட இன்னைக்கி இல்லை.

நாளைக்கும் இந்த விளையாட்டைப் பார்த்துட்டு … அதுக்குப் பிறகு பார்க்கணுமான்னு யோசிக்கணும். Futsal எல்லாம் football முன்னால நிக்க முடியுமா?

 ரொனால்டின்கோ-க்கு இந்த விளையாட்டெல்லாம் எதற்கு? 30 மீட்டர் தூரத்தை விட அதிகமான தூரத்தில் நின்று ஒரு ஷாட் அடித்தார் ஒரு உலகக் கால்பந்து போட்டியில். எல்லோருக்குமே ஆச்சரியம். எதிர்த்த டீமில் உள்ள ஆள் ஒருவர் அதை சும்மா ஒரு லக்கி ஷாட் என்று சொல்லியிருந்தார்.அந்த அளவுக்கு விசேஷம். பந்து உயரமாகப் போய் கோலுக்குள் அழகாக இறங்கியது. என்னா கோல்!

ரொனால்டோ அந்த உலகக் கோப்பையில் அவ்வளவு சரியாக விளையாடவில்ல. எனக்கு அந்த ஆண்டு ரொனால்டிகோ விளையாட்டு தான் பிடித்தது.

ரொனால்டிகோ இந்த முதல் விளையாட்டோடு இந்த போட்டிகளில் விளையாடாமல் ஒதுங்கிக் கொண்டால் எனக்கு “மகிழ்ச்சி”! *

Tuesday, July 12, 2016

897. ஜாகிர் நாய்க் ..









*



 ஜாகிர் நாய்க் பற்றி வந்த, வரும் செய்திகள் ஏற்கெனவே இருந்த சில ஆச்சரியங்களைப் புதுப்பித்தன. எப்படி இந்த ஆள் இத்தனை விஷயங்களை நினைவில் வைத்து left and right மேற்கோள் காண்பிக்கிறாரே … அதுவும் வெறும் குரான் மட்டுமின்றி பைபிள், இந்து வேதம் என்று எல்லாவற்றையும் மனப்பாடமாக ஒப்பிக்கிறாரே என்றொரு ஆச்சரியம் இருந்தது. ஆனால் என் வாழ்வில் நான் சந்தித்த சில கிறித்துவர்களும் இத்தகைய இமாலய சாதனைகளை செய்பவர்களாக இருந்தது பார்த்தும் வியந்திருக்கிறேன். அவர்களில் இருவர் பற்றி மட்டும் உங்களுக்கும் சொல்லட்டுமா?


 முதல் ஆள் என் வெகு நெருங்கிய உறவினர். எனது நாற்பதுகளில் என்னோடு மிகவும் நெருங்கிப் பழகியவர். உறவுக்கும் மேல் என்னிடம் மிக அன்போடு இருந்தவர். பள்ளி வகுப்பு முழுவதும் அவர் முடிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை என்றார். சாதாரண வேலையில் இருந்தார். ஆனால் மனுஷனுக்கு அபார நகைச்சுவை உணர்வு. பத்து நிமிடம் யாரிடமும் பேசிக்கொண்டிருந்தால் அதற்குள் அவர்கள் மாய்ந்து மாய்ந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காலத்தில் வடிவேலு கிடையாது. இவர் அப்படியே பழைய வடிவேலுவின் உடல்வாகோடு இருப்பார். நகைச்சுவை உணர்வும் அதிகம். அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னோடு சேர்ந்து அவரும் மதங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்புவார். வடிவேலுவிற்கு ஒரு படத்தில் ஒரு ‘வியாதி’ இருக்குமே … விலாவில் கைவைத்து கிச்சு கிச்சு மூட்டினால் ’மிக நன்றாகப்’ பேசுவாரே … அதைப் போல் இவருக்கும் உண்டு. விலாவில் கை வைத்தால் ஒரு பெரிய கெட்ட வார்த்தையோடு ஒரு துள்ளு துள்ளுவார். சுற்றியிருக்கும் யாரைப் பற்றியும் கவலையில்லை. ஆனாலும் அது ஒரு involuntary reaction தான்!

