Wednesday, August 17, 2016

905. சினிமாவுக்குப் போன சின்னப் பையன்





*

'திண்ணையில உட்காரச் சொன்னா கெடக்கி இரண்டு ஆடு கேட்பானாம்' அப்டின்னு ஒரு பழமொழி உண்டு அல்லவா? நம்ம கேசும் அதே தான். இதுவரைக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு வசதியான அறை. ஏற்கெனவே சொன்னது போல் இது வரை பார்க்காத மேசை, நாற்காலி வசதி, தலைக்குமேல் சுற்றும் விசிறி … இப்படி எல்லா வசதியும் கிடைத்தது.இத்தனை வசதிக்கு நல்லா படிக்கிற ஒரு நல்ல பையனுக்குக் கிடச்சிருந்தா .. .. படிப்பில பின்னியிருந்திருப்பான்.

நான் இந்த அறைக்கு வந்த பின் என் சீனியர் ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டார். அவர் ரொம்ப நல்லவரு. அதிகம் பேசமாட்டார். அவர் வீட்டில் ஐந்து பிள்ளைகளாம். இவர் தான் மூத்தவர். இவர் மட்டும் படிப்பில் மட்டம். மற்ற பிள்ளைகள் எல்லோரும் மகா சுட்டிகளாம். வீட்டில் இதனால் இவருக்கு ‘திகுடு ..முகுடா’ நிறைய கிடைக்கும் போலும். ஆகவே இப்படியாவது படிப்போம் என்று சாமியாரிடம் கேட்டு சேர்ந்து கொண்டார்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல.

இப்படியெல்லாம் ஏறிக் குதித்து, டீ & தம் அடித்து அதோடு சேர்த்து ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ கொஞ்சம் படிக்கவும் செய்வேன். இதுக்கும் மேலே இன்னொரு சோதனையும் சேர்ந்து கொண்டது. பள்ளிப்படிப்பு முடியும் வரை வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத் தனமாக சினிமா ஏதும் பார்த்த்தில்லை. கல்லூரி வந்த பிறகும் இதே மாதிரி ‘நல்ல பிள்ளை’யாகத்தானிருந்தேன். வீட்டிலும் ‘படிக்கப்’ போனாலும் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து விட வேண்டுமென்ற கண்டிப்பு உண்டு. சினிமாவிற்குப் போக வேண்டுமெனில் வீட்டிலிருந்து 6 மணிக்கு முன்பே புறப்படணும் … படம் முடிந்து வீட்டுக்கு எவ்வளவு வேகமாக சைக்கிளில் வந்தாலும் ஒன்பதரையைத் தாண்டி விடும்.

இந்தப் பிரச்சனையை நண்பன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு ‘ஞானோதயம்’! ஆங்கில சினிமாவின் நல்லதும் கெட்டதும் அப்டின்னு ஒரு பிரசங்கம் கொடுத்தான். அப்போதெல்லாம் ஆங்கிலப்படம் என்றால் ரீகல் தியேட்டர் மட்டும் தான். நியூஸ் போட்டு 7 அல்லது ஏழே கால் மணிக்குப் பிறகு தான் மெயின் படம் ஆரம்பிக்கும். எப்படியும் எட்டேமுக்காலுக்குள் படம் முடிந்து விடும். என் வீட்டுக்கும் தியேட்டருக்கும் அந்தக் காலத்தில் 10 நிமிஷத்தில் விரட்டிப் போய்ச் சேர்ந்து விடலாம். இப்படி ஒரு ஐடியா கொடுத்தான். எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஒன்றிரண்டு ஆங்கிலப் படம் பார்த்த போது வர்ர ஆளுக மூஞ்சியெல்லாம் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆக, போன சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல தலையைக் காட்டுவான். இந்தக் குழப்பம் வேற இருந்தது. அதெல்லாம் பார்க்க சரியாகி விடும் என்றான் நண்பன்.

அதோடு நிற்காமல் ஒரு படம் இப்போ ஓடுது. கட்டாயம் பார்த்து விடு என்றான். நானும் முதன் முதல்ல ஒரு ஆங்கிலப் படம் வீட்டுக்குத் தெரியாமல் ரீகல் தியேட்டருக்குப் போனேன். இந்த தியேட்டரில் அந்தக் காலத்தில் படம் பார்ப்பதே ஒரு பெரிய experience. நிறைய ஆச்சரியங்கள் அங்கிருக்கும். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே கொஞ்சம் போய்ப் பாருங்களேன்.  Rank Organization… Norman Wisdom நடித்த On The Beat  என்ற படம் தான் வீட்டுக்குத் தெரியாமல் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம்.




பார்த்த்துமே ‘பச்சக்’குன்னு படம் பிடிச்சிப் போச்சு … என்னா காமெடி .. நாகேஷ் காதலிக்க நேரமில்லை படத்தில் தன் மேசையில் இன்னொரு பெரிய ஹாலிவுட் காமெடி நடிகரான Jerry Lewis பட்த்தை மட்டும் தான் வைத்திருப்பார். ஆனால் அவரின் நடிப்பில் Norman Wisdom சாயல் நிறையவே இருக்கும். A stitch in time என்று நினைக்கிறேன். Norman Wisdom நர்ஸாக நடித்திருப்பார். நாகேஷின் நீர்க்குமிழி படம் என்றும் நினைக்கிறேன். ஏறத்தாழ அதே கதை… ஒரு சிறு குழந்தையோடு – குட்டி பத்மினி? ரொம்ப ஒற்றுமையாக இருக்கும். 

