Friday, June 09, 2017

943. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்





*


 தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் இப்போது பாவம் போல் ஒரு “சாமான்யரை” உட்கார வைத்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தொலைக்காட்சிக்கு நண்பர்களோ? சாமான்யராகக் கூட பேச மாட்டேன் என்கிறார்களே!

மூன்று இலை பற்றி ஒரு விவாதம். ஆளுக்கொன்று, நேரத்திற்கொன்று என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். புகழேந்தி, சம்பத் வந்தால் அந்தப் பக்கம் போவதில் அர்த்தமேயில்லை. இன்னொருவர் நல்ல குண்டு; தியாகத் தாய் பக்கம் நின்று வாதிடுவார். வாந்தி வரும். இது போல் தான் எல்லோரும்.


நமக்கென்ன … என்ன நடக்கிறதென்று தெரியாதா? இன்னும் 4 வருஷத்துக்கு ஓட்டு வாங்கிய உரிமை இருக்கிறது. செத்துப் போன பெண் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பதை வழமையாக்கி தன் காலடி ஆட்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு போய் விட்டார். ராசியான பெண்….. சரியான நேரத்தில் செத்து, ஜெயிலைத் தவிர்த்த லாவண்யம் அழகு.


இதனால் அந்தக் கட்சி ஆட்களில் இரண்டு வகை: ஏற்கெனவே சம்பாதித்த ஆட்கள்; இனியாவது சம்பாதிக்கலாமே என்று கல்லா கட்டி உட்கார்ந்திருக்கும் இன்னொரு செட் ஆட்கள். முதல் வகையறா கையில் இருப்பதைக் காக்க வேண்டுமே என்ற கவலை. இரண்டாவது வகையறா இன்னொரு சான்ஸ் எப்படியாவது வந்து விடாதா என்று கன்னத்தில் கைவத்து உட்கார்ந்திருக்கிறது.

இந்த தொலைக்காட்சி நடத்துனர்கள் ஏதாவது பேசி ஒரு ப்ரேக் செய்தி போட்டு டி ஆர் பி ஏத்துவதை மட்டுமே பிரதானமாக வைத்து ஜவ்வு மிட்டாய் வியாபாரம் செய்கிறார்கள். பிசினசும் நல்லாவே போகுது.

அட …. வர்ர சாமான்யர்களாவது, இங்கு நடப்பது அரசியல் அல்ல; வியாபாரம். யார் மீதி நாளுக்கு கல்லாப்பெட்டியில் உட்கார தான் இந்தப் போட்டி. யாராவது மக்கள் சேவைன்னு தயவு செய்து சொல்லாதீங்க. எல்லா மக்களுக்கும் தெரியும் நீங்கள் காசு பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று. பிறகு எதற்கு வெட்டிப் பேச்சு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தொலைக்காட்சியில் அர்த்தமில்லாத ‘அரட்டைகள்’ மட்டும் நடக்கிறது.


இதெல்லாம் எதற்கு? என்று யாராவது ஒரு சாமான்யர் கேட்டால் நன்றாக இருக்குமோ?







*

Sunday, June 04, 2017

942. நீயா நானா? - கரு. பழனியப்பனுக்கு ஒரு ஜே!





*





*



(4.6.17) நீயா நானா? பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. உடனே இதை எழுத ஓடி வந்தேன்.

பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்வது பற்றிய ஒரு கருத்துரையாடல். இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் பரவலாக உள்ள இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் இல்லாது இருந்து, இப்போது சிறிதாக இங்கேயும் தலைகாட்ட ஆரம்பித்துள்ள இந்த பழக்கத்தைப் பற்றிய கருத்தாடல்.