 திடீரென்று அவரது வீட்டில் ஒரு உடல் நலக்குறைவுப் பிரச்சனை. மருத்துவர்கள் உடம்பில் பிரச்சனையில்லை என்றார்கள். ஆக .. அடுத்து கடவுளிடம் தானே போவோம். போன இடத்தில் இவருக்கு ஒரு புது அனுபவம். அவர் நேரடியாக என்னிடம் சொன்னதைச் சொல்கிறேனே … ஒரு கிறித்துவக் கோவிலுக்குப் போய் வரச்சொல்லி நண்பர்கள் சொன்னதின் பேரில் அக்கோவிலுக்குச் சென்றுள்ளார். பீடத்தை நோக்கி உட்கார்ந்திருந்தாராம்.திடீரென்று பார்க்கும் போது தன் முதுகு பீடத்தை நோக்கித் திரும்பி இருந்ததாம்! (சுற்றி இருப்பவர்கள் சும்மாவா இருந்தார்கள்?) ஆகவே இந்தக் கோவில் / இந்த கிறித்துவ சபை தனக்கு ஏற்றதல்ல என்று “பரிசுத்த ஆவியே” உணர்த்தியதாக உணர்ந்திருக்கிறார்.


தன் வீட்டிலேயே ஒரு “புதிய” சபை ஆரம்பித்து விட்டார். உபவாசக் கூட்டங்கள் நடத்துவாராம். பங்கு பெறும் சிறு கூட்டத்திற்கு அவரது வீட்டிலேயே ஜெபம் முடிந்ததும் சாப்பாடு. – இது வரை எனக்கு அவரிடம் தொடர்பு இருந்தது. அப்போது என் வீட்டிற்கும் வந்து போய்க்கொண்டு இருந்தார். எனக்கே ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தார்.


போலீஸ்கார மீசை என்போம். அது போயிருந்தது. ’என்னய்யா. உங்க ஜீசஸ் மீசை தாடியெல்லாம் வைத்திருந்தாரே!’ என்றேன். சாத்வீகமாகச் சிரித்துக் கொண்டிருந்தார். காலங்கார்த்தாலேயே இரண்டு மணிக்கு எழுந்து ஜெபிப்பேன் என்றார். காலையில் செய்யும் ஜெபத்தை ஜீசஸ் கண்டிப்பாகக் கேட்பதாகச் சொல்லியிருக்கிறாராம். ’அட … அவருக்கு ஏது காலையும் மாலையும். நமக்கு காலைன்னா ஐரோப்பாகாரனுக்கு மாலையாச்சே’ன்னு geography எல்லாம் சொன்னேன். அதற்கும் ஒரு சிரிப்பு. என் வீட்டில் ஜெபம் செய்ய வேண்டுமென்றார். சரியென்றேன். அசத்தி விட்டார் போங்கள். கையில் இருக்கும் பைபிளைப் புரட்டவில்லை. ஆனால் வசனங்களைப் பிட்டுப் பிட்டு வைத்தார். அதற்காக அவர் கொடுத்த விளக்கமும் மிக அற்புதமாக இருந்தது. கத்தோலிக்க மக்களுக்கு இல்லாத ‘ஞானம்’ அவருக்கிருந்தது. எனக்கும் கூட பைபிளில் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல பதில் சொன்னார். காலையில் எழுந்து ஜெபம் செய்வது. பைபிளைக் கரைத்துக் குடித்திருப்பது, நல்ல விளக்கங்கள் தருவது, பழைய நகைச்சுவை உணர்வுகள் சுத்தமாகப் போய் பக்தி உணர்வுகளோடு இருந்தது ….


எனக்கு மிகவும் பெரிய ஆச்சரியம். இதெல்லாம் எப்படி என்றேன். வழக்கமாக இது போன்ற எல்லா கிறித்துவர்களும் சொல்லும் பதிலைச் சொன்னார். “எல்லாம் பரிசுத்த ஆவி கொடுத்த கொடை” என்றார். முழு நம்பிக்கையாளனாக இருந்தார். முன்பு போல் என்னோடு சேர்ந்து கடவுள்களைக் கேள்வி கேட்பதும், கேலி செய்வதும் முற்றிலும் போயிருந்தன. “நீங்களும் ஒரு நாள் மாறிவிடுவீர்கள்” என்று எனக்கு ஆசியோ / சாபமோ கொடுத்தார்!