அடேயப்பா … On The Beat ஆங்கிலப் படம் பார்த்ததே முதல் பெரிய வெற்றி. நல்ல ஆரம்பம். படம் பிடித்துப் போய் அப்பாவுடன் அடுத்த நாள் மதிய சாப்பாடு சாப்பிடும் போது ஒரு நல்ல சீன் நினைவுக்கு வந்து நான் சிரிக்க … அப்பா என்ன என்று கேட்டதும் எதையோ ஒரு பொய் சொல்லிச் சமாளித்ததும் நினைவுக்கு வருகிறது. முதல் வெற்றிக்குப் பிறகு அடிக்கடி ரீகல் போவது பழக்கமாகி விட்டது.

இப்போது தமிழ்ப்படம் ஓடுவது போல் அப்போது ஆங்கிலப்படங்கள் ஓடின. அதாவது இப்போதெல்லாம் தமிழ்ப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும். அடுத்த திங்கட்கிழமை அதே படம் ஓடுமா என்பது நிச்சயமில்லை. இது மாதிரி அந்தக் காலத்தில் வெள்ளி வரும் ஆங்கிலப் படம் ஒரு வாரப் படமாக இருக்கலாம். அல்லது இரு நாட்களுக்கோ மூன்று நாட்களுக்கோ ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஆங்கிலப்படம் ஓடுவது கிடையாது. ஆக வாரத்தில் எப்படியும் ஒரு படமாவது பார்த்திடலாம்.

 கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலப்படம் பார்ப்பது மாமூல் விஷயமாகிப் போனது. காமெடி பட்த்தில் ஆரம்பமாகி, war படம் அது இதுன்னு வளர்ந்து போச்சு.

படிப்பு ஒரு ஓரமா ஒதுங்கி நடந்து வந்தது.




*

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அந்த நாள் நினைவுகளை நினைவுகூர்ந்த விதம் அருமை. எங்களின் கல்லூரி நாட்களை நினைவுபடுத்தின உங்களது பதிவு. நாங்கள் அவ்வாறாக பார்த்த முதல் படம் அபூர்வ ராகங்கள்.

”தளிர் சுரேஷ்” said...

நினைவுப் பகிர்வு சிறப்பு! நன்றி!

நம்பள்கி said...

Carry on...series i.e., carry on doc, carry on cleo, all westerns, 75 -ல் தேவி காம்ப்ளெக்ஸ் கட்டியபோது, Mackenna's Gold முதல் படம், Night of General, lawrence of Arabia; Tony curtis, மற்றும் பல கிளு படங்கள். இப்படி வாரத்திற்கு ஒன்று.

தருமி said...

சொன்னது எல்லாமே நல்ல படங்களாச்சே … எங்கே கிளு ..கிளு … ?

G.M Balasubramaniam said...

நான் பெங்களூரில் அறை எடுத்துத் தங்கி இருந்தபோது அப்பா வேலை மாற்றலாகிவந்திருந்தார் என்னுடன் அறையில் தங்கினார் சௌகரியங்கள் ஏதும் இல்லாத அறை. என் திருப்திக்காகத் தங்கினார். அப்போது அவரை நான் ஒரு ஆங்கிலப் படத்டுக்கு அழைத்துச் சென்றேன் danny kaye இன் COURT JESTER அப்பா படத்தை ரசித்தது திருப்தியாய் இருந்தது பெரும்பாலான நேரங்களில் ஆங்கிலப் படம் பார்ப்பது படம் பார்த்துக் கதை சொல்வது போல்தான்

தருமி said...

// படம் பார்த்துக் கதை சொல்வது போல்தான்//

psycho படம் பார்த்து கதை சொன்னவர்களின் ”கதைகள்” மிக அதிகம். அதில் கடைசி சீனில் கதாநாயகனின் கையில் ஒரு ஈ உட்கார்ந்திருக்கும். அடே ... அதற்குத் தான் எத்தனை வகை வகையான interpretations!!!

நம்பள்கி said...

நான் சொல்ல வந்தது:
Tony Curtis படங்கள்...
Marcello Mastroianni...
இவர்களின் முக்கால்வாசி கிளு கிளு படங்கள்!
அந்த அந்த நாடுகளின் Casanova! நம்ம சாம்பார் மாதிரி!

சரியாக அந்த பின்னூட்டம் எழுதவில்லை. அவசரம்!

vijay said...

வணக்கம் ஐயா
எனது கல்லூரி நாட்களில் பார்த்த சோபியா லாவ்ரான்ஸ் நடித்த moutin in tha jungle, sevaenightinjapan போன்ற ஆங்கில படங்களும், மூன்று முடிச்சு,நிறம் மாறாதப்பூக்கள் போன்ற படங்களும் நினைவில் நிழலாடுகின்றன.

Post a Comment