தங்கள் உயர்சாதித் தன்மையைக் காண்பிக்கவே இந்த வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். சாதியைப் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் குழுவினருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றே  நினைக்கின்றேன். பேசியது அர்த்தமில்லாத உளரல்களாக இருந்தன.க்ளோபல் பள்ளியில் தன் பிள்ளையைப் படிக்க வைக்கும் அந்த தகப்பன் (அந்த ஆள் என்ன சாதி என்று தெரியவில்லை!) தன் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு சாதியைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டாராம். பிள்ளைக்கு பிறந்ததுமே சாதிப் பெயரை வைத்து விட்டாராம். பாவம் .. கல்வி இவருக்கு எவ்வளவு கத்துக் கொடுத்து விட்டது!

சாதிப் பெயர் போடுவது தவறு என்று மூன்று இளைஞர்கள் மிக நன்றாகப் பேசினார்கள். மதுரைப் பையன் பாண்டியன் அழகாகப் பேசி, 50 ஆயிரம் ரூபாயைப் பரிசாகவும் பெற்றான்.

சிறப்பு விருந்தினர்கள் வந்தார்கள். பாவம் ஒரு நாயர் பெண். அது போகட்டும். இன்னொருவர் கரு. பழனியப்பன். எந்த சிறப்பு விருந்தினர்களும் இவ்வளவு குறைவாகப் பேசி இத்தனை பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததை  இதுவரை எந்த மேடையிலும் பார்த்ததில்லை.

இது பெரியார் மண் என்றார். கவுண்டர் தோட்டம், வன்னியர் தோட்டம் என்றெல்லாம் கோயம்புத்தூர் பக்கம் சாதாரணமாக சொல்வார்கள் என்று ஒருவர் பேசியிருந்தார். பழனியப்பன் கேட்டார்: “ஏன் அங்கே ஒரு சக்கிலியர் தோட்டம் என்று ஒன்றுமில்லை?”  இங்கே பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் என்ற வேற்றுமைதான் அதிகமாக இருக்கிறது. சாப்பிடப் போகும் முன் எதிரில் இருப்பவனைப் பார்த்து சாப்பிட்டு விட்டாயா என்று கேட்பது மரபு. பசித்தவனை எதிரில் வைத்து நாம் சாப்பிடுவது தவறு. நீ உன் சாதிப் பெயரைப் போடுவது அடுத்த (தாழ்ந்த) சாதிக்காரனுக்கு வலிக்கும் என்றார்.

சாதிப்பெயரைப் போட்ட ஒருவர் தான் செய்தது தவறுதான் என்றார். பழனியப்பன் தன் பக்கத்தில், எதிர்க்கட்சி பக்கம் அவரை உட்கார அழைத்தார். இதே போல் இன்னும் யார் யார் நினைக்கிறீர்களோ அவர்கள் இந்தப் பக்கம் வாருங்கள் என்றார் கோபி. படபடவென்று ஐந்தாறு பேரைத்தவிர அனைவரும் இப்பக்கம் வந்து விட்டனர்.


பெரியார் மீண்டும், இன்றும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாயிற்று.


அந்த க்ளோபல் பள்ளிப் பெருந்தகை இருந்தாரே அவருக்குக் கொஞ்சமாவது ரோஷம் அது இது என்றிருந்தால் அவர் தன் பையனை எடுத்து அவர் சாதியினர் நடத்தும் பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்படியெல்லாம் தோன்றும் அளவிற்கா அவருக்கு மசாலா இருக்கப் போகிறது! பழனியப்பன் கொடுத்த சாட்டையடி அவருக்கு வலிக்கும் அளவிற்கு அவரது தோல் அவ்வளவு மெல்லியதல்ல என்றே நினைக்கின்றேன்.


கரு. பழனியப்பனுக்கு ஒரு ஜே!


முதல் ஆளாக கட்சி மாறிய அந்த நல்ல மனிதருக்கும் ஒரு ஜே!

*

Friday, June 02, 2017

941. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்







*




 தருமி கேக்குறது தருமிக்கு நியாயமா இருக்கு. ஆனால் நீங்க என்ன சொல்லுவீங்களோ தெரியவில்லை.

தப்புன்னா திருத்துங்க. திருத்திக்கிறேன் …… திருந்திக்கிறேன்.