புறப்படும்போது இன்னொரு டெஸ்ட் செய்து விடுவோமேன்னு நினைத்து அவரது விலாவில் கைவைத்து கிச்சு கிச்சு மூட்டினேன். ஒன்றுமே இல்லை. ‘என்ன’ய்யா?’ என்றேன். ’அதையெல்லாம் பரிசுத்த ஆவி எடுத்துக் கொண்டு விட்டார்’ என்றார். அது அடுத்த ஆச்சரியம். ஆனால் அவருக்கு பைல்ஸ் பிரச்சனை உண்டு. முன்பே இருந்தது. சில நிமிடங்கள் கழித்து பைல்ஸ் பிரச்சனை இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன். இன்னும் சரியாகவில்லை என்றார். கிச்சு கிச்சு பிரச்சனையை வைத்து விட்டு, இந்த பைல்ஸ் பிரச்சனையை உங்கள் பரிசுத்த ஆவி எடுத்திருக்கலாம் என்றேன். சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.


சீக்கிரம் பெரிய சபையாக வளர்த்து விடுவார் என்று நினைத்தேன். அதே போல் மொட்டை மாடியில் கூடிய கூட்டம் வளர்ந்து, இப்போது பெரிய கோவிலாக ஒன்று கட்டி ஜெபக்கூட்டங்கள், உபவாசக் கூட்டங்கள், மதிய உணவு என்று பெரிதாக வளர்ந்து விட்டதாகப் பலரும் சொல்லி அறிந்தேன். கம்ப்யூட்டர் படித்த மகனும் அப்பாவோடு இருந்து ‘யேசுவின் பிள்ளை’யாக இருக்கிறானாம். வழக்கமாக எல்லா கிறித்துவப் பிரசாரகர்கள் போலவே கார், வீடு என்று இப்போது நன்கிருப்பதாக அறிந்தேன். மகிழ்ச்சி. என்னோடு அவருக்கு ஏதும் பிரச்சனை இல்லையென்றாலும் என் வீட்டாரோடு உறவுகள் அறுந்து விட்டதாக அறிந்தேன். அயலானை நேசி … உன் சகோதரனோடு சமாதானம் செய்து விட்டு அதன் பின் என் பின்னே வா என்று ஏசு சொன்னதாகச் சொல்வதெல்லாம் புத்தகத்தில் உள்ளது தானே … கட்டாயம் அதைப் பின்பற்ற வேண்டுமா என்ன??!! அதுவும் கடவுளையே பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தச் சின்ன விஷயங்களெல்லாம் தேவையா என்ன??!!


இது அதிகம் படிப்பறிவில்லாத என் உறவினரின் நிஜக்கதை. இன்னொன்று என் நண்பனின் அம்மாவும் பெரியம்மாவும். வெகு நாள் முன்பு நடந்தது. இருவரும் கிழவிகள். வெள்ளைச் சேலை … கருப்புப் புத்தகம் (பைபிள்) என்று எப்போது பக்தியாக இருப்பார்கள். முதன் முதல் ‘அப்பாடா … எம்புட்டு இவ்வளவு பைபிள் தெரிந்து வைத்துள்ளார்கள்’ என்று நான் ஆச்சரியப்பட்டதும் இவர்களைப் பார்த்து தான். படிப்பெல்லாம் மிகவும் கொஞ்சம் தான். ஆனால் பைபிள் அத்து படி. அதுவும் அவர்கள் பிரிவினைச் சபைக்காரர்களா? என்னைப் போன்ற கத்தோலிக்கர்களைக் கண்டால் அவர்களுக்கெல்லாம் நாங்கள் கொஞ்சம் ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ தான். கொஞ்சம் எள்ளி நகையாடுவார்கள் – நீங்கள் மாதாவைக் கும்பிடுகிறீர்கள் … உங்களுக்கு பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது என்பதே தெரியாது … உ;ங்களுக்கும் இந்துக்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை … குற்றச் சாட்டுகள் இப்படியே போகும்.


இந்தப் பழைய கதைகள் எல்லாம் ஜாகிர் நாய்க் பற்றிப் பேசும்போது நினைவுக்கு வந்தன. நான் சொன்ன மூவரையும் விட மருத்துவ டிகிரி முடித்த பெரிய படிப்பாளி .. அந்த இரு பாட்டிகள் போன்று வீட்டுக்குள் பிரச்சாரம் செய்பவரா இவர். அல்லது தனது சொந்த ஊரில் மட்டும் பிரச்சாரம் செய்யும் என் உறவினர் போலவா இவர்? அதையெல்லாம் தாண்டி உலகம் எத்திசையிலும் செல்லும் பெரும் பிரச்சாரகர் அல்லவா?


அதனால் தான் குரானோடு நிறுத்தாமல் இன்னும் இரு புத்தகங்களையும் நன்றாக மனனம் செய்திருக்கிறார். ஆனாலும் இதுவரை அவரது வீடியோக்களை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் கொடுக்கும் மேற்கோள்களைப் படிக்கத் தேடிய போது இது வரை இரண்டு மேற்கோள்கள் தவறாக இருப்பதாகப் பார்த்தேன்.ஒன்று முன்பு … விவரம் தெரியவில்லை. இப்போது நேற்று தேடிய போது அவர் கொடுத்த மேற்கோளை வாசிக்கத் தேடினேன். காணவில்லை. இன்னொரு காணொளியில் Sex with slaves என்கிற தலைப்பில் தேடிய போது 8:60 வசனம் என்று சொன்னார். வாசிக்கத் தேடினேன். காணவில்லை. அந்த காணொளியில் வசன எண்களை அவர் மிக வேகமாகச் சொல்கிறார். என்ன ஏது என்று தெரிவதற்குள் தாண்டி விடுகிறது. ஆனால் இந்த 8:60 என்பது sub-title ஆகவும் வந்தது. நல்ல சாமர்த்தியம் தான், ஒரு halo effect இவருக்குக் கிடைக்கிறது.


கிறித்துவப் பிரச்சாரகர்களிடம் கேட்டால் பரிசுத்த ஆவி மூலம் அனைத்தும் தங்களுக்குச் சாத்தியமானது என்பார்கள். இஸ்லாமியர்கள் எப்படி இம்புட்டு தெரிஞ்சி வச்சிருக்கீங்கன்னு கேட்டால் என்ன சொல்வார்களோ தெரியாது? ஒரு வேளை .. ஜிப்ரேல் ….?

 நேற்று பார்த்த ஜாகிர் காணொளியில் - (https://www.youtube.com/watch?v=Hy27jcEGn_g)விந்தையாக ஒன்று சொன்னார். ஏன் அடிமைகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், மகர் கொடுத்து திருமணம் செய்து கொள்ள முடியாத ஏழைகள் இப்படி அடிமைகளைத் திருமணம்செய்து கொள்ளலாம் என்று குரானில் சொல்லியிருக்கிறது என்றார். மகர் கொடுக்க முடியாதவன் அடிமைப் பெண்களை வைத்திருப்பானா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அதோடு அடிமைகளை வைத்திருப்பது பற்றிச் சொல்லும் போது குரானில் சொல்லியிருப்பது Guantánamo Bayல் உள்ள அடிமைத்தனத்தை விட மேல் என்றார்! அதாவது ஜெயிலில் மேற்கொள்ளப்படுவதை விட குரான் மேல்  என்றால் என்ன பொருள்? குரானுக்குப் போட்டி  போட ஒரு ராணுவ சிறை தான் கிடைத்ததா?!

 இக்காணொளியில் சொன்ன மேற்கோள்களைக்காண முயன்றேன்; முடியவில்லை. யாராவது உதவலாம்.


 *

Monday, July 11, 2016

896. UEFA - EURO 2016 -- FINAL








*



 “The level of threats has never been so high as today in regard to the Islamic State and other jihadists,” says Jean-Charles Brisard, chairman of the Paris-based Center for the Analysis of Terrorism. “So the timing is a real challenge for everyone.” 