 1. அரசு போடுற சட்டம் ஒழுங்கானதாக, நடைமுறைக்குத் தோதாக இருக்கவேண்டும்.
மக்கள் கட்டாயம் அதைப் பின்பற்ற வேண்டும்; பின்பற்ற வைக்கப்பட வேண்டும்.
பின்பற்றாதவர்களை சட்டம் கண்ணை மூடிக்கொண்டு தண்டிக்க வேண்டும்.
இது தானே சரி.

 ஏன் நம்ம நாட்ல மட்டும் இல்லாத கோணங்கித்தனம்?!

 2. முதலில் சொல்லியபடிதானே ”நீதியரசர்கள்” (இப்படி சொல்ல வெட்கமாக இருக்கிறது!) நடந்தாக வேண்டும். பின் எப்படி நீதிக்குப் புறம்பாக stay கொடுக்க வேண்டும்?

நாலு மாடின்னா நாலுதான். மேலே வந்தால் இடி.

 இதைத் தவிர வேறு எது சரியான தீர்ப்பாக முடியும்?

(பழைய பதிவும் பின்னூட்டமும் நினைவுக்கு வந்தது: pleasant stay hotel விவகாரத்தில் அனுமதியின்றி அதிகப்படியாக ஒரு மாடி (floor) கட்டியிருப்பதாக ருசுப்படுத்தப்பட்டு, அதனால் கோர்ட் ஒரு மாடியை இடிக்க வேண்டுமென்று தீர்ப்பு வருகிறது. அதற்கு அடுத்த வந்த கேஸ் நினைவிருக்கிறதா? அப்படி இடிக்கவேண்டுமானால் எந்த மாடியை இடிக்க வேண்டும் என்று ஒரு மனு. வேடிக்கையாயில்லை - வழக்கை இழுத்தடிக்க இப்படி ஒரு யோசனை.

 எனக்கு ஒரு ஆசை - நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் - அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று. ) 

3. ”நீதியரசர்கள்”தான் இப்படி என்றால் நம் வழக்கறிஞர்கள் (இப்படி சொல்லவும் வெட்கமாக இருக்கிறது!) எப்படி ஏழு மாடிக்கு காசு வாங்கிக்கொண்டு வழக்காடலாம்? வழக்காடுவதால் நியாயங்கள் கொலை செய்யப்படலாமா?

(வழக்குரைஞர்களின் வேலைதான் என்ன? 2+2 = 4 என்று சொல்லலாம். … ஆனால் 2+2 = 6 என்றும் (காசு வாங்கிக் கொண்டால்) சொல்ல முடியுமா?)

4. நல்ல அதிகாரிகள் சிலர் ஒழுங்கு மீறிய கட்டிடங்களைத் திறக்க அனுமதிப்பதில்லை. எங்கள் வீட்டுக்கருகில் ஒரு பெரிய மளிகை. வண்டிகள் நிறுத்த இடம் விடவில்லை. அதிகாரி தடுத்தார். அவர் பதவி மாறினார். கடை திறந்து விட்டது. ஜோலி முடிந்தது. பாவம் அந்த அதிகாரி.

(நானெல்லாம் அப்படி ஒரு அதிகாரியாக இருந்திருந்தால் வயத்தெரிச்சலிலேயே சின்ன வயசிலேயே போய் சேர்ந்திருப்பேன்!)

இப்போது ஆற்றுக்கு வெகு அருகில் ஒரு பெரிய கட்டிடம் பாலத்தை ஒட்டி. அதிகாரி தடுத்திருக்கிறார். கட்டிடம் இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. என்று திறக்கப்படுமோ எந்த ஊழல் அதிகாரியால் என்று தெரியவில்லை.

என்ன சட்டமோ … என்ன நீதியோ? என்ன வழக்குரைஞர்களோ?/ வழக்கறிஞர்களோ? என்ன வழக்குகளோ?

ஒண்ணும் புரியலைங்க ……

*

நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிய பதிவு ஒன்று நன்றாக இருந்தது. வாசித்துப் பாருங்களேன் ….




 *