*


July 11, 2016 – இன்றைக்கு முழுசும் வெறும் தூக்கம் மட்டும் தான். நேற்று ராத்திரி மூணு மூணறை மணி வரை உட்கார்ந்து இந்த வயசில் ஈரோ இறுதிப் போட்டியை உக்காந்து பாத்துக்கிட்டே இருந்தா …. பகல்ல தூக்கமாத்தான் வந்துகிட்டு இருக்கும். நடுவில் தங்க்ஸிடமிருந்து சில பல இடிகள் …’இந்த வயசுக்கு இது தேவையா …?’

விளையாட்டிற்கு முன்பே தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வந்த செய்தி எனக்குப் பின்னால் தான் தெரிந்தது. இப்படி ஓப்பனாக மிரட்டல் வந்தும் ஸ்டேடியம் முழுவதும் ஆள் நிரம்பியிருந்தது ஆச்சரியம் தான். பாவம் போனால் போகுதுன்னு விட்டு விட்டார்களோ?

ப்ரான்ஸ் அரையிறுதியில் luck played a major role அப்டின்னு தோன்றியது. முதல் பத்து நிமிடத்திலேயே பந்து முழுவதும் ஜெர்மனி வசமே இருந்தது. போற போக்கில ப்ரான்ஸ் ரெண்டு மூணாவது வாங்கிவிடும்னு நினச்சேன். ஆனால் முடிவு மாறி விட்டது.

நடுவில் ஒரு சின்னக் கோடு … luck அந்தப் பக்கமும் நிக்கலாம் …அல்லது இந்தப் பக்கமும் நிக்கலாம் அப்டின்ற பெரிய பிலாசபி உண்மையாகப் போச்சு.

நேற்றும் முதல்  பத்து நிமிட்த்திலேயே ஆட்டம் சூடு பிடிச்சது. பந்து முழுவதும் ப்ரான்ஸ்  வீரர்களின் காலில் தான்.
 9வது நிமிடம்: Greizmann – அவர் தான் ப்ரான்ஸின் ஹீரோ. அடிச்ச பந்து இருமுறை போர்ச்சுகல்லின் கோலைத் தொட்டுவிட்டுச் சென்றன.
 அடுத்த ஓரிரு நிமிடத்திலேயே ரொனால்டோவை foul செய்ததில் free kick கிடச்சிது. அந்த foul அப்படி ஒன்றும் பெரிய முரட்டுத் தனமான foul கிடையாது என்றே தோன்றியது. சின்ன மோதல். கால்பந்தில் இது சாதாரணம் தான். ஆனால் அடி பட்டு விட்டது போலும்.  முதலுதவி கிடைத்ததும் அடுத்து ஒரு 10 நிமிடம் விளையாடி விட்டு பின் முழங்காலைப் பிடித்துக் கொண்டார். ஸ்டெச்சரில்  வெளியேறினார்.







நான் ரொனால்டோவாக இருந்தால் ஒரு வேளை நானில்லாமல் என் டீம் ஜெயிக்கக்கூடாதுன்னு நினைப்பேனான்னு ஒரு சுய ஆய்வும் மண்டைக்குள் அப்போது ஓடியது. .



மனசுக்குள் இவர் போய்ட்டா போர்ச்சுகல் அவுட்டு தானோன்னும் தோன்றியது. அதுவும் பந்து இருப்பது முழுவதும் ப்ரான்ஸில் கால்களில் தான். சூடாகவே ஆட்டம் நடந்து கொண்டிருந்தது.





 65வது நிமிடம் … Greizmann அடித்த பந்து … நான் கோல் என்றே நினைத்தேன். ஆனால் அது கோலல்ல.
 மணி சரியாக இரவு இரண்டு மணி. அடுத்த ஆறாவது நிமிட்த்தில் ஒரு கார்னர் ஷாட் – ப்ரான்ஸிற்கு. Greizmann அடித்தது. இதுவும் கோல் என்பது போல் தோன்றி .. இல்லாமல் ஆனது. So near ...yet so far!

சான்ஸ்கள் ப்ரான்ஸ் பக்கம் நிறைய. தொடர்ந்து வந்தன. ஆனால் கோல் ஏதும் விழவில்லை.

 73வது நிமிடம். என் மனசுக்குள் ஒரு பட்சி சொன்னது: போற போக்கைப் பார்த்தால் நிச்சயம் ப்ரான்ஸ் கோல் வாங்கப் போகிறது. 

 74 நிமிடம் .. அடுத்த சான்ஸ்.
79 நிமிடம் .. 83 நிமிடம் இன்னும் இரண்டிரு வாய்ப்புகள். கோல் ஏதுமில்லை. 90வது நிமிடம் .. விசிலுக்கு இரு நிமிடங்கள் முன்பு .. போர்ச்சுகல்லின் மரியோ அடித்த அடி கோல் போஸ்ட்டின் - horizontal bar – பட்டு தெறித்துப் போனது.

 முழு நேரவிளையாட்டு முடிந்த பின் அரை மணி நேர விளையாட்டு ஆரம்பித்தது. இப்போது தான் பந்து இரு முனைகளுக்கும் மாறி மாறிச் சென்றன. மேலும் சூடு.
 94 வது நிமிடம் – போர்ச்சுகல் கோல் விழுந்தது என்று நினைத்தேன். அது ஒரு off side ஆனது.
 103 வது நிமிடம் – கார்னர் ஷாட். போர்ச்சுகல் அடித்து ப்ரான்ஸ் கோல் விழுந்து விட்டது என்றே நினைத்தேன். விளாயாடிய வீரர்களில் மோசமாக விளையாடியது ப்ரான்ஸின் கோல் கீப்பர் என்று தான் எனக்குத் தோன்றியது. 

சைட் பெஞ்சில் ப்ரான்ஸ் கோச் இரு கைகளில் தலையைப் புதைத்து, தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்.

107 வது நிமிடம். போர்ச்சுகல்லிற்கு ஒரு foul க்காக ஒரு free kick கிடைத்த்து. பந்து சரியாக vertical bar பட்டுப் போனது.

அப்போது மனசுக்குள் வந்த வாக்கியம் – “அட .. போங்க பாஸ்”!

108 போர்ச்சுகல்லின் எடர் அடித்து … ப்ரான்ஸிற்கு கோல் விழுந்தது.





மனதிற்குள் தோன்றியது – அப்பாடா … ! ஏன்னா… ப்ரான்ஸ் தோற்க வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. சொல்லப் போனால் மனசு ப்ரான்ஸிற்காகத்தான் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் … டென்ஷன் தாங்க முடியவில்லை. இதய நோய்க்காரர்கள் பார்க்கத் தகுந்த ஆட்டமல்ல நேற்று நடந்தது. முதலில் ப்ரான்ஸ் ஜெயிக்கும் என்பது போல் இருந்தது. பின்பு இறுதியில் மாறி மாறி வந்தது. 120 நிமிடமும் ஏறத்தாழ ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனோடு தான் ஆட்டம் நடந்தது.

அதோடு பெனல்டி அடித்து வெற்றி தோல்வி என்று மதிப்பிடுவது வழக்கமாக எனக்கு நிறைய ஏமாற்றமாக இருக்கும். அந்த நிலைக்குச் செல்லாமல் ஆடியே வெற்றி தோல்வி என்றானது கொஞ்சம் திருப்தி தான். போர்ச்சுகல்லின் நானா விளையாட்டு எனக்குப் பிடிக்கும். ஆனால் நேற்று அவரது ஆட்டம் கவரவில்லை.



***

நண்பர் வேகநரி: போர்ச்சுக்கல் ரொனால்டோவின் செயல்கள் நாடகதனமானவை என்று என்னுடன் போட்டி பார்த்த ஜரோப்பிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள் (குற்றம்சாட்டினார்கள்). நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். அதை பற்றி நீங்க என்ன நினைச்சீங்க என்பதை தெரிஞ்சு கொள்வதில் எனக்கு ஆவல். வசதிபடும் போடு தெரிவியுங்கோ.

ஒரே ஒரு இடத்தில் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஆட்டத்தில் நடுவிலும், ப்ரேக் சமயங்களிலும் விளையாட்டு வீரர்களைத் தட்டிக் கொடுப்பதும், தொடர்ந்து அவர்களுக்கு பெப் கொடுப்பதும் கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது.

அதோடு விளையாட்டு முடிந்த பின் காலில் knee cap போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். நடுவில் சில steps சாதாரணமாகப் போட்டுக் கொண்டு, திடீரென்று நினைவுக்கு வந்தது போல் சிறிது நொண்டியது போல் எனக்குத் தோன்றியது.

ஆனால் அடிபட்டு விழுந்ததும் அவர் கண்களில் வந்த கண்ணீர் உண்மையாகத்தானிருக்க வேண்டும். டாப் ப்ளேயராக இருந்து கொண்டு இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனால் … நிச்சயம் பெரும் வருத்தம் தான்


விளையாட்டு முடிந்ததும் நானேஒரு சுய பரிசோதனை செய்து கொண்டேன். இவ்வளவு த்ரில்லான, டென்ஷனான விளையாட்டை இவ்வளவு நேறம் உட்கார்ந்து பார்ப்பது கொஞ்சம் அதிகம் தானோ …? அதுவும் நடுவில் ஓரிரு இடத்தில் சிறிது எமோஷனலாகி நான் போட்ட ‘சின்ன’ சத்தம் தூங்கிக் கொண்டிருந்த  தங்க்ஸ் காது வரை போய் காலையில் அதற்கும் கொஞ்சம் ‘தூபம்” காட்டப்பட்டேன்.








*

Thursday, July 07, 2016

895. DOWN .. DOWN … FACEBOOK



*

என்ன ஆச்சு எனக்கு?

ரொம்ப நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது. திடீர்னு எப்படி ப்ரேக் விழுந்திச்சு. ஏதோ வாரத்துக்கு ஒண்ணோபத்து நாளைக்கு ஒண்ணோன்னு ஒரு பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ நாலஞ்சு பேர் பார்த்துட்டு, எப்பவாவது யாரோ ஒருத்தர் ஒரு பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்க  … நாளும்  கிழமையும் நல்லாதான் போய்க்கிட்டு இருந்திச்சு. இன்னைக்கா நேத்திக்காபதினோரு வருஷமா ஒரு மாதிரி இப்படி தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.

முதலில் கொஞ்சம் சுய புராணம். அடுத்து கொஞ்சம் மதுரை .. கொஞ்சம் சமூகம் அப்டின்னு போச்சு. அடுத்து மதங்களைப்பற்றி, இறைமறுப்பாளர்களின் புத்தகங்கள் என்று சூடாக் கொஞ்ச காலம் ஓடியது

புதியதாகத் தெரிந்த விஷயங்களை எழுதி முடித்ததும் இனி அடுத்தது எதை எழுதலாம்னு யோசிச்சிவேகம் குறைந்து போச்சு.

பெருமாள் முருகன் புத்தகம் வாசித்து எழுத குறிப்பெல்லாம் எடுத்து வைத்தேன். விட்டுப் போச்சு. அப்போ விழுந்த ப்ரேக் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்

தேர்தல் வந்தது. நிறைய எழுத நினைத்துஒன்றுமே எழுதாது விட்டு விட்டேன். தேர்தல் முடிந்த பின் ஒரே  சோகம்! அதையாவது எழுதலாமான்னு நினச்சேன். சோகத்தில் அப்படி இருந்தாச்சு.

நடுவில் வந்த விளையாட்டு பந்தயங்கள் – கால்பந்து & டென்னிஸ் – பற்றியெல்லாம் எழுத ஆசை தான். ஆனால் எழுதவேயில்லை.

நாடல் தோற்றது, வீனஸ் வில்லியம்ஸ் இன்னும் Steffi Graf recordயை முறியடிக்க முடியாமல் போகும் வருத்தம் பற்றியெல்லாம் எழுத ஆசை. எழுத நினைத்தேன். எழுதவேயில்லை.


அட… நேற்று இரவு இரண்டரை மணி வரை நடந்த அரையிறுதி ஈரோ கோப்பை கால்பந்து போட்டி – Portugal X Wales – பற்றி எழுதிடணும்னு நேற்று நினச்சேன். ஆனால் எழுதவில்லை. 

ஜிகாத் பத்தி தொடர்ந்து எழுதி வந்தேன் பல பாகங்களாக.  அது நிற்பது போல் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.   அதுவும் விட்டுப் போச்சு

மதங்களைப் பற்றி புதிதாக எழுத இன்னும் எந்த சமய நூலும் புதியதாக வாசிக்கவில்லை

சென்ற சென்னைப் புத்தக விழாவில் ஏசு பற்றி இரு புத்தகங்கள் வாங்கினேன், வாசித்து ஏதாவது எழுத முடிந்தால் எழுதணும்னு ஆசையை மனசுக்குள்ள வச்சிருக்கேன். எப்போ வாசித்து முடித்து …. எப்ப எழுதப் போகிறேனோ தெரியவில்லை.


என்ன தான் ஆச்சுன்னு யோசிச்சிப் பார்த்தேன்.

என்ன ஆச்சு …? சின்னத் தடைகள். அதில் சில ப்ரேக்குகள். எனக்கு ஒருவியாதிஉண்டு – procrastination. ஒரு வேலை செய்ய நினைப்பேன். ஆனால் வழக்கமாக அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பேன். எப்போ அதை நிஜமாகச் செய்வேனோ .. எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் வெளிச்சம்!!

இந்த லட்சணத்தில் எழுதாமல் விட்டதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டு விட்டது. அது ஒரு சைட் எபக்ட்!  

கணினியைத் திறந்தாமல் ஏதாவது எழுதலாமேவென தோன்றும் முன்பு. இப்போ இந்த சனியன் பிடித்த முகநூல்னு ஒண்ணு இருக்கேஅந்தப் பேய் ஆளை முழுசா இழுத்திருச்சு. கணினி திறந்தாச்சாமெயில் பார்த்தாச்சாஅடுத்து முகநூல் அப்டின்னு ஆகிப் போச்சு. ஒரு காலத்தில் கணினி திறந்ததும் அடுத்ததாகதமிழ்மணம்திறப்பது  வாடிக்கையாக இருந்ததுஇப்போ கணினி …மெயில்அடுத்து முகநூல். அடஅதப்பார்க்க ஆரம்பிச்சுநம்ம ப்ரேக் பிரச்சனை வந்ததும்  வெறுமனே முகநூலில் முங்கி முத்தெடுக்கஅட .. ஒரு பேச்சுக்கு சொன்னேன்முத்தெடுக்க முகநூலா வேணும்னு இப்ப நினச்சிப் பார்க்கிறேன். ஆக டைமெல்லாம் முகநூலிலேயே போயிருச்சி. நொண்டிக்கு ஒரு குச்சி கிடச்ச மாதிரி முகநூல் ஆகிப் போச்சு.

ஆனாலும் ஒரு சந்தேகம். நான் நொண்டியானதால் குச்சியே கதின்னு முகநூல் பக்கம் போய்ட்டேனாஇல்லகுச்சி கிடச்சதால நொண்டியாகி விட்டேனா?

தெரியலை.

இதைக் கண்டு பிடிக்க ஒண்ணு பண்ணப் போறேன். முகநூலுக்கு சில நிமிசம் மட்டும். அதன் பின் எப்போதும் திறப்பது போல் blogger.com போயிர்ரதுன்னும் முடிவு பண்ணியிருக்கிறேன்.

ஆயிரம் சொல்லுங்க … blog எழுதி காலா காலத்துக்கும் நாமளாவது அதைப் பார்த்துகிட்டு இருக்கிறதில்ல உள்ள சுகம், சந்தோஷம்,  மகிழ்ச்சி முகநூலைப் பார்க்கிறதில கிடைக்கிறதில்லை. அதுனால் முகநூலை கொஞ்சம் ஓரத்தில் தள்ளி வைத்து விட்டு …. blogger.comக்குப் போயிர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

என்ன ஆகுதுன்னு பார்ப்போம் ….

பக்கத்து வீட்டு பாய் ரம்ஜானுக்குக் கொடுத்தனுப்பிய  பிரியாணி & தாள்ஸா சாப்பிட்ட ஜோர்ல சொல்றேன் – இன்னும் முன்பு மாதிரி எழுதுறேனான்னு பார்க்கணும்.

ஈத் முபாரக்.